தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு


தஞ்சை பெருவுடையார் கோயிலைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குடமுழுக்கு ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஊரே சலவை செய்து வெளுக்க வைத்த வண்ணமாய் தஞ்சை மின்னிக் கொண்டிருந்தது. உலக மக்களின் மனங்களில் நீங்காத ஆச்சர்யத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தமிழரின் அற்புதங்களில் ஒன்றான பெரியகோயில் கும்பாபிஷேக விழா, தஞ்சா வூர் மொத்தத்தையும் திருவிழாக் கோலம் ஆக்கி யிருந்தது. இத்தனை என்று எண்ணமுடியாத அளவு பலகட்ட பாதுகாப்புகள் காவல் துறையினரால் அமைக்கப்பட்டிருந்தது. 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட கோபுரங்கள் மீண்டும் பளிச்சிடப்பட்டு, செம்மை நிறத்தில் தகதகவென ஜொலித்தன. கோயிலுக்குள் நுழையும்போதே ஆண்கள், பெண்கள் என்று இரண்டு பிரிவிலும் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. வாயிலைக் கடந்து உள்ளே  நுழைந்ததும் வலதுபுறம், ஆளுயரத்துக்குப் பெரிய கோயிலின் மாதிரி வடிவமைப்பு பச்சைப் பசும்புற்களின் பின்னணியில் பிரம்மாண்டத்தின் டிரெய்லரைக் காட்டியது. 

அதையும் தாண்டி நுழைந்ததில், வேத கோஷங்களும், தமிழ்த் திருமுறைகளும் ஒலித்தன. வலது பக்கம் யாகசாலை. நேராக கோயிலுக்குள் நந்தி சந்நிதிக்குக் கீழே பச்சைக் கம்பளத்தி நடன நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள். நந்தி சந்நிதிக்கு வலதுபுறம் இருக்கும் நடராஜர் சந்நிதியில் சமயக் குரவர்கள் நால்வரின் கட்அவுட்களுடன் ஓதுவார் கச்சேரி தொடர்ந்து நடைபெற்றது. கைத் தாளம் போட்டபடி பல வெளிநாட்டினர் தமிழிசையை ரசித்துக் கொண்டிருந்தனர். 

வெளியே யாக சாலையில், பிரதானமாக இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட்டு அதில் பெருவுடையாரும் பெரிய நாயகி அம்மனும் கலச வடிவில் வடிக்கப்பட் டிருந்தனர். அவர்களுடன் சேர்த்து முப்பத்து முக்கோடி தேவர்களின் பிரதிநிதிகளாக சிலைகள் வடிக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் பூஜைகள் செய்யப்பட்டன. அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் தள அடுக்குகளில் நிகழ, அதற்கு நேர் எதிர்ப்புரம் இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டு ஒருபுறம் வடமொழி வேதம் ஓதும் சிவாச்சாரியார்கள் குழுவும், மறுபுறம் தமிழ்த் திருமுறை ஓதும் ஓதுவார்களின் குழுவும் மாற்றி மாற்றி சிவனைத் தமிழிலும் வடமொழியிலும் துதித்திருந்தனர். 

ஊருக்குள் பொது சுவர்களிலும், பள்ளி, கல்லூரி வளாகங்களின் வெளிப்புறச் சுவர்களிலும் சுந்தர சோழனும், குந்தவை நாச்சியாரும் மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும் கதாபாத்திரங்களும் ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்களைப் போன்ற பொலிவுடன், தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி மாணவர் களால் வரையப்பட்டிருந்தன.
 
வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியனையும், குந்தவையையும், நந்தினியையும், பெரிய, சிறிய பழுவேட்டரையர்களையும், ஆதித்த கரிகாலனையும், அருள்மொழிவர்மனையும் பார்த்து ஒரு ஹலோ  சொல்லத் தோன்றியது.

இடதுபக்கம் காவிரி பெருக்கெடுத்து ஓடும் கால்வாய் இருக்க, மறுபக்கம் மக்கள் வெள்ளம் பக்தியோடு பெருக்கெடுத்து ஓடுவதை ராஜராஜ சோழன் பார்த்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பான் என்ற எண்ணம் எழுந்தது.

அப்படியே கோயிலுக்குள் நடந்து சென்ற சில மணித்துளிகளில் உதிர்ந்த வெண்பாக்கள்! 

எந்த மொழியானால் என்ன? இறையவனைச் 
சிந்தை நினைத்தாலே சொர்க்கம்தான் - இந்த
நிறைவாச கத்தில் நினைவின்றிப் போயின் 
மறையோதி என்ன மகிழ்ந்து? 

சிவனேற்றான் கல்லைச் சிவனேற்றான் ஊனைச் 
சிவனேற்றான் வேடுவன்வாய்ச் சொல்லைச் - சிவனேற்கச் 
பத்திதான் வேண்டும்! பகட்டில்லை! மேதினியீர் 
புத்தியுள் வைப்போம் புரிந்து! 

தஞ்சைக் கிறைவன் தமிழும் வடமொழியும் 
கொஞ்சி ரசித்தே கொலுவிருப்பான் - நெஞ்சில்
இறைவந்தால் இந்த நிறைவரும்! மீறிக் 
குறைவந்தால் திண்டாட்டம் கூத்து! 

பெருமை அவன்மேல் பெருகிவரும் பத்தி,
அருமையவன் கோயில் அமைப்பு, - ஒருமை 
பலவாகி நிற்கும் பகவனுக் குள்ளே 
சிலதான்நாம் செப்பும் மொழி!!

அப்படியாக தஞ்சை பயணம் முடிந்து சென்னை திரும்புகையில் கவிஞர் ஜெயதேவன் எழுதியிருக்கும் "ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல" கவிதைத் தொகுப்பில் அவர் எழுதியிருக்கும் ஒரு கவிதை என்னுடைய கவிதையின் மறுபிரதிபலிப்பாக இருந்தது கண்டு புன்னகைத்துக் கொண்டேன். இதோ அந்தக் கவிதை.

-விவேக்பாரதி
03.02.2020

Comments

Popular Posts