வலிகளின் விலாசம்


உலகத்தின் வலியெல்லாம் என்றைக்கேனும் 
உயர்வாக மாறியொரு புகழில் சேர்க்கும்! 
கலகம்செய் வீரர்களின் வலிகள், வெற்றி,
கவிஞர்தம் உணர்வுகளில் வலியோ பாட்டு,
மலர்வண்டின் வலியில்தான் தேன் கிடைக்கும் 
மண்ணுழுத வலியில்தான் நெல் சிரிக்கும்,
பலமாத வலியில்தான் நம் பிறப்பு,
பக்குவத்தின் முகம்வலியைத் தாங்கிக் கொள்ளல்,

கல்தாங்கும் வலியதனைச் சிலையாய்ச் செய்யும், 
கவலைகள் இல்லாத வாழ்க்கை வாழ
சொல்தாங்கும் வலிதேவை! உணவுக்குள்ளே
சுகம்காண துயர்வலியை தாங்க வேண்டும்
புல்தாங்கும் வலியதிகம் உடைவதில்லை
பூவுக்கும் வலியுண்டு காம்பில் முள்காண்!
நில்,தாங்கு வலிகளுனை வலிமை ஆக்கும்
நீ ஆணி அடிகளுனை இறுக்கும் தானே!!

விவேக்பாரதி
12-04-2022

Comments

Popular Posts