தோன்றும் சிறகு - தூங்கும் முன் தோன்றியது #3


முடிந்த பழமை முளைக்கும் புதுமை 
படிந்து மனத்தைப் படுத்தும் - எடுக்குமடி 
எல்லாம் பராசக்தி ஏவல் எனநினைத்தால் 
வெல்வோம் விதியை விரைந்து! 

விரைகின்ற எண்ணம் விதவிதமாய்ப் பேசி 
அரைகுறைக்கூத் தாடி அரற்றும் - இருமனமே 
உன்னால் எதுவுமில்லை உன்னையன்றி ஏதுமிலை 
சொன்னார் அதுவே சுகம்! 

சுகமும் துயரும் சுவைத்திடும் நோக்கில்! 
அகமும் புறமும் அமைந்த ஜெகமும் 
நமதல்ல வென்று நடப்பதை ஏற்றால் 
சமரில்லை தோன்றும் சிறகு!! 

-விவேக்பாரதி 
16.06.2020

Comments

Popular Posts