புலம்ப ஏன் வைத்தான்?

விடிந்தும் விடியாத காலையில் எழுந்து கனவில் வடிந்த இந்தக் கவிதையை செல்ஃபோனில் தட்டச்சு செய்து படுத்துக்கொண்டேன்... பூட்டிக் கிடக்கும் மனதில் நீதான் 
   பூவின் வாசம் நிறைக்கின்றாய் 
புல்லாங் குழலாய் நெஞ்சக் குகையில் 
   புதுமை ராகம் அமைக்கின்றாய்! 
வாட்டி எடுக்கும் தூரத்தில் நீ 
   வண்ணச் சிரிப்பு செய்கின்றாய் 
வாவா வாவென் றழைத்துக் கொண்டே 
   வானத்துக்குள் மறைகின்றாய்! 

ஏக்கம் ஏக்கம் கண்ணில் அதனால் 
   எகிறிப் போச்சே தூக்கங்கள் 
எல்லாம் உன்றன் உருவாய்த் தெரிய 
   எழுத இல்லை பக்கங்கள்! 
வீக்கம் இதயம் கண்டதனாலே 
   விழிநீர் கூட நெருப்பாகும் 
விளையாட்டல்ல உயிரின் நோவு 
   மீட்டல் உன்றன் பொறுப்பாகும்! 

எப்போ தென்னை அணைப்பாய் என்றே 
   இரவை எழுதிக் கழிக்கின்றேன் 
எழுத எழுதக் குவியும் சொற்கள் 
   எழுத்தில் கண்ணீர் விதைக்கின்றேன் 
அப்போ தென்னைத் தரவே தினமும் 
   ஆயிரம் ஒத்திகை முடிக்கின்றேன்!
ஆடியும் பாடியும் பேசியும் கூசியும்  
   அடடா அதனை ரசிக்கின்றேன்! 

வாவா வந்தால் வாழ்வேன்! இல்லை 
   வானில் வெள்ளை முகிலாவேன் 
வண்ணம் இருந்தும் அள்ள முடியா 
   வானவில்லாய் நானாவேன் 
பூவாய் தந்தால் உயிர்ப்பேன்! இல்லை 
   புழுதி படிந்து மண்ணாவேன் 
பொழுதை எல்லாம் இப்படித் தீர்த்தால் 
   பொன்னே கடைசியில் என்னாவேன்? 

எதையோ எண்ணி எதற்கோ பின்னி
   எழுப்பு கின்றேன் கவிச்சுவரு...
எல்லாம் என்னை நானே மறைத்து 
   அழுவதற் கென்றே ஒரு கதவு! 
இதயம் என்னும் பஞ்சில் நினைவை 
   இறைவன் நெருப்பாய்த் தான்வைத்தான் 
இயலா தென்ற செயலைச் செய்தே 
   இப்படிப் புலம்ப ஏன்வைத்தான்?? 

-விவேக்பாரதி 
30.06.2020

Comments

Popular Posts