சென்னையில் விவேகானந்தர் - வந்தால் இன்று


இராமகிருஷ்ணர் போற்றி

காளிக்கொரு செல்லப் பிள்ளை
கனல்கொண்ட துளசித் தீர்த்தம்
வேளைதவ றாமால் வேத
விளக்கத்தில் நாட்டம் கொண்டு,
நாளெல்லாம் யோகம் செய்த
நமதுகுரு ராம க்ருஷ்ணர்
தாளிரண்டை நெஞ்சில் பற்றித்
தமிழ்க்கவிதை தொடங்கு கின்றேன்!

இத்தனை நாளாய் நீயும்
எங்கிருந் தாயென் செல்வ!
உத்தமி காளி என்னை
உனக்கெனப் படைத்தா ளென்று
மெத்தநம் குரும கிழ்ந்து
மெச்சிய விவேகா னந்தர்
சத்தியத் தாள்கள் போற்றி
சருகுநான் பேசு கின்றேன்!

தலைமை வணக்கம்

குருவாக வந்தென்னைக் குவலயத்தோர் வாழ்த்தக்
            குன்றின்மேல் வைத்த தவமே
குறையோ டிருந்தவெனைக் குறியோ டியங்கிவரக்
கூர்மை கொடுத்த தயவே!
உருவாகி என்னைநான் வடிவாக்க வானத்தின்
            உமையாள் அளித்த படியே
உண்மையே உள்ளத்தின் வெண்மையே! நெஞ்சத்தில்
            உறுதியைத் தந்த துணையே!
வரியாய் இருந்தவெனைக் வளமான பாடலாய்
            வாழ்விக்க வந்த கவியே
வள்ளலே மிகவாழ்ந்த உள்ளமே! என்சொல்லில்
            வளமை பயந்த தமிழே
பரிவோடு நான்செல்லும் பாதைக்கு முதல்போட்ட
            பாவலர் போற்றும் மணியே
பாடலே வாழ்க்கையென வாழ்கின்ற இச்சிறுவன்
            பணியும் இலந்தை குருவே!

விவேகானந்த நவராத்திரி 

விவேகானந்த நவ ராத்திரி - இது
வியப்புமிக்க சென்னைநவ ராத்திரி!
தவமுடைய மக்கள்நவ ராத்திரி! - இதன்
தலைவனவன் ஆன்மிகத்தின் பூத்திரி!

அவன்நடந்த மண்ணிலிங்கு நிற்கிறோம் - நம்
அண்ணல்கொண்ட காற்றைச் சுவைக்கிறோம்!
கவிஞர்பற்றிக் கவிதைகளைச் சொல்கிறோம்! - அவன்
காட்டிவிட்ட பாதைவழி செல்கிறோம்!

நீங்கள்தட்டும் கைத்தட்டல் யாவையும் - அவன்
நின்றுதட்டும் தட்டலென்று கொள்கிறோம்!
பூங்கவிதை கடற்காற்றில் வீசிடும்! - உள்ளே
புகுந்துபல சத்தியங்கள் பேசிடும்!

சென்னையில் விவேகானந்தர் - வந்தால் இன்று

சோம்பலெனும் இருள்மண்டிக் கிடந்த காலம்
        சோகமெனும் பனிபோர்த்துப் படர்ந்த காலம்
தேம்பலெனும் ஓலமட்டும் இழைந்த காலம்
        தேசமெல்லாம் தூசுபடிந் திருண்ட காலம்
ஆம்பலிலே ஒளிதெறிக்கும் திங்க ளன்ன
        அக்கினிப் பிழம்புகக்கும் ஞாயி றன்ன
தாம்புவியில் பிறந்துவந்தான் இறைவன்! நல்ல
        தத்தர்களின் வம்சத்தில் நரேந்த்ர தத்தன்!

சிந்தியாத மக்களெல்லாம் பிறநாட் டுள்ள
        சிறுசிறிய விஷயங்கள் எல்லாம் பார்த்து
இந்தியாவின் உண்மைநிலை மறந்து விட்ட
        இதயத்தார் ஆயிருந்தார்! இதனைத் தீர்க்க
வந்தியார்தான் வழிகாட்டி விடுவா ரென்று
        வழிவழியாய் யோகிகளே நினைத்த காலம்,
தந்தியாக அதிவிரைவில் பிறந்து வந்தான்
        தரைநடந்த ஸ்ரீராமன் விவேகா னந்தன்

இளவயதில் அவன்செய்த புரட்சி யாவும்
        இந்தியாவில் எவருக்கும் தோன்றா ஒன்று!
களமிறங்கி அவன்பட்ட அனுப வங்கள்
        காற்றிருக்கும் வரைபேசற் குகந்த வொன்று!
உளமிரங்கி நம்நாட்டு மக்கள் கீர்த்தி
        உயர்வடையப் பாடுபட்ட ஏந்தலைப் பா
வளம்பொருந்தி நால்வர்வந்து துதிசெய் கின்றோம்
        வளரட்டும் அவரெங்கள் உயிருக் குள்ளே!

ஆன்மிகம் வீரம் என்று
அனைவரும் அறிந்து கொள்ளும்
பாண்மையில் வாழ்ந்து சென்ற
பகலவன்! ஞானம் கெட்டு
நாணுடன் வாழ்ந்தி ருந்த
நம்முடைய நாடு சீறி
வானுடன் எழுந்து நிற்க
வார்த்தைகள் தந்த ஞானி!

தவத்தினால் நாட்டைச் சுட்ட
தழலினைத் தணித்த வீரன்!
அவத்தைகள் போக வென்று
அருந்தொண்டு புரிந்த கையன்
கவிதையில் கருத்தில் பேச்சில்
கடமையில் நாட்டை வைத்து
சிவிகையில் ஏற்றிச் சென்ற
சீர்பெரும் அறிவுக் காரன்

இளையவன் முதிர்ச்சி தன்னில்
இமையமாய் நின்ற தோற்றம்
களையவன் வதனம் வானைக்
கவ்விடும் ஜோதிக் கண்கள்
சுளையென இனிக்கும் வார்த்தை
சுறுசுறு பளிக்கும் வார்த்தை
களைப்பினை அழிக்கும் வார்த்தை
கழற்றிய தீர மேதை!

இன்றைக் கிருந்திருந்தால்... எனும்
        எண்ணம் பிறக்கிறதே! - அட
என்ன நடந்திருக்கும்? அவன்
        என்னென்ன செய்திருப்பான்?

இளைஞர்க்கு வாய்ப்புகளே, மிக
        எளிதில் கிடைப்பதில்லை! - என
உளம் துடித்திருந்தான்! அந்த
        உறுத்தல் தீர்ந்திருக்கும்!

வளமை நிறைந்ததுவாய், அவர்
        வளர்ந்து பலதுறையின் - உயர்
தளங்கள் ஆளுவதைக், கண்டு
        தானும் இணைந்திருப்பான்!

மக்கள் கருத்துகளை, அவர்
        வாழும் வழக்கங்களைத் - தான்
தக்க படியறிய, பல
        திசைகள் அலைந்திருந்தான்! அட

இக்கணம் இண்டர்நெட்டும், அதில்
        ஈடிலாச் செல்வங்களும் - வந்த
பக்க பலமறிந்தால், இன்னும்
        பலதிசை கொண்டிருப்பான்!

அவன்
இன்றைக் கிருந்திருந்தால்... அட
என்ன நடந்திருக்கும்? 

நூறு இளைஞர்களைத், தந்தால்
நூதனம் நான்படைப்பேன்! - பழம்
பேறுடை பாரத்தத்தின், பெரும்
பெற்றி உணர்த்திடுவேன்!

என்று முழக்கமிட்டான், அட
இங்கே நமக்கெதிரில் - அன்று
நின்று திரண்டனரே, அவர்
நிஜத்தில் நூறுக்கும்மேல்

அவர்களைக் கண்டிருந்தால், ஆ
ஆவென் றதிர்ந்திருப்பான்! - ஒரு
தவறுமி லாதவிதம், அந்தச்
சக்தியைக் காத்திருப்பான்!

ஆம்! அவன்
இன்றைக் கிருந்திருந்தால்... அட
என்ன நடந்திருக்கும்? 

வானியல் நேர்த்திகளும், கலை
வளர்த்த புகழ்மலையும்! - பல
ஞானியல் தர்மங்களும், இங்கு
நன்கு பெருகுவதை, புது

வானிப லட்சியத்தில், புகழ்
வன்மை அடைந்ததையும்! - நல்ல
மானுட தர்மத்திலே, திகழ்
நாடு சமைத்ததையும்

மேற்கில் மறுபடியும், நம்மை
மேன்மை எனவியந்தே - வந்து
ஆற்றல் வளர்த்துக்கொள்ள, அவர்
அடைக்கலம் கொள்வதையும்

கண்டு சிலிர்த்திருப்பான், எனில்
காவித் துறவியவன் - துயர்
கொண்டு வருந்திடவும், சில
குற்றங்கள் உள்ளனவே!

ஓ! அவன்
இன்றைக் கிருந்திருந்தால்... அட
என்ன நடந்திருக்கும்? 

கடவுள் பெயரினிலே, சிலர்
காயம் வளர்ப்பதையும், - கொடும்
விடத்தை நெஞ்சில்வைத்து, புற
வேடம் தரிப்பதையும்

கண்மூடி மக்களெல்லாம், அவர்
காட்டும் வழிசெல்வதும், - நம
துண்மை மறந்துவிட்டு, வெறும்
உளறலை நம்புவதும்,

கண்டு கொதித்திருப்பான், இரு
கண்களில் நீருகுப்பான்! - நம்
பண்டைய மார்க்கத்திலே - செய்யும்
பாழை எதிர்த்திருப்பான்!

அவன்,
இன்றைக் கிருந்திருந்தால்... அட
என்ன நடந்திருக்கும்?

நாத்திகப் பெயரினிலே, பல
நாசம் நடக்கிறது! - அதைப்
பார்த்திடக் கூடவில்லை, நெஞ்சில்
பயம் பிறக்கிறது!

நாட்டின் அறத்தினிலே, பல
நஞ்சு கலக்கிறது! - இதை
மீட்க முடியவில்லை, அவன்
மட்டும் இதையுணர்ந்தால்

சீறி எழுந்திருப்பான், பேச்சில்
செம்மைத் தனல்வளர்ப்பான்
கூறிடும் வார்த்தைகளால், மனக்
கூர்மை நிகழ்த்திவைப்பான்!

விவேகானந்தன் என்பான், வெறும்
மானிட ரூபமில்லை - உயர் 
நிவேதன மாகநெஞ்சை, நம்
நித்திய தர்மத்துக்கே - நாம் 

அர்ப்பணிக்கும் தருணம், நம்முள்
அவதரிக்கும் பொறுப்பு! - அந்த
வெப்பம் உணர்ந்துகொண்டால், இனி
வானம்நம் கையிருப்பு!

அவன்
இன்றைக் கிருந்திருந்தால்... எனும்
        எண்ணம் பிறக்கிறதே! - அந்த
எண்ணம் பிறந்தவுடன், புதுத்
        திண்ணம் பிறக்கிறதே! - இனி

வாழி இளைஞர்குலம், நன்கு
வாழிநம் பாரதத்தாய்! - இன்னும்
வாழிய இந்துதர்மம், என்றும்
வாழிய வாழியவே!!

-விவேக்பாரதி
10.02.2020

Comments

Popular Posts