பாட வைத்ததும் நீதான்

பாட வைத்ததும் நீதான் - என்னைப்
படிய வைத்ததும் நீதான்! - உனை
தேட வைத்ததும் நீதான்! - நெஞ்சைத்
தெளிய வைத்ததும் நீதான்!

ஓரிடுக்கிலே மனம் தவிக்கையில்
ஓரமாக நான் கதவடைக்கையில்
யார் நுழைந்தது எனத் தவிக்கையில்
யாழ் கொடுத்தவள் நீதான்

போரடுக்கிலே உடல் தகிக்கையில்
போர்வைக்குள் குணம் மிக நடுங்கையில்
வாளெடுத்ததும் கைக்கொடுத்ததும்
வார்த்தை தந்ததும் நீதான்

கவிதை தெய்வமும் நீதான்! - இந்தக்
கவியின் ரசிகையும் நீதான்! - உன்
செவியின் ராஜ்ஜியம் தந்தே - எனை
செல்வனாக்குவதும் நீதான்

நானெனப்படும் ஆணவத்தடம்
நாளும் மொய்த்திடும் ஆசைத் தத்துவம்
வீணெனச் சொல்லி காரம் புகட்டி
வீதி விட்டதும் நீதான்!

வீதி விட்டதும் தெய்வம் கண்முனம்
வந்து தொட்டதும் அந்த வேளையில்
சேதி வாயினில் சேரும் வண்ணமே
செய்யுள் ஆனதும் நீதான்!

நீதான் என்கையில் நானேது! - அடி
நீயே நானாய் உளபோது
நீதான் இதனைச் சொல்லுவது! அட
நீயேவா இதைக் கேட்பதுவும்....

-விவேக்பாரதி
07.04.2020

Comments

Popular Posts