சொல்வேன் இதுதான் சுகம்1)
பூத்திருக்கும் போது புசிக்கும் இளவண்டின்
காத்திருப் பன்றோ கவினிசை! - மூப்புவரை
இல்லாமல் போனாலும் எப்போதும் காத்திருப்பேன்!
சொல்வேன் இதுதான் சுகம்!!

2)
நெஞ்சத்தில் ஆயிரமாய் நீந்தும் நினைவலைகள்
மஞ்சத்தைத் தீய்க்கும் மனவெதும்பல் - கொஞ்சமா?
பொல்லாத காமன் புதிர்க்கணைகள் என்றாலும்
சொல்வேன் இதுதான் சுகம்!!

3)
மானுடச் சட்டை மறுநாள் கிழிந்துவிடும்
ஞான உடம்பு நசுங்காது - வானத்தில்
எல்லாம் அடங்கும்போ தெப்படியோ ஞானம்வரும்
சொல்வேன் அதுதான் சுகம்!!

4)
கத்திரிக்காய் எண்ணெய்யிலே காய்ந்து குளித்துவர
ஒத்த பருப்புசிலி உள்மிரட்ட - வைத்திருக்கும்
நல்ல மிளகுரசம் நாலுகாய் சாம்பாரைச்
சொல்வேன் இதுதான் சுகம்!!

5)
இம்மென்னும் முன்னே இருநூறு மண்டைக்குள்
கம்மென் றிருக்காமல் கத்துகையில் - அம்மாவோ
சொல்லற் கெளிதாய்ச் சுவைவெண்பா தோன்றிடுதே
சொல்வேன் இதுதான் சுகம்!!

-விவேக்பாரதி
11.03.2020

Comments

Popular Posts