உலகுள்ளவரை கிரேஸி


ஓராண்டாம் நீமறைந்து பல்லாண்டு 
பழகியதாய் உணர்ந்த நெஞ்சம் 
போராண்டு பின்மீண்டு வடிக்கின்ற 
கவியுனக்குப் போதுமாமோ 
பேராண்டு நீவென்ற வெற்றிகளும் 
பெற்றிகளும் பேச்சில் சொல்லச்
சீராண்டு கொண்டிருக்கும் கவிஞக்கும் 
இயன்றிடுமோ செப்பு கையா! 

இதழினிலே எப்பொழுதும் இளமைதவழ் 
புன்னகையும் இதயத் துள்ளில் 
மதலையெனப் பேதமிலா நட்புணர்வும் 
வாய்த்திருக்கும் வள்ளல் எங்கும் 
எதனிலுமே நகைச்சுவையை ஏற்படுத்தும் 
மாமனிதா எல்லா நாளும் 
விதவிதமாய் வெண்பாக்கள் யாத்தளிக்கும் 
கவிதையெனும் வித்தைக் காரா 

கவிதையிலே எழுத்துப்பணி தொடங்கியவா 
பின்னரதில் கலக்கி நாட்டின் 
செவிகளையும் விழிகளையும் இன்றுவரை 
ஆண்டிருக்கும் செம்மை வேந்தே
நவநவமாய்க் கற்பனைகள் சொல்லடுக்கில் 
நகைச்சுவைகள் நயக்கும் நல்ல 
தவமுடைய புதுஞானீ உயர்கிரேஸி 
மோகன்புகழ் செகத்தில் வாழ்க! 

வண்ணப்பாக் கவிதைகளும் வகைவகையாய்ச் 
சிறுகதையும் விருத்தம் வெண்பா 
எண்ணப்பாக் கலைக்கூடம் எதிலுமுயர்ப் 
புகழ்க்கூடம் இனிக்க நாவில் 
திண்ணப்பாக் கோடுசில வெற்றிலையும் 
சேர்ந்துவிளை யாடும் தீரம் 
உண்ணப்பா என்றுதினம் ரமணரசம் 
ஊற்றுகிற உணர்ச்சி வெள்ளம் 

மோகனெனும் உயிராகும் மோகனம்நின் 
வடிவாகும் மொத்தப் பித்தும் 
ராகமெனும் ஊதுகுழல் வித்தைசெய் 
கண்ணன்மேல்! ரசிக ரானோம்! 
ஆகுதியாய் வேள்வியிலே சிரிப்புடனே 
சிந்தனையும் ஆகச் சேர்த்து
வேகமுறும் கலிமறைய வித்திட்ட 
நினைவாழ்த்தி வணக்கஞ் சொல்வோம்!

ஹாசியத்தின் நாடாளும் மன்னாநின் 
அவைமுன்னம் அன்பாய் வந்து 
பேசியவிக் கவிதையிலே நீமகிழ்ந்தால் 
உன்னைப்போல் பெரியோர் சுற்றம் 
மாசிலாத நெஞ்சமொடு எம்பேச்சில் 
ஹாசியமும் மணக்கச் செய்வாய் 
கிரேஸியெனும் பெயரிந்த கிரகமிருக்கும் 
வரையிருக்கும்! கீர்த்தி யோடே!! 

-விவேக்பாரதி 
06.06.2020


Comments

Popular Posts