வேள்விச் சுடர்


எரியப் போவது விளக்கல்ல - நாம் இயங்குகிறோம் எனும் அடையாளம்! தெரியப் போவது தனித்தனியே - நாம் சேர்ந்திருப்பதன் அறைகூவல்! ஒளிரப் போவது வீட்டுக்குள் - நம் உள்ளத் திருக்கும் சிறுநெருப்பு! மிளிரப் போவது பிணிநீங்கி - நாம் மீண்டிடுவோம் எனும் நம்பிக்கை! விளக்கை ஏற்றி நடுவீட்டில் - நம் விழைவை நினைத்து வைய்யுங்கள் களங்கம் இன்றி மின்சாரம் - தனைக் கணக்காய் அணைத்து நில்லுங்கள்! கேள்வி எல்லாம் இருக்கட்டும்! - சொல் கேட்போம் என்பதைக் காட்டுங்கள் வேள்வித் தீயாய் நடுவீட்டில் - சிறு விளக்கின் ஒளியை ஏற்றுங்கள்! இருட்டில் தானே உயிர்வளரும் - அந்த இருட்டில் நம்பும் பலம்பெருகும் மிரள வேண்டா! அறைநடுவே - ஒளி மின்னும் அதுநம் சூரியனே!! -விவேக்பாரதி 05.04.2020

Comments

Popular Posts