Posts

Showing posts from July, 2020

மாணவர் கம்பர் கழகம் | இல்லந்தோறும் இன்பத்தமிழ் | கவியரங்கம்

Image
மாணவர் கம்பர் கழகம் குரோம்பேட்டை, சென்னை நடத்திவரும் இல்லந்தோறும் இன்பத்தமிழ் என்னும் தொடர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று மாலை இணைய கவியரங்கம் நடைபெற்றது. "கம்பன் பேசிய நாடு" எனும் தலைப்பில் அதில் நான் வழங்கிய கவிதையும் நேரலையின் காணொலியும் இதோ.. கம்பன் பேசிய நாடு - கவிதை :  https://www.vivekbharathi.com/2020/07/blog-post_19.html காணொலி 

கம்பனும் பாரதியும் | இரட்டைக் கவிதை | பாம்பன் மு. பிரசாந்த் & விவேக்பாரதி

Image
காவியும் கருப்பும் இரட்டைக் கவிதைக்கு எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, அதற்கு முன்னர் நாங்கள் இணைந்து எழுதிய இரட்டைக் கவிதையையும் பதிவு செய்யும் ஊக்கத்தை அளித்தது.. அதற்காக முதலில் நன்றி.. சமுதாயத்தின் மேம்பாட்டைப் பாடிய இரு கவிஞர்கள் கம்பனும் பாரதியும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் சம்பாஷனை இது... அன்று நிகழ்ந்திருந்த சில செய்திகள் தன்னிச்சையாக எங்கள் கவிதைகளைக் கொண்டு சென்றது மறுக்க முடியாதது.. ஜெயஸ்ரீ, தீஷா, நித்தியானந்தா, வள்ளுவர் எல்லாம்.. இதையும் கேளுங்களேன்...

காவியும் கருப்பும் சந்தித்துக் கொண்டால்? | இரட்டைக் கவிதை | விவேக்பாரதி, பாம்பன் மு பிரசாந்த்

Image

காலமே நீ யார்?

Image
ஒவ்வொரு கணமும் இதுவொரு மயக்கம்  உற்றுப் பார்க்கிறேன் உயர்வது கலக்கம்  நீ ஓடுவாயா?  நடப்பாயா? எவ்விதம் எப்படி நீநிகழ் கின்றாய்  எங்களை எப்படி நீ சுமக்கின்றாய்? நீ எழுந்திடும் தீயா?  விழும் நீரா? தீர்வது திண்ணம் பிடிப்பது கடினம்  திணறிடும் போது நீசிரிக் கின்றாய்!  நீ தீண்டிடும் காற்றா?  வளி வீச்சா? சோர்வதும் மீண்டும் துடித்தெழும் போதும்  சோதனை எல்லாம் சுகப்படும் ஞானம்  நீ சொல்லுகிறாயா? செய்வாயா? பாட்டுகள் எதற்குப் பஞ்சனை எதற்குப்  படுத்துறங் காமல் பாடுவ தெதற்கு  நீ பாடுகிறாயா?  கேட்பாயா? ஆட்டங்கள் நாங்கள் அசைப்பது நீயாய்  அவசரம் நாங்கள் அமைதியில் நீயாய்  நீ ஆளுகிறாயா?  அடியாளா? சூழ்வது புதிர்தான் தெரிவது நீதான்  சுதந்திர வானில் நானொரு மலர்தான்  நீ சுழற்றுகிறாயா?  சுழல்வாயா?   வாழ்வது நானா? இலையது நீயா?  வண்ணங்கள் நீ! நான் வானவில் தானா?  நீ வார்த்தைகளா?  நான் வாக்கியமா?? -விவேக்பாரதி  19.07.2020

கம்பன் பேசிய நாடு

Image
(மாணவர் கம்பன் கழகம், குரோம்பேட்டை 18.07.2020 அன்று நடத்திய இணையவழிக் கவியரங்கில் வழங்கிய கவிதை) அழகான மாலையிலே... ஆர்ப்பரிக்கும் பறவைகள்  பழகுகின்ற மாமரம் படர்ந்திருக்கும் என்வீட்டு மாடிக்கு நானும் மாலை அழகுகண்டு ஏடுகளைப் புரட்டும் எண்ணத்தில் சென்றிருந்தேன்...  காய்த்திருக்கும் மாங்காயைக் காதற் கிளிகொத்த,  வாய்த்திருந்த மாம்பழத்தை வாகாய்க் காகங்கள்  கொத்திச் சுவையுணர, கொளுத்தும் கதிர்மறைய,  புத்தம் புதுநிறங்கள் புகழ்வானில் தோன்றிவர,  மாலை அழகையெலாம் மனதிற் சுவைத்தபடி  மேலும் காகிதத்துள் மெய்தொலைத்தேன்... அப்போது  பக்கத்து வீட்டில் படுத்தும் தொலைக்காட்சி  திக்கித் திணறித் தெளியபல மாற்றங்கள்..  கடைசியிலே அவர்வீட்டுக் காட்சி பேசியது,  தடபுடலாய்ச் சத்தம்.. “தலைப்புச்செய்தி” என கண்பார்த்து செவிகேட்ட காதற் காட்சியெலாம்  பெண்பார்த்தோர் வீட்டு பட்சணம்போல் கணக்கிழிய,  காது துளைத்த கடுந்தலைப்புச் செய்தியில்தான்  ஏதிருக்கும்? கேட்போமென் றெண்ணத் தோன்றியது..  சற்றே செவிமடுத்தேன்... சரமாரி பெய்ததுபோல்  குற்றம் குற்றம் குலைகுலையாய் மலைமலையாய்... சாதிகளால் கலவரங்கள் சட்டத்தில் பிரச்சனைகள்  ஓதுகிற கல்

பிரதோஷம்

Image
சூழ்கின்ற இருட்டுக்குள் ஒருவெளிச்சத் துளிகசிந்தே ஒளிர்த்தல் ஒப்ப, வீழ்கின்ற கனியொன்றை ஒருபறவை காப்பாற்றி விழுங்க லொப்ப, தாழ்கின்ற போதினிலே ஒருகைதான் நமைப்பிடித்துத் தடுக்க லொப்ப வாழ்கின்ற வகையறியா ஏழையனை வாழ்விக்க வருவா யப்பா... அப்பாநான் உன்னைத்தான் அழைக்கின்றேன் ஏனின்னும் அகலாப் மௌனம்? எப்பாடு நானின்னும் படவேண்டும் நின்காட்சி எழிலைக் காண? தப்பாமல் நாள்தோறும் உன்பேரும் உன்மனையாள் சக்தி பேரும் செப்பாமல் விட்டதில்லை கணக்கெல்லாம் நீயறிவாய் திகம்ப ரேசா சாட்டைநீ பம்பரம்நான் உனக்காநான் சொல்வதுநீ சரித்து விட்ட பாட்டைதான் என்பாதை பயணங்கள் உனைத்தேடி பாடிப் பாடி ஏட்டைத்தான் நான்நிறைத்தேன் உன்னுளத்தை நான்நிறைத்தல் எப்போ தையா? கூட்டைத்தான் சிறுபறவை பிரிந்துமிக நாளாச்சே கூட்டிக் கொள்நீ நீவேண்டும் நின்னருளின் இதம்வேண்டும் அஃதிருந்தால் நீண்டு முன்னே தீவேகம் கண்டாலும் நிலமதிர்வு கொண்டாலும் திணற மட்டோம் ஆவேசம் அறியாமை அழுகையெலாம் உன்முன்னே அவிழ்த்து வைத்தேன் நாவேண்டும் நீருன்றன் பெயரன்றோ தாகந்தீர் நமச்சி வாயம்!! -விவேக்பாரதி 18.07.2020

எதுவரை போகும் இது - பைந்தமிழ்ச் சோலை இணையக் கவியரங்கம்

Image
- விநாயகன் வாழ்த்து -  பிரணவப் பொருளின் சாரம்     பிளிறிடா துணர்த்தும் வேழம்  அரணென எந்த நாளும்     அன்பொடு புரக்கும் வேழம்  கரங்களோ ரைந்தி னாலே     கவிதைகள் காக்கும் வேழம்  சரணென நான்வணங்கும்     சங்கரி அணைக்கும் வேழம் மூசிகன் மேலமர்ந்து     முழுவுல களக்கும் வேழம்  பேசிடும் பொருள்களின்முன்     பேரரணாகும் வேழம்  ஆசைகள் புலன்கள் ஐந்தை     அடக்கிட அருளும் வேழம்  ஈசனால் தலைமா றுற்ற     ஈடிலாத் தெய்வம் வேழம்  வேழமா முதலே உன்னை     வேண்டினேன் அறிவை என்னுள்  ஆழமா யூன்றச் செய்வாய்     அகலெனில் ஒளிரச் செய்வாய்  வாழுமா றுதவி செய்வாய்     வாக்கிலே காவல் செய்வாய்  சூழுமா வினைகள் எல்லாம்     துறத்துவாய் துதிக்கை யாலே! - பைந்தமிழ்ச் சோலை வாழ்த்து -  முகநூலில் ஒருசோலை உருவானது - அது     முத்தமிழ்க் கவிபூக்கும் இடமானது  அகம்நூறு சுவைதேடி அதில்சேர்ந்தது - இந்த     அடியேனுக் கதுதானே உருசேர்த்தது  பகைகோடி வந்தாலும் பொடியாகிடும் - எங்கள்     பாவலர் அன்புமுன் பனியாகிடும்  மிகையல்ல என்சொல்லில் உண்மையுண்டு - எந்த     மேடையிலும் கூறுவோம் அவரிந்தொண்டு...  - கவியரங்கத் தலைமை -  நீந்தத் தெரிந்திருந்தும் - கடல்