மனத்துக்கு வணக்கம்


நேற்றிரவு நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். அது வாடிக்கைதான் என்றாலும் நேற்றைய இரவு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. தூங்கவே மறந்துபோனதாக தோன்றியதெல்லாம் இந்தக் கவிதை வரும்வரை. அதன்பின் எப்படித் தூங்கினேன் என்றே தெரியவில்லை.

அடடா மனமே பலநாள் கழித்தே
அருகில் இன்றே பார்க்கின்றேன்
அழிந்தே விட்டாய் என்று நினைத்தேன்
அமிழ்ந்தாய் எனநான் அறிகின்றேன்!
உடலை ஓம்பும் விருப்பம் வந்தபின்
உன்றன் பேச்சைக் கேட்கவில்லை!
உரசிப் பார்த்தாய், குழைந்தும் பார்த்தாய்,
உன்னை நானும் பார்க்கவில்லை!

எதிலெல் லாம்நான் மோகம் கொண்டேன்
அதையெல் லாமென் முன்வைத்தாய்!
எடுத்துக் கொள்ளென தொடுத்துக் கணைகளில்
என்னை அணைக்க நீநினைத்தாய்!
புதிதாய்ப் பெற்ற யோகம் என்கிற
போதனையால் உன் போதனைகளைப்
புதைத்தே விட்டேன் என்றறி யாமல்
புரண்டு புரண்டு நீமுயன்றாய்!

ஆசை இருப்ப தியல்பே என்பதும்
அதில்வரும் மோகம் கொடிதென்றும்
அறிந்தேன் மனமே அந்தக் கணமே
ஆழ்நெஞ்சுள் நீ பதுங்கிவிட்டாய்!
பேசக் கூட வார்த்தை வராமல்
பேரமைதிக்குள் நீ தொலைந்தாய்
பேரானந்தக் கதவின் வழிநான்
பெற்றதை எல்லாம் ஏதறிவாய்?

மூச்சை அறியும், மூச்சை உணரும்
முயற்சி பெற்றேன்! அதனோடே
முன்னங் காலில் உள்ள விரல்களை
முட்டி மடங்காமல் தொட்டேன்!
ஆச்சர்யம்தான் ஆழத்துக்குள்
ஆழ்ந்தேன் தியானம் மேற்கொண்டேன்
அதற்குள் உன்னைக் கடலுக் குள்ளே
அலைந்த கடுகாய்த் தான்கண்டேன்!

காலை வேளை வசந்தம் என்றன்
கருத்தைத் தீண்டும் வரம்பெற்றேன்
காயம் மடக்கி நிமிர்த்திச் சுழற்றிக்
கட்டுக்குள்நான் கொணர்ந்திட்டேன்!
வேலை எதையும் மிச்சம் இன்றி
வென்று முடிக்கத் தேர்ந்திட்டேன்!
விளையாட்டாக ஆரம்பித்தேன்
விளைவைக் கண்டு நான்மகிழ்ந்தேன்!

பயணம் இல்லாப் பூட்டுப் பொழுதில்
பயனாய் வந்தவை இவையென்பேன்
பாட்டில்லாத காரணம் உன்னைப்
பார்க்கா நிலையும் எனச்சொல்வேன்!
பயந்த மனமே திருத்திய தாகப்
பாடிக் கொண்டே வருகின்றாய்!
பாவம் பார்த்துப் பக்கம் சேர்ப்பேன்
பழைய படிக்கு நடிக்காதே!

நீயென் கருவி நானுன் கர்த்தா
நிச்சயம் இதனை மறக்காதே!
நீயாய் எதையும் விழைந்து அந்த
நீரில் என்னை அமிழ்த்தாதே!
மாயம் காட்டி வேண்டும் படிக்கு
வம்படி யாக இழுக்காதே
மருண்டு குழைந்து அழுது நடித்து
வேண்டிய தெல்லாம் வெறுக்காதே!

கருத்தை எங்கே வைக்கின் றேனோ
கடுகிச் செல்ல மறுக்காதே!
காலை வேளை மிகவும் நல்லது
கனவில் துயிலில் கழிக்காதே!
இருப்பை உணர்த்த அடிக்கடி வலித்தே
இம்சை எல்லாம் கொடுக்காதே!
ஈடில்லாத ஆனந்தங்கள்
இருப்பதை ரசிக்க மறக்காதே!

பாடு! சொற்கள் படையெடுத் தால்நீ
பாடு! அதுதான் பேரின்பம்!
பயந்து பயந்து நடித்தது போதும்
பாய்ச்சல் ஒன்றே ஆனந்தம்!
கூடு! மதியில் குறியில் உன்னைக்
கொண்டு செலுத்த லட்சியமே!
குருவாய் உமையே வருவாள் அருள்வாள்
கூடும் அனைத்தும் சத்தியமே!!

-விவேக்பாரதி
14.06.2020

Comments

Popular Posts