பால் மீசை


முன்னிரவு அவ்வளவு நிசப்தமாய் இருந்தது. அப்படியெல்லாம் அந்த ஊர் அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கியதில்லை. ஆனால், அன்றைக்கு அப்படி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த நிசப்தத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்துச் சாலையில் நடக்கத் தொடங்கினான் கிருஷ்ணன். மங்கிய வெளிச்சத்தைச் சாலையில் பரப்பித் தலைகுணிந்து நின்றிருந்தன மின் விளக்குகள்.

கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லிக் கால்களும், ரசித்துக்கொள் என்று தென்றலும் சொல்ல, ஒரு பேருந்து நிறுத்தத்தில், மின் கம்பத்துக்குக் கீழே அமர்ந்தான். அவனுக்குள் எப்போதும் அடித்துக்கொண்டிருந்த மனம்கூட, அன்றைக்கு பூரண அமைதியில் லயித்திருந்தது.

சற்று நிமிர்ந்து பார்த்தான். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் எல்லா ஜன்னல்களும் இருள் சட்டை மாட்டிக் கொண்டிருந்தன. ஒன்று மட்டும் மெல்லிய வெளிச்சத்தில் நிர்வானமாய் இருந்தது. அதைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தான். ஜன்னலுக்கு அருகில் ஓர் உருவம். கிருஷ்ணன் வைத்த கண்கள் பெயரவேயில்லை. ஆமாம்! அது பெண்ணுருவம்தான்.

அவள் தன் தலையைக் கோதுவதுமாய், ஏதோ எழுதுவதுமாய் இருந்தாள். அந்த முகம் முழுதாய்த் தெரியவில்லை. ஆனாலும், அது அடிக்கடி கீழே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது அவனுக்கும் தெரிந்திருந்தது.

கிருஷ்ணனின் மனம் துடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு அந்த இரவு, அவளை அவ்வளவு அழகாய்க் காட்டியது. அவள் எழுதும்போது கழுத்தைப் பின்பக்கம் தளர்த்தி, முடியைச் சிலுப்பி விட்டுக்கொண்டு எழுதும் பரவசம் அவனுக்குள் மயிர்க்கூச்சத்தை உண்டாக்கியது.

யார் அந்த அழகி? அவளைப் பார்த்தே ஆகவேண்டுமே! என்று அவன் மனம் துடித்தது. அவன் கால்கள் நிலையில்லாமல் குதித்தன. கைகள் மீண்டும் மீண்டும் முடியைக் கோதிச் சரி செய்துகொண்டே இருந்தன. அவனது செய்கைகளைக் கண்டு ரசித்த அந்த மாடிவிட்டு ரதி, அவனை வரச்சொல்லி சைகை காட்டினாள்.

அவன் அதை நம்பவில்லை. என்னையா என்று மறுபடியும் அவளிடம் கேட்டு உறுதி செய்துகொண்டான். அவள் தலையை அசைத்து வா என்றதும் துள்ளிக் குதித்து வீட்டு வாசல் தேடி ஓடினான்.

ஒரே ஒரு படியில் அவனுக்கு மூன்றாவது மாடியை அடைந்ததுபோல் இருந்தது. மாடியில் மூன்று வீடுகள் இருந்தன. எந்த வீடு என்று அவன் கொஞ்சம் முன்னுக்குப் பின் குழம்பினான். அப்போது அவனுக்கு வலதுபுறம் இருந்த கதவின் தாழ்ப்பாள் சத்தத்துடன் திறந்தது. கவனமாய்த் தயக்கத்துடன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

“ப்ளீஸ் லாக் த டோர் அண்ட் கம் இன்சைட்”

ஒரு வசீகரக் குரல் அவன் காதில் விழுந்தது. அவள் குரல் புல்லாங்குழலாகக் கேட்டது

“ம்ம்ம்” என்று சொல்லிவிட்டுக் கதவைத் தாழிட்டான்.

பெரிய வீடுதான். வீட்டில் எல்லா அறைகளிலும் இளஞ்சிவப்பு நிறச் சின்ன விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. படுக்கை அறை மட்டும் அதைவிடக் கொஞ்சம் பிரகாசமான மஞ்சள் விளக்கால் ஒளியூட்டப்பட்டிருந்தது. அறைக்குள் நுழைந்தான்.

கறுப்புச் சேலை! அதன் முந்தானை அப்படியே காற்றில் ஆடி அலையலையாய்க் கிளப்பிக் கொண்டிருந்தது. மாராப்பை லேசாக பட்டும்படாமல் மூடியும் இருந்தது. அந்த நாற்காலியா? அவள் எழுதும் கருத்தா? காற்றா? இரவா? எது அவளை அவ்வளவு சுகத்தில் ஆழ்த்துகிறது என வியந்தான். அவள் கண்களில் அப்படியொரு போதைச்சுகம் தெரிந்தது.

மேஜையில் ரெட் வைனும் இருந்தது.

“யூ வாண்ட் சம்?” என்று கோப்பையை உயர்த்திக் காட்டினாள்.

“நோ ஐ டோண்ட் ட்ரிங்க்”

“அட! இது லிக்கர் இல்ல ராஜா! ஜஸ்ட் ரெட் வைன்! ஒடம்புக்கு நல்லது”

“ம்ம்! சரி!”

இரண்டு கோப்பைகள் வான் சிவப்பால் நிறைந்தன.

“யூ நோ மி?” பட்டென்று கேட்டான் கிருஷ்ணன்.

“ஹாஹாஹா” சிரித்தாள். அப்படியொரு சிரிப்பை அவன் எதிர்பார்க்கவில்லை. அதில் நக்கல் தூக்கலாக இருந்தது.

கொஞ்சம் கணைத்துக்கொண்டு மீண்டும் கேட்டான். “டூ யு நோ மி?”

“டு யூ நோ மீ?” அதே கேள்வியை அவளும் கேட்டாள்.

“இல்ல! உனக்கு என்னத் தெரியுமா?”

”ஓ! தெரியுமே”

“வாட்? ஹவ் டூ யூ?” என்று கேட்பதற்குள்,

“ஹே லிசன்! நா ஒரு கவிதை எழுதிட்டு இருக்கேன்! நீயும் அத ரசிப்பன்னு தோணிச்சு! அதான் உன்ன கூப்ட்டேன்! ஜஸ்ட் கிவ் மி கம்பெனி! போதும்” என்றாள்.

புல்லாங்குழல் இசைக்கும்முன் அவன் குரல் என்னபடும்? அடங்கிச் சம்மதித்தான்.

அவள் ஒரு சிப் குடித்துவிட்டு மீண்டும் பேனாவால் ஏதோ எழுதினாள். எழுதும்போது அவள் கொண்ட பரவசத் தோற்றம் கிருஷ்ணனுக்கு அடிவயிற்றில் பூகம்பத்தைக் கிளப்பியது. அவனது ஹார்மோன்கள் ஏகத்துக்கு ஆர்கெஸ்ட்ரா வாசித்தன.

சில சிப்புகளும் சில வரிகளும் அப்படியே தொடர, கிருஷ்ணனுக்கு மோகம் தலைக்கேறியது. எழுதி முடித்ததும் அவள் விட்ட பெருமூச்சில், அவளது நெஞ்சு புடைத்துத் தாழ்ந்தது. மாராப்பு இன்னும் கொஞ்சம் இறங்கியது.

”சோ! வாட்ஸ் யுவர் நேம்?” அவன் கேட்டான்.

“மோகனா”

“மோகனா?”

“ஹாஹா! ஆமா கிருஷ்ணா! மோகனா”

“என் பேரு உனக்கு எப்டி தெரியும்?”

“நாந்தான் அத கேட்காதன்னு சொல்லிட்டேன்ல!”

“ஓக்கே ஓக்கே! கேக்கல! ஆமா என்ன, எழுதி முடிச்சிட்டியா?”

“ஓ யெஸ்! கேட்குறியா?”

”ம்ம்! சொல்லு!”

”கனவுக் காதலா!

என் அந்தரங்க அரங்கத்தில்

இன்று உன் நாடகம் மட்டும்!

பார்வையாளர்கள் யாரும் வரவில்லை!

 

என் வலிபோல் உருகும்

மெழுகு வர்த்திக்கு

இன்று சோகமிருக்காது!

என் கரகரப்பான

கதறல் கேட்ட சுவர்

இன்று நிம்மதியாய்த் தூங்கும்!

 

என் விளக்குகள்

இன்றைக்குக் கண் சிமிட்டலாம்!

என் போர்வை

இன்று அவ்வளவாய்க் கலையாது!

தலையணையில்

ஈரமோ வியர்வையோ பட வாய்ப்பில்லை!

 

என் நாட்குறிப்பில்

இன்று குருதி தினம் என்றும்

ஒரு பேச்சுக்குக் குறித்துக் கொண்டேன்!

இன்று என் பாடு

கனவில் உன்னோடு மட்டுமே!

 

தசைவிருந்து இன்றில்லை

என் கனவில் நீ

இசைவிருந்து செய்யலாம்!

 

முத்தம் மட்டும் என் இஷ்டம்

மற்றபடி உன் இஷ்டம்!

 

ஆம்!

இது விருந்தாளியற்ற விருந்திரவு!

நான் தூங்குவதற்குக் கிடைத்த

முதல் இரவு!!

 

அவள் குரலில் அந்தக் கவிதையை ஏற்ற இறக்கத்துடன் வாசித்ததில், அந்த இடமே இன்னும் மௌனமானது. கண்கள் விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன்,

“ரொம்ப நல்லா இருக்கு மோகனா” என்றான். அதைச் சொல்ல வேண்டியது பார்மாலிட்டியாக அவன் கருதினான்.

“ஹாஹா! தேங்க்ஸ் கிருஷ்ணா”

மறுபடியும் அதில் நக்கல். கிருஷ்ணனுக்கு அதில் கோபம் வந்தது.

“சரி நா கெளம்புறேன்”

“ஓ! அவ்ளோ தானா?”

“ஆமா! கவிதை கேட்கத்தானே கூப்பிட்ட”

“சரி! பை பை!” சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

மறுபடியும் அடுத்த பக்கத்தைப் புரட்டிப் பேனாவை அதில் வைத்தாள். இன்னொரு பெக் ஊற்றினாள். கொஞ்சம் அருந்தினாள். நாற்காலியில் சாய்ந்து அங்கலாய்த்துக் கொண்டு புன்னகைத்தாள்.

வாசல் வரை வந்துவிட்ட கிருஷ்ணனுக்கு மோகம் அடக்க முடியவில்லை. அந்த இரவு அவனுக்குக் கிடைத்த அமிர்தத்தை எப்படியாவது அருந்திவிட வேண்டும் என்று துடித்தான்.

“கேன் ஐ கெட் அ டீ? இட்ஸ் கோல்ட் அவுட்ஸைட்” வாசலிலிருந்து சத்தம் போட்டான்.

“வை நாட்” உள்ளிருந்து சொன்னாள் மோகனா.

அவளது அறைக்குச் சென்று அமர்ந்தான். அவள் சமையலறைக்குள் சென்றிருந்தாள். மேஜையில் அவள் எழுதிக் கொண்டிருந்த நோட்டைப் பிரித்துப் பார்த்தான். அதில் இன்னும் சில கவிதைகள் இருந்தன.

உள்ளிருந்து மோகனா, “க்ரிஷ்! டீ இல்ல! பால் ஓக்கேவா?” என்றாள்.

“ஓக்கே மோனா! இட்ஸ் ஃபைன்”  

இரண்டு கப்புகளில் பால் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழையும் மோகனாவைப் பார்த்து,

“ஆர் யூ அ செக்ஸ் வர்க்கர்?” கேட்டான் கிருஷ்ணன்.

மறுபடியும் சிரித்தாள் மோகனா.

“ஜஸ்ட் ஸ்டாப் திஸ் கிடிங்” கொஞ்சம் காட்டமாகக் கேட்டான்.

“ஆமா க்ரிஷ்!”

“ஆமான்னா?”

“நா அதுதான்!”

“நெனச்சேன்! உன்னோட செட்யூஸிங் மூவ்ஸ்லையே தெரிஞ்சது”

“அடச்சீ! ஸ்டாப் இட்! எனக்கு உன் மேல ஆசையெல்லாம் ஒன்னும் கெடையாது! அது கவிதை எழுதும்போது ஏற்படுற பரவசம்! டான்கி லைக் யூ வில் நெவர் நோ தட் ஃபீல்! கெட் லாஸ்ட்” கோபத்தில் சீறினாள் மோகனா.

“ஓக்கே ஓக்கே! ஐ அம் சாரி!”

“சாரி ஃபார் வாட்”

“உன்ன தப்பா பேசுனதுக்கு என்ன மன்னிச்சிரு”

கேட்டதும் மறுபடியும் குபீரென்று சிரித்தாள்.

”க்ரிஷ்! யூ ஆர் ஜஸ்ட் ஆசம்! இல்லேன்னா என்கிட்ட போய் ஸாரில்லாம் கேட்பியா?”

“ஏன்? உங்கிட்ட கேட்க என்ன?”

“ப்ச்! அதெல்லாம் உனக்குப் புரியாது! என் டைரிய படிச்சியா?”

“ஆமா!”

“தேங்க்ஸ்”

“ஏன்”

“அத நீ மட்டும்தான் படிச்சிருக்க!”

“அப்டியா?”

”ஆமா”

பால் சூடாக இருந்ததால் கொஞ்சம் ஆற வைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்கள். பாலை மேஜையில் வைத்து நிமிரும்போது அவளுடைய உள்ளாடை கொஞ்சம் வெளியே தெரிந்தது. அது கிருஷ்ணனுக்கு சில்லென்று பட்டது.

“மோகனா! நா ஒன்னு கேட்டா கோச்சிக்க மாட்டியே?”

“என்ன கேட்கப் போறன்னு எனக்குத் தெரியுமே!”

“பெருசா என்ன கேட்டுட போறேன்…” என்றபடியே மோகனாவின் தோள்மீது கை வைத்தான் கிருஷ்ணன்.

கொஞ்சம் சினுங்கி, “என்ன பன்ற க்ரிஷ்?” என்றாள்.

சட்டென்று கையை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தை எடுத்து மேஜையில் விசிறினான்.

“மோனா! டேக் வாட் எவெர் யூ வாண்ட்! ஐ வாண்ட் யூ நவ்”

அதற்கும் அதே நக்கல் சிரிப்பை அவள் உதிர்த்தாள். இந்த முறை அது கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது.

“என்னடி? எதுக்கு சிரிக்குற?”

“டேய் கிச்சுனா! உனக்கு என்ன தெரியல?”

கிருஷ்ணன் திடுக்கிட்டு அவனது இருக்கையிலிருந்து கீழே விழுந்தான். அவனைக் கடைசிவரை கிச்சுனா என்று அழைத்துக் கொண்டிருந்தது அவனுடைய பள்ளித் தோழன் மோகன் மட்டும்தான். அதே மாதிரி மோகனாவும் அழைக்க, அவனுக்குத் திடுக்கென்று இருந்தது.

“ஏய் நீ யாரு?”

“ஹாஹா! நாதாண்டா மோகன்”

”வாட் த ஃபக்? நீயா மோகன்?”

“ஆமாண்டா! பத்து வருஷத்துக்கு முன்னாடி வீட்டவிட்டு ஓடிப்போன அதே மோகன்தான்”

கிருஷ்ணன் மயங்கியே விழுந்துவிடுவான் போலக் கிறங்கினான். பின்னர் நிதானத்துக்கு வந்து,

“ மோகன்! என்ன கோலம் இது?”

“ஹாஹாஹா!”

“ப்ச்! மொதல்ல இப்டி சிரிக்குறத நிப்பாட்டு! என்னன்னு சொல்லு”

“வீட்டவிட்டு ஓடிட்டேன்! அவ்ளோதானே உங்களுக்குத் தெரியும்?”

“ஆமா அதுக்கப்றம் என்ன ஆச்சு?”

“நா ஏன் இப்டி ஆனேன்? எனக்கு ஏன் ஆண்களைப் பார்த்தா ஆசை வந்தது? ஏன் அம்மாவோட டிரஸ்ஸ போட்டுக்கணும்னு தோணிச்சு? ஏன் மீசைய மழிச்சிட்டு வாழ விரும்பினேன்? ஏன் வீட்ல மாட்டிக்கிட்டு அவமானத்துல ஓடுனேன்? எதுவுமே எனக்குத் தெரியாதுடா! ஏதோ எல்லாம் நடந்துடுச்சு! பம்பாய்க்குப் போனேன்! என்னப் போல இருந்தவங்கள சந்திச்சேன்! என் ஆசைப்படி ஆய்ட்டேன்! அங்க எனக்கு இதுதான் தொழில்! ஒரு சின்ன பிரச்ன! அதான் இங்கேயே வந்துட்டேன்!”

கிருஷ்ணனுக்குக் கண்கள் கலங்கின. ஆனால், மோகனா முகத்தில் எந்த உணர்வும் இல்லை! எல்லாம் விரக்தி என்னும் ஓலத்துக்குள் ஒளிந்து மறைந்து கிடந்தன.

“டேய்! ஒரு செம்ம விஷயம் சொல்லட்டா! இங்க என்னைய யாருக்குமே அடையாளம் தெரியல. நம்ம எதிர்த்தவீட்டு மாமா, பீட்டி. சார், ஏன் ஒருவாட்டி நம்ம பழைய பிரின்சிபல் கூட இங்க வந்திருக்காரு! யாருமே என்னைக் கண்டு பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் ஃபைன் போட்ட நம்ம கணக்கு வாத்தியார்கூட போன மாசம் எங்கிட்ட ஃபைன் கட்டிட்டுப் போனாரு… ஹிஹிஹி!”

அந்தச் சிரிப்பு கிருஷ்ணன் மனதை எப்படியோ பிசைந்தது. ஆனாலும் அவன் மோகம், அங்கு தலைப்பட்டிருந்த கருணை உணர்வை ஜெயித்திருந்தது.

”என்னால நம்பவே முடியல டா”

“டேய்!”

“சாரி! மோகனா? கரெக்டா?”

“ஹாஹா! சரிதான்! அப்டிதான் கூப்டனும்”

“ம்ம்ம்”

கிருஷ்ணனின் தணியாத மோகம் இனிமேல் எப்படி அவளிடம் அதனை வெளிப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே இருந்தது. இன்றைக்கு ஏமாற்றம்தானா? அப்படி நம்மை நமது நண்பனே ஏமாற்றுவானா? என்றெல்லாம் அவனுக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

தான் யாரென்று சொன்னது மோகனாவின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தது. அவள் அவ்வளவு நேரம் செய்திருந்த போலிப் புன்னகை, கொஞ்சம் உண்மையாகத் தென்பட்டது. இன்னும் சகஜமாக உணர்ந்தாள்.

இருவரும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர். ஆவி விட்டுக் கொண்டிருந்த பால், ஆடைகட்டி அமைதியாய் இருந்தது.

மேஜையிலிருந்து காசை எடுத்து கிருஷ்ணனிடம் கொடுத்தாள் மோகனா.

“இல்ல பரவால்ல மோகனா! நீயே வெச்சுக்கோ!”

“டேய்! என்ன பிச்சக்காரின்னு நெனச்சிட்டியா?”

“சீச்சீ! ஏன் அப்டி நெனைக்குற?”

“வேற என்ன நெனைக்குறதாம்?”

“ஹும்ம்!! என் பிரன்டோட புது பிறப்புக்கு நா தர்ற ட்ரீட்!”

”ஓ! இது நல்லா இருக்கே! ட்ரீட்ட காசாவா தருவாங்க?”

“ஏன் வேற என்ன வேணும்? டின்னர் கூட்டிட்டுப் போகச் சொல்லுவியா?”

“க்ரிஷ்! உன்ன நா அவ்ளோ கஷ்ட படுத்திட மாட்டேன்!”

“நீ ரொம்ப ஸ்மார்ட் மோகனா!”

“இருந்தாகணுமே! இல்லேன்னா இந்த ஒலகம்…. சரி அத விடு!”

மறுபடியும் மௌனம்.

“க்ரிஷ்!”

“மோகனா!”

“யு வான்ட் தட் டு ஹாப்பென்?”

“என்னது?”

“நீ என் மூஞ்சில காச விசிறியடிச்சு கேட்டியே! அது…”

“ப்ச்! அத மறந்திடு! நா தெரியாம பண்ணிட்டேன்! சாரி”

“இல்லடா! அதுல தப்பில்ல! பரவசமா உணர்ந்து எழுதுற கவித சில சமயம் உண்மையாகுமாம்! நா பாரு என்னோட கனவுக் காதலனுக்குக் கடிதம் எழுதினேன்! நீ வந்து நிக்குற!”

“மோகனா! ஆர் யூ ஷூர்?”

“சோ யு வான்ட்?”

“யெஸ்! பட், உனக்கும் விருப்பமிருந்தா மட்டும்”

“தேங்க்ஸ் நண்பா! என் விருப்பத்தப் பத்தியும் மதிக்குறதுக்கு!”

“நீ ஏன் வேற வேல செய்யப் போகல மோகனா?”

“டேய்! அத பேச ஆரம்பிச்சா என்னோட மூட் மாறிடும்! சோ ச்சுப்!”

“சரி பேசல!”

கிருஷ்ணனுக்கு ஒரு பக்கம் தயக்கமாகவும் இன்னொரு பக்கம் கேலியாகவும் அது தெரிந்தது. தன்னுடைய ஃபேண்டஸிகளை நன்கு அறிந்திருந்த நண்பனைத் தான் இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்போம் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அவனுக்குமுன் மோகனா நாணி வெட்கப்பட்டு நின்றாள். அவளுக்கு அந்த வெட்கம் இயல்பாக வந்தது! அது அவளுக்கே புதிதாக இருந்தது. அவன் கண்களைப் பார்க்காமல் கால்களைப் பார்த்து நின்றாள். அவள் சேலை முந்தானையில் தொடங்கி அவளை முழுவதுமாய் துகிலுறித்தான். அவனது ஒவ்வொரு தொடுதலும் அவளுக்குள் இருந்த பெண்மையை இன்னும் மென்மையாக்கின.

எல்லாத் தொடுதலுக்கும் மயிர்க்கூச்சம் அடைந்தாள். தானும் தன் ஆடைகளை எல்லாம் அகற்றி, மெத்தையில் படுத்துக் கொண்டான். மோகனா பிடித்து வைத்த பிள்ளையார்போல அதே இடத்தில் வெட்கிக் காதல் கொண்டு நின்றிருந்தாள். மோகனா தன்னுடைய வாழ்க்கையில் முதன்முதலாகக் காமம் தாண்டிய காதலை உணர்ந்தாள். எந்த இரவும் இல்லாமல் அந்த இரவு அவள் கடவுளை வேண்டிக் கொண்டாள். தன் கனவுக் காதலனைக் கனவுக் கணவனாகவே பாவித்தாள். அது அவளுக்கு அத்தனை ரம்மியமான இரவாகத் தோன்றிக்கொண்டே இருந்தது. அவனது பக்குவம் அவளுக்குப் பிடித்திருந்தது.

நின்றிருந்தவளைக் கையைப் பிடித்து மெத்தைமேல் இழுத்தான். அவள் தடுமாறி அவன் மார்பின்மேல் விழுந்தாள். நுழைந்தவர் தொலையுமளவு அடர் மோகக் காடான அவள் கூந்தலுக்குள் கைகளை நுழைத்து அவளை முத்தமிட முனைந்தான். மோகனாவுக்கு வாழ்க்கையின் முதல் முத்தம்போல் அது தோன்றியது. இதழுக்கு அருகில் சென்றவன், அவளது மூச்சுக் காற்றின் உஷ்ணம் பட்டவுடன் சட்டென்று அவளை நகர்த்தி, மெத்தையில் படுக்க வைத்தான்.

அவள் ஒன்றுமே புரியாமல் தவித்தாள். விறுவிறுவென்று எழுந்து, அவள் எழுதிக் கொண்டிருந்த டைரியை எடுத்தான்.

“மோகனா! இதப் படி”

“எத டா?”

“இப்ப சொன்ன கவிதைய திரும்பப் படி”

“அது எதுக்குடா இப்ப?”

“படி! ஜஸ்ட் படி”

ஆம்!

இது விருந்தாளியற்ற விருந்திரவு!

நான் தூங்குவதற்குக் கிடைத்த

முதல் இரவு!!

வாசித்தாள்.

“இதுல என்னடா இருக்கு?”

“மோகனா! ஐம் ரியல்லி சாரி!”

“எதுக்குடா?”

“நான் கொஞ்சம் ஸ்லிப் ஆய்ட்டேன்! உன் கனவுக் காதலனா நா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்! அதான் இதைக் கேட்டேன்! ஆனா அப்றம் கவிதய இன்னொருவாட்டி படிக்கும்போதுதான் புரிஞ்சது இது நீ ஓய்வெடுக்க வெச்சிருந்த இரவுன்னு! என்னதான் இருந்தாலும் நீ என் பிரன்ட். நீ எப்டி இருந்தாலும் என்னோட பிரன்ட். அதுக்காக நா உன்ன யூஸ் பண்ணிக்கிட்டா, அப்றம் நம்ம நட்புக்கே அர்த்தம் இல்லாம போய்டும்! நீ ரெஸ்ட் எடு! நாளைக்கு நம்ம டின்னர் போலாம்!”

கேட்ட மோகனா கண்களில் நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. கிருஷ்ணனின் நட்புக்கு ஈடாகத் தன்னிடம் தானே இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் உயரம் அதைவிடப் பெரியது என்று தோன்றியது!

அந்த இடத்தில், ஐ லவ் யூ, தேங்க்ஸ் போன்ற எந்தச் சொல்லும் வெறும் சொல்லாகத்தான் போகும் என நினைத்தாள். அவன் தோளில் சாய்ந்து ஓவென்று அழுதாள். அவளைத் தேற்றி, அவள் ஆடைகளை எடுத்துத் தந்தான். இருவரும் உள்ளாடைகளுடன் மேஜையில் மறுபடியும் அமர்ந்தார்கள்.

“இந்தப் பாலைக் குடிக்கவே இல்லையே மோகனா!”

இரண்டு கின்னங்களையும் உயர்த்த, ஒன்றை அவள் பெற்றுக் கொண்டாள். இருவரும் ஒரு சிப் குடித்து முடிக்கவும்,

“ஹே ஹேய்! உனக்குப் பால் மீச முளைச்சிருக்கே” என்றான் கிருஷ்ணன் வேடிக்கையாக.

”சரி! அந்த மீசையாவது கொஞ்ச நேரம் இருக்கட்டும்!” என்று புன்னகைத்தாள் மோகனா!!

-22.02.2020


Comments

Post a Comment

Popular Posts