Posts

Showing posts from June, 2020

ஆடிய ஆட்டம் என்ன...

Image
இளமையை வீணாய் ஆக்கி     இழிந்ததை மட்டும் கண்டு  வளமையாம் நேர மெல்லாம்     வழுக்கியே விழச்செய் கின்ற  தளமென வந்த டிக்டாக்     தடையினில் வீழ்ந்த திங்கே  அளவிலா ததிலே நீங்கள்     ஆடிய ஆட்டம் என்ன!  பொழுதெலாம் அதையே பார்த்துப்     போதைகள் தேடும் வண்டாய்  முழுவதும் வீழ்ந்தீர், அந்தோ     முரடராய் மதிகெட் டோராய்  இழிவெனும் காமம் மேவி     இளைஞரே போனீர், இன்றஃ  தழிந்ததே டிக்டாக் கில்நீர்     ஆடிய ஆட்டம் என்ன! பெண்கள்தம் உடல்கள் காட்டிப்    பேரிடர் செய்த கோலம்,  உண்மைகள் நீக்கிப் பொய்யில்     உழன்றவர் கழித்த கோலம்,  வன்முறைப் பேச்செல் லாமும்     வாழ்வினைக் கெடுத்த கோலம்  அண்மையில் தீர்ந்த தம்மா    ஆடிய ஆட்டம் என்ன! ஆடவர் காலை மாலை     அதிலுள்ள பெண்கள் இன்பம்  தேடியே திரிந்த கேடும்,     தேம்பியே அழுத கேடும்,  வாடியே சிலபேர் கத்தி     வாழ்க்கையை இழந்த கேடும்  ஓடவே சென்ற டிக்டாக்     ஆடிய ஆட்டம் என்ன! மக்களை மாக்க ளாக்கி     மனதினைக் குப்பை செய்யும்  டிக்குடாக் செய்யும் தீங்கு     தீர்ந்ததே, இதற்குள் நாளும்  சிக்கிய முதியோர் மாந்தர்     சிறுவர்கள் மீள்வார் இந்த  அக்கரை இனிமே லேனும்     அழிந்திடா தி

புலம்ப ஏன் வைத்தான்?

Image
விடிந்தும் விடியாத காலையில் எழுந்து கனவில் வடிந்த இந்தக் கவிதையை செல்ஃபோனில் தட்டச்சு செய்து படுத்துக்கொண்டேன்...  பூட்டிக் கிடக்கும் மனதில் நீதான்     பூவின் வாசம் நிறைக்கின்றாய்  புல்லாங் குழலாய் நெஞ்சக் குகையில்     புதுமை ராகம் அமைக்கின்றாய்!  வாட்டி எடுக்கும் தூரத்தில் நீ     வண்ணச் சிரிப்பு செய்கின்றாய்  வாவா வாவென் றழைத்துக் கொண்டே     வானத்துக்குள் மறைகின்றாய்!  ஏக்கம் ஏக்கம் கண்ணில் அதனால்     எகிறிப் போச்சே தூக்கங்கள்  எல்லாம் உன்றன் உருவாய்த் தெரிய     எழுத இல்லை பக்கங்கள்!  வீக்கம் இதயம் கண்டதனாலே     விழிநீர் கூட நெருப்பாகும்  விளையாட்டல்ல உயிரின் நோவு     மீட்டல் உன்றன் பொறுப்பாகும்!  எப்போ தென்னை அணைப்பாய் என்றே     இரவை எழுதிக் கழிக்கின்றேன்  எழுத எழுதக் குவியும் சொற்கள்     எழுத்தில் கண்ணீர் விதைக்கின்றேன்  அப்போ தென்னைத் தரவே தினமும்     ஆயிரம் ஒத்திகை முடிக்கின்றேன்! ஆடியும் பாடியும் பேசியும் கூசியும்      அடடா அதனை ரசிக்கின்றேன்!  வாவா வந்தால் வாழ்வேன்! இல்லை     வானில் வெள்ளை முகிலாவேன்  வண்ணம் இருந்தும் அள்ள முடியா     வானவில்லாய் நானாவேன்  பூவாய் தந்தால் உயிர்ப்ப

தோன்றும் சிறகு - தூங்கும் முன் தோன்றியது #3

Image
முடிந்த பழமை முளைக்கும் புதுமை  படிந்து மனத்தைப் படுத்தும் - எடுக்குமடி  எல்லாம் பராசக்தி ஏவல் எனநினைத்தால்  வெல்வோம் விதியை விரைந்து!  விரைகின்ற எண்ணம் விதவிதமாய்ப் பேசி  அரைகுறைக்கூத் தாடி அரற்றும் - இருமனமே  உன்னால் எதுவுமில்லை உன்னையன்றி ஏதுமிலை  சொன்னார் அதுவே சுகம்!  சுகமும் துயரும் சுவைத்திடும் நோக்கில்!  அகமும் புறமும் அமைந்த ஜெகமும்  நமதல்ல வென்று நடப்பதை ஏற்றால்  சமரில்லை தோன்றும் சிறகு!!  -விவேக்பாரதி  16.06.2020

வராசக்தி சேரும் வசம் - தூங்கும் முன் தோன்றியது #2

Image
பொன்னைப் பெரிதென்பார் போகம் பெரிதென்பார்  மன்னர் பதவி மகிமையென்பார் - அன்னை  அருளிருந்தால் யாவும் அருகணையும் வெற்றுப்  பொருளிருந்தால் நோகும் பிழைப்பு! பிழைப்போ அவள்தாள் பிடித்தல்! தினமும்  அழைத்தே அவள்பேர் அறைதல் - உழைக்கும்  மடமனமே கேளாய்! மகமாயி தாளைத் தொடமுயல்வார்க் கில்லை தொடர்!  தொடரும் செருக்கும் துரத்தும் துயரும்  படரும் வெறுமைப் பணியும் - அடடா  பராசக்தி பேர்சொல்லப் பேர்ந்து நொறுங்கும்  வராசக்தி சேரும் வசம்!! -விவேக்பாரதி  15.06.2020

மழையும் மாரியும் - தூங்கும் முன் தோன்றியது #1

Image
கிரேஸி மோகன் பாணியில் #தூங்கும்முன்_தோன்றியது...  சூல்கொண்ட மேகங்கள் தூறல் மழைசிந்தி பால்கொண்ட வெண்மை படர்த்தவும் - மேல்கண்டு வித்து முளைக்கவும் விந்தையடா யாரிந்தச் சித்து படைக்கிறார் செப்பு! செப்பு கலக்காத செய்ய பசும்பொன்னாய் அப்பும் அழகு அவள்முகத்தில் - ஒப்பி நமக்காக நல்லுலகு நல்கினாள் அந்த உமைசெய்யும் வித்தை உணர்!! -விவேக்பாரதி  14.06.2020

மனத்துக்கு வணக்கம்

Image
நேற்றிரவு நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். அது வாடிக்கைதான் என்றாலும் நேற்றைய இரவு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. தூங்கவே மறந்துபோனதாக தோன்றியதெல்லாம் இந்தக் கவிதை வரும்வரை. அதன்பின் எப்படித் தூங்கினேன் என்றே தெரியவில்லை. அடடா மனமே பலநாள் கழித்தே அருகில் இன்றே பார்க்கின்றேன் அழிந்தே விட்டாய் என்று நினைத்தேன் அமிழ்ந்தாய் எனநான் அறிகின்றேன்! உடலை ஓம்பும் விருப்பம் வந்தபின் உன்றன் பேச்சைக் கேட்கவில்லை! உரசிப் பார்த்தாய், குழைந்தும் பார்த்தாய், உன்னை நானும் பார்க்கவில்லை! எதிலெல் லாம்நான் மோகம் கொண்டேன் அதையெல் லாமென் முன்வைத்தாய்! எடுத்துக் கொள்ளென தொடுத்துக் கணைகளில் என்னை அணைக்க நீநினைத்தாய்! புதிதாய்ப் பெற்ற யோகம் என்கிற போதனையால் உன் போதனைகளைப் புதைத்தே விட்டேன் என்றறி யாமல் புரண்டு புரண்டு நீமுயன்றாய்! ஆசை இருப்ப தியல்பே என்பதும் அதில்வரும் மோகம் கொடிதென்றும் அறிந்தேன் மனமே அந்தக் கணமே ஆழ்நெஞ்சுள் நீ பதுங்கிவிட்டாய்! பேசக் கூட வார்த்தை வராமல் பேரமைதிக்குள் நீ தொலைந்தாய் பேரானந்தக் கதவின் வழிநான் பெற்றதை எல்லாம் ஏதறிவாய்? மூச்சை அறியும், மூச்சை உணரு

உலகுள்ளவரை கிரேஸி

Image
ஓராண்டாம் நீமறைந்து பல்லாண்டு  பழகியதாய் உணர்ந்த நெஞ்சம்  போராண்டு பின்மீண்டு வடிக்கின்ற  கவியுனக்குப் போதுமாமோ  பேராண்டு நீவென்ற வெற்றிகளும்  பெற்றிகளும் பேச்சில் சொல்லச் சீராண்டு கொண்டிருக்கும் கவிஞக்கும்  இயன்றிடுமோ செப்பு கையா!  இதழினிலே எப்பொழுதும் இளமைதவழ்  புன்னகையும் இதயத் துள்ளில்  மதலையெனப் பேதமிலா நட்புணர்வும்  வாய்த்திருக்கும் வள்ளல் எங்கும்  எதனிலுமே நகைச்சுவையை ஏற்படுத்தும்  மாமனிதா எல்லா நாளும்  விதவிதமாய் வெண்பாக்கள் யாத்தளிக்கும்  கவிதையெனும் வித்தைக் காரா  கவிதையிலே எழுத்துப்பணி தொடங்கியவா  பின்னரதில் கலக்கி நாட்டின்  செவிகளையும் விழிகளையும் இன்றுவரை  ஆண்டிருக்கும் செம்மை வேந்தே நவநவமாய்க் கற்பனைகள் சொல்லடுக்கில்  நகைச்சுவைகள் நயக்கும் நல்ல  தவமுடைய புதுஞானீ உயர்கிரேஸி  மோகன்புகழ் செகத்தில் வாழ்க!  வண்ணப்பாக் கவிதைகளும் வகைவகையாய்ச்  சிறுகதையும் விருத்தம் வெண்பா  எண்ணப்பாக் கலைக்கூடம் எதிலுமுயர்ப்  புகழ்க்கூடம் இனிக்க நாவில்  திண்ணப்பாக் கோடுசில வெற்றிலையும்  சேர்ந்துவிளை யாடும் தீரம்  உண்ணப்பா என்றுதினம் ரமணரசம்  ஊற்றுகிற உணர்ச்சி வெள்

பீங்கான் இதயம்

Image
"There's nothing more challenging to an artist than an empty canvas; nothing more inviting to a poet than a pure, virgin sheet of paper" என்று ஆர்.எஸ்.மணி ஐயா இசைக்கவி ரமணன் ஐயாவுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உயிர்ப்பான வரி என்னை மிகவும் கவர்ந்தது. அடுத்த சில நாட்களில், அலுவலகத்தில் ஒரு வெள்ளைத் தாளைக் கண்டதும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத் தேன். பையிலிருந்து வெளியே எடுக்கும்போது பேனா கீழே விழுந்தது. அதுவரையில் என்ன எழுதுவதென்று தெரியாமல் இருந்தது, கீழே விழுந்த பேனாவை எடுத்துத் தாளில் வைத்ததும் அது கொண்டு சென்றது! ஒரு கவிதை பிறந்தது. கல்கி அலுவலகத்தில் பிறந்தது இந்தவார கல்கி பத்திரிகையிலேயே அச்சாகி இருக்கிறது! கொஞ்சம் பாருங்களேன்... நன்றி :  Ramanan Vsv ;  Amirtham Surya ;  Pon Murthy

பால் மீசை

Image
முன்னி ரவு அவ்வளவு நிசப்தமாய் இருந்தது. அப்படியெல்லாம் அந்த ஊர் அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கியதில்லை. ஆனால், அன்றைக்கு அப்படி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த நிசப்தத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்துச் சாலையில் நடக்கத் தொடங்கினான் கிருஷ்ணன். மங்கிய வெளிச்சத்தைச் சாலையில் பரப்பித் தலைகுணிந்து நின்றிருந்தன மின் விளக்குகள். கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லிக் கால்களும், ரசித்துக்கொள் என்று தென்றலும் சொல்ல, ஒரு பேருந்து நிறுத்தத்தில், மின் கம்பத்துக்குக் கீழே அமர்ந்தான். அவனுக்குள் எப்போதும் அடித்துக்கொண்டிருந்த மனம்கூட, அன்றைக்கு பூரண அமைதியில் லயித்திருந்தது. சற்று நிமிர்ந்து பார்த்தான். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் எல்லா ஜன்னல்களும் இருள் சட்டை மாட்டிக் கொண்டிருந்தன. ஒன்று மட்டும் மெல்லிய வெளிச்சத்தில் நிர்வானமாய் இருந்தது. அதைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தான். ஜன்னலுக்கு அருகில் ஓர் உருவம். கிருஷ்ணன் வைத்த கண்கள் பெயரவேயில்லை. ஆமாம்! அது பெண்ணுருவம்தான். அவள் தன் தலையைக் கோதுவதுமாய், ஏதோ எழுதுவதுமாய் இருந்தாள். அந்த முகம் முழுதாய்த் தெரியவில்லை. ஆனாலும், அது அடிக்கடி க