ஏனிந்த நிசப்தம்?

காலையின் நிசப்தம் என்னைக் கலக்கிய தருணத்தில்...
ஏனிந்தப் பொல்லா நிசப்தம்? - அட
யாரங்கே! கொண்டுவா ஏதேனும் சத்தம்!
நானிந்த காலையில் நாலா புறத்திலும்
நாடுகின்றேன் உன்னை நித்தம்! - உன்னை
நாடாமல் தணியாது சித்தம்!
விளையாடிப் பார்க்கவே இது நேரமா? - என்னை
விழவைத்துச் சிரிப்பதும் அதிகாரமா?
களையற்ற சக்கையாய் அறையினோரம் - நான்
காத்துக் கிடக்கிறேன் நீண்ட நேரம்!
புரியாமல் எண்ணங்கள் மனதிலாடும் - அந்தப்
புயலோடு சிக்குண்டு இதயம் வாடும்
தெரியாமல் கொல்வதா உன்றன் வீரம்? - சொல்லின்
தேரேறி வரஎன்ன நல்ல நேரம்?
நீயின்றி நெஞ்சகம் பாலை ஆகும் - அது
நீளத் தவம்செய்யும் எந்த நாளும்
தீயின்றி நான்வெறும் பொம்மை அன்றோ! - உன்றன்
திரியேற அகலாவேன் உண்மை அன்றோ!!

-விவேக்பாரதி
03.04.2020
பாடலைக் கேட்கப் படத்தைச் சொடுக்கவும். (Image - Zao Wou Ki Space is silence at the City of Paris Museum of Modern Art)

Comments

Popular Posts