நம் உயர்வு

 

புதுமாண வப்படையும் உருவாக வேண்டும் 

பொதுவான வீதிகளில் தமிழ்பேச வேண்டும் 

மதுவாகக் கவிதைகளை அவர்வீச வேண்டும் 

இதுநேரும் திருநாளே நம்முயர்வு தம்பி

 

அடையாளம் மறவாத புதுக்கூட்டம் கூடி 

படையாக வருகின்ற பலம்யாவும் கண்டு 

கிடையாது முடியாது நடக்காதே என்னும் 

தடையோடும் நிலைநாளே நம்முயர்வு தம்பி!

 

இனமானம் மொழிமானம் உயர்வாகப் பேசி

சினமென்னும் தீதன்னை வெகுதூரம் வீசி 

மனமெங்கும் தெளிவென்னும் விளக்கத்தை ஏந்தக் 

கனவுநினை வாகும்நாள் நம்முயர்வு தம்பி!

 

காலத்தின் ஓட்டத்தில் வீழாத கூட்டம்,

வேலைக்கும் காசுக்கும் மாளாத கூட்டம்,

நாளைக்கென் றெண்ணுகிற நலமான கூட்டம்,

தோள்தூக்கி வரும்நாளே நம்முயர்வு தம்பி!

 

இளையபடை இனியபடை முன்னேற வேண்டும் 

தளையகலத் தடைவிலக நடைபோட வேண்டும் 

களையபல களைகளுள அவைநீங்க வேண்டும் 

விளையுநிலம் நமதுமனம் விதையெண்ணம் தம்பி!!


-விவேக்பாரதி


Comments

பிரபலமான பதிவுகள்