சிவராஜ பாதம்

#மஹாசிவராத்திரி2020


இமயத்தின் வழியெங்கும் நடைகண்ட பாதம்
   இறைநேசர் புகழ்காண மண்வந்த பாதம் 
உமையம்மைக் கொருபாதி மணிகொண்ட பாதம் 
    உலகத்து முனிவர்க்கு நடுவான பாதம் 
சமர்கண்டு ராக்கதரை மிதிக்கின்ற பாதம் 
    சாமகாணம்கேட்டு நடிக்கின்ற பாதம் 
தமிழ்தந்த உயர்த்தெய்வம் சிவராஜ பாதம் 
    சரணமது சரணமெனும் தருணமது போதும்! 

அழுதேங்கும் அடியார்க்குத் தாயாகும் பாதம் 
   ஆறுகரை மூடிவிட மண்தொட்ட பாதம் 
மழுவோடும் மானோடும் அமர்கின்ற பாதம் 
   மழைபோன்ற கருணையினைத் தருமன்புப் பாதம் 
நிழலாகத் தொடர்கின்ற நிஜமான பாதம் 
   நீண்டுவரும் பிறவிகளை நீக்குகிற பாதம் 
தழலாகும் புனலாகும் சிவராஜ பாதம் 
    சரணமது சரணமெனும் தருணமது போதும்!  

விடம்கண்டு பாற்கடலில் நடையிட்ட பாதம் 
   விளையாடல் பலசெய்ய விழைகின்ற பாதம் 
இடமெங்கும் களியாட்டம் இடுகின்ற பாதம் 
   இல்லாமை போக்கிவிட அருள்கின்ற பாதம் 
தடங்கண்ட அருளாளர் தொடர்கின்ற பாதம் 
   சருக்கிவிழும் மலமூன்ற நொறுக்கிவிடும் பாதம் 
சடைராஜன் மகராஜன் சிவராஜ பாதம் 
    சரணமது சரணமெனும் தருணமது போதும்! 

நந்திக்கு மேலேறி குந்துகிற பாதம் 
   நல்லோர்கள் நெஞ்சத்தில் வந்துதிக்கும் பாதம் 
சந்தடியில் சந்நிதியில் தெரிகின்ற பாதம் 
   தத்துவக் குருவடிவில் உணர்கின்ற பாதம் 
முந்தைக்கும் முந்தையிங்கு வந்திட்ட பாதம் 
   முப்போதும் உலகாட்டம் ஆட்டுகிற பாதம் 
தந்தையென அன்புதரும் சிவராஜ பாதம் 
    சரணமது சரணமெனும் தருணமது போதும்! 
   
ஈசனவ னடிபோற்றி எந்தையடி போற்றி 
   ஈரேழு புவனங்கள் நின்றவடி போற்றி 
நேசடி போற்றி!சிவன் சேவடிகள் போற்றி 
   நேயத்தில் நின்றதிரும் நிமலடி போற்றி 
பூசையொடு பக்தர்மனம் ஏற்குமடி போற்றி
   புண்ணியம் தருமெங்கள் புனிதனடி போற்றி 
பூசுதிரு நீறுமணம் கமழுமடி போற்றி
   போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி!! 

-விவேக்பாரதி 
21.02.2020 
   

Comments

Popular Posts