கன்னமென்னும் பன்


கன்னமென்னும் பன்னெனக்கு வேணுமடி தங்கம் 
    காதெனுமோர் தேன்பஞ்சு வேணுமடி தங்கம் 
சின்னயிதழ் என்னும்பழம் வேணுமடி தங்கம் 
    சரியாகச் செய்தவிழி வேண்டுமடி தங்கம் 
பொன்னிழைத்த கழுத்துவளை வேணுமடி தங்கம் 
    பொல்லாத மார்பணைகள் வேணுமடி தங்கம் 
எண்ணாத இடைநெளிவு வேணுமடி தங்கம் 
    எல்லாமே எனக்கென்று சொன்னால் வசந்தம்

தெரியாத கலைசொல்ல வேணுமடி தங்கம் 
    தேர்வுவைத்துச் சோதிக்க வேணுமடி தங்கம் 
புரியாத விழிபாஷை வேணுமடி தங்கம் 
    புன்னகையோ பலமூட்டை வேணுமடி தங்கம் 
சரிவான கருங்குழலும் வேணுமடி தங்கம் 
    சந்தோஷ மணமதிலே வேணுமடி தங்கம் 
உரிப்பானை வெண்ணெய்நீ வேணுமடி தங்கம் 
    உரிமையிவை நானடைய என்றால் வசந்தம்

டேயென்று நீயழைக்க வேணுமடி தங்கம் 
    தேயாத நிலவுமுகம் வேணுமடி தங்கம் 
தாயென்று நீதாங்க வேணுமடி தங்கம் 
    நம்பிள்ளை உன்போலே வேணுமடி தங்கம் 
வாயொன்றில் வாய்வைக்க வேணுமடி தங்கம் 
    வாழ்க்கையெனும் வாழ்த்துமதில் வேணுமடி தங்கம் 
காயென்னும் உன்மூக்கும் வேணுமடி தங்கம் 
    கட்டாயம் எனக்கென்றே சொன்னால் வசந்தம்

எனக்குமட்டும் நீயென்று வேணுமடி தங்கம் 
    என்றும்நான் உனக்கென்றே வேணுமடி தங்கம் 
மனத்திலுன்னை மறவாமை வேணுமடி தங்கம் 
    மறந்தால்நான் உடன்சாதல் வேணுமடி தங்கம் 
தினந்தினமும் ஊடல்கள் வேணுமடி தங்கம் 
    தித்திக்கும் கூடல்கள் வேணுமடி தங்கம் 
புனையும்கவி பொருள்புரிய வேணுமடி தங்கம் 
    புரிகிறதே எனச்சொல்லும் நாளே வசந்தம்!!

#மௌனமடி நீயெனக்கு

விவேக்பாரதி
15.04.2019


Comments

Popular Posts