ஆடிய ஆட்டம் என்ன...



இளமையை வீணாய் ஆக்கி 
   இழிந்ததை மட்டும் கண்டு 
வளமையாம் நேர மெல்லாம் 
   வழுக்கியே விழச்செய் கின்ற 
தளமென வந்த டிக்டாக் 
   தடையினில் வீழ்ந்த திங்கே 
அளவிலா ததிலே நீங்கள் 
   ஆடிய ஆட்டம் என்ன! 

பொழுதெலாம் அதையே பார்த்துப் 
   போதைகள் தேடும் வண்டாய் 
முழுவதும் வீழ்ந்தீர், அந்தோ 
   முரடராய் மதிகெட் டோராய் 
இழிவெனும் காமம் மேவி 
   இளைஞரே போனீர், இன்றஃ 
தழிந்ததே டிக்டாக் கில்நீர் 
   ஆடிய ஆட்டம் என்ன!

பெண்கள்தம் உடல்கள் காட்டிப்
   பேரிடர் செய்த கோலம், 
உண்மைகள் நீக்கிப் பொய்யில் 
   உழன்றவர் கழித்த கோலம், 
வன்முறைப் பேச்செல் லாமும் 
   வாழ்வினைக் கெடுத்த கோலம் 
அண்மையில் தீர்ந்த தம்மா
   ஆடிய ஆட்டம் என்ன!

ஆடவர் காலை மாலை 
   அதிலுள்ள பெண்கள் இன்பம் 
தேடியே திரிந்த கேடும், 
   தேம்பியே அழுத கேடும், 
வாடியே சிலபேர் கத்தி 
   வாழ்க்கையை இழந்த கேடும் 
ஓடவே சென்ற டிக்டாக் 
   ஆடிய ஆட்டம் என்ன!

மக்களை மாக்க ளாக்கி 
   மனதினைக் குப்பை செய்யும் 
டிக்குடாக் செய்யும் தீங்கு 
   தீர்ந்ததே, இதற்குள் நாளும் 
சிக்கிய முதியோர் மாந்தர் 
   சிறுவர்கள் மீள்வார் இந்த 
அக்கரை இனிமே லேனும் 
   அழிந்திடா திருந்தால் நன்றே!! 

-விவேக்பாரதி 
30.06.2020






Comments

Popular Posts