வலியுள்ள பொழுதுகள்

நொடிமுள் துடிக்கும் சத்தம் எல்லாம் 
    இடியின் முழக்காய்க் கேட்கும் - என் 
    இதயக் கூட்டைத் தாக்கும்!
அடிநீ  இல்லா இரவினில் எல்லாம்
    அடிகள் நெஞ்சைப் பேர்க்கும் - இதன் 
    அடி புரியாதே யார்க்கும்! 

கண்கள் மூடக் காட்சி யெல்லாம் 
    கன்னி உருவில் நெருக்கும் - அது 
    காட்டுப் போரை நிகழ்த்தும் 
எண்ணம் எங்கும் ஏங்கும் காதல் 
    எப்படியோ அடம் பிடிக்கும் - என் 
    ஆவியும் அதனால் துடிக்கும்! 

சும்மா இருந்த மனதைக் கீறி 
    ரணமாக் குவதே வழக்கம் - இது 
    காதல் செய்யும் புழக்கம் 
அம்மா தேவி பொறுப்ப தில்லை 
    அருகில் வரும்நாள் வரைக்கும் - நான் 
    வாழும் பொழுதும் வலிக்கும்!!-விவேக்பாரதி
20.04.2020

Comments

Popular Posts