Posts

Showing posts from March, 2020

அம்மாக்களும் அப்பாக்களும்

Image
இன்று, உன் உழைப்பில்தான் எம் பிழைப்பு! உன் கைகளில்தான் எம் சுத்தம்! ஊரே அடங்கி இருக்க உன் உதவி அடங்கவில்லை! பாரே பயந்து கிடக்க உன் பனி முகம் நடுங்கிடவில்லை! நன்றி! கைப்பிடித்துச் சொல்ல முடியாது போனாலும் கை தட்டிச் சொல்கிறோம்! கை கூப்பிச் சொல்கிறோம்! சொந்த நாட்டைத் துப்புரவு செய்ய உழைக்கும் அத்தனைபேரும் வீட்டைச் சுத்தம் செய்யத் துடைப்பம் எடுத்திருக்கும் அம்மா அப்பாக்களே!! -விவேக்பாரதி 24.03.2020 படம் - நன்றி Murugaraj Lakshmanan

கவிதைப் பிறவி

Image
இதை உதடுகள் சொல்லிக்கொண்டே இன்றைய நாளை விடுவித்தது ! காலம் தாண்டும் சொற்களையே - என்    கவிதை சுமந்து வருகிறது! கண்கள் மூடிய மறுகணமே - எனைக்    கற்பனைக்குள் போய் விடுகிறது! காலை மாலை இரவெல்லாம் - அதன்    கணக்கில் தூள்தூள் படுகிறது! காமம் தணியும் சுகம்போலே - ஒரு    கவிதை முடிந்து விழுகிறது! என்றும் இல்லாத் தனிமையிலும் - என்    எண்ணம் தனிமைப் படவில்லை ஏதோ ஏதோ சொற்சந்தை - ஒலி    எல்லாத் திசையும் கேட்கிறது! ஒன்றும் செய்யா துறங்கிடலாம் - என    உள்ளம் நினைத்தால் அதுகூட ஒத்துழைக் காமல் இரவுகளே - அறை    உள்ளே நீண்டு விடிகிறது! முணுமுணுப் பெல்லாம் பாட்டாக - சொல்    முத்துகள் சிந்தும் வேட்டாக முயற்சிக் காமல் தொடர்கிறது - மென்    மூர்க்கம் அன்பும் சுடர்கிறது! கணங்கள் எல்லாம் நின்றபடி - நான்    காற்றின் அலைகளைக் கண்டபடி காகிதம் போலே கிடக்கின்றேன்! - ஒவ்வோர்    கவிதைக்கும் நான் பிறக்கின்றேன்!! -விவேக்பாரதி 24.03.2020

சொல்வேன் இதுதான் சுகம்

Image
1) பூத்திருக்கும் போது புசிக்கும் இளவண்டின் காத்திருப் பன்றோ கவினிசை! - மூப்புவரை இல்லாமல் போனாலும் எப்போதும் காத்திருப்பேன்! சொல்வேன் இதுதான் சுகம்!! 2) நெஞ்சத்தில் ஆயிரமாய் நீந்தும் நினைவலைகள் மஞ்சத்தைத் தீய்க்கும் மனவெதும்பல் - கொஞ்சமா? பொல்லாத காமன் புதிர்க்கணைகள் என்றாலும் சொல்வேன் இதுதான் சுகம்!! 3) மானுடச் சட்டை மறுநாள் கிழிந்துவிடும் ஞான உடம்பு நசுங்காது - வானத்தில் எல்லாம் அடங்கும்போ தெப்படியோ ஞானம்வரும் சொல்வேன் அதுதான் சுகம்!! 4) கத்திரிக்காய் எண்ணெய்யிலே காய்ந்து குளித்துவர ஒத்த பருப்புசிலி உள்மிரட்ட - வைத்திருக்கும் நல்ல மிளகுரசம் நாலுகாய் சாம்பாரைச் சொல்வேன் இதுதான் சுகம்!! 5) இம்மென்னும் முன்னே இருநூறு மண்டைக்குள் கம்மென் றிருக்காமல் கத்துகையில் - அம்மாவோ சொல்லற் கெளிதாய்ச் சுவைவெண்பா தோன்றிடுதே சொல்வேன் இதுதான் சுகம்!! -விவேக்பாரதி 11.03.2020

வாழ்வே மாயம் | முற்று முடுகு வெண்பா

Image
முற்று முடுகு வெண்பா ஒன்றை #முயன்று_பார்க்கலாம் என்று பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் எழுதியது.  மாயமான தேகமீது மோகமாகி நாளு(ம்)நாளு(ம்) மாயமான காமமேற மாசுலாவி - மாயமான வாழ்விலேவி காரமாகி வீழும்நேர மாகும்போது  மேவுவீர்சி வாயநாம மே! மாயமான வாழ்க்கையில், இந்த உடலே ஒரு மாயம்தான். அதன்மேல் மோகத்தைக் கொண்டு, அதை நாளும் வளர்க்க முற்பட்டு, அந்த உடலிலும் சிலநேரம் தங்கிச் செல்லும் மாயமான காமத்தின் மீது மனதைச் செலுத்தி, அதனால் இல்லாத குற்றங்களை எல்லாம் நம்மோடு சுமந்து கொண்டு, இறுதியில் வாழ்க்கையில் விகாரமாகி நாம் வீழ்கின்ற நேரம் வரும். அப்படி வரும்போதேனும் சிவாயநம என்னும் நாமத்தை மேவுவோமாக.  இதிலே மாயம் என்ற சொல்லை நாம் உற்று நோக்க வேண்டும். மாயம் என்பதைக் கண்ணுக்குத் தெரியாதது என்றும், சில நேரங்கள் மட்டுமே தங்கிச் செல்வது என்றும், நம்மை மயக்க வல்லது என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறு பொருள் கொண்டால், இந்த வாழ்க்கையே ஒரு மாயம். அதில் இந்த தேகம் என்பது சிலகாலம் மட்டுமே நம்முடன் இருக்கப் போவது. குழந்தையில் இருந்த தேகம் இப்போது நமக்கு இல்லை. இளமையில் இருக்கும் தேகம் முதுமைய