சகோதரர்க்கு நன்றி

"சகோதரர்கள் தினமாம்"! என்னவோ புதுசு புதுசா தினங்கள் முளைக்குது! சரி, வாழ்த்த ஒரு வாய்ப்பு...


தமைஅணையன் தமையன் தமக்குப்பின் தம்பி
உமையளித்த உறவுகளே உங்களுக்கு நன்றி!
அமைந்திருக்கும் வாழ்வில் அடுக்கிவைத்த படியில்
சுமைகளையும் சுகங்களையும் சுமப்பவரே நன்றி!

அப்பாவுக் கப்பா அம்மாவுக் கம்மா
எப்போதும் தோழர்களாய் இருப்பவரே நன்றி!
தப்புசெய்யும் போதும் தடுக்கிவிழும் போதும்
முப்பொழுதும் உடனிருக்கும் மூச்சுகளே நன்றி!

சேர்ந்திழைத்த சேட்டை சேர்ந்தடித்த ஆட்டம்
சேர்ந்துதிட்டு வாங்கியபின் சிரித்திருந்த நேரம்
நேர்ந்தசில சண்டை முத்தமழை எல்லாம்
ஊர்ந்திருக்கும் நெஞ்சகத்தில்! உளம்நிறைந்த நன்றி!

உடன்பிறந்த பந்தம் பிறந்திடாத சொந்தம்
உடலில்கண்ட தில்லையெனினும் உள்ளம்கண்ட பாசம்
உடன்கிடைக்கும் நட்பில் உறுதியாகும் நேசம்
கிடைத்திருக்கும் சோதரர்கள் யாவருக்கும் நன்றி!

என்னகொண்ட போதும் பங்குபோடும் எண்ணம்
சின்னச்சின்ன செயலில்கூட வெற்றிநேரப் போட்டி
இன்னும்சொல்லச் சொல்ல இதயம்துள்ளும்! வாழ்வில்
அன்புசெய்ய மட்டும்வந்த ஆண்டவர்க்கு நன்றி!!

-விவேக்பாரதி
24.05.2020

படம் - நானும் என் தம்பியும்...

Comments

Popular Posts