எதுவரை போகும் இது - பைந்தமிழ்ச் சோலை இணையக் கவியரங்கம்- விநாயகன் வாழ்த்து - 

பிரணவப் பொருளின் சாரம் 
   பிளிறிடா துணர்த்தும் வேழம் 
அரணென எந்த நாளும் 
   அன்பொடு புரக்கும் வேழம் 
கரங்களோ ரைந்தி னாலே 
   கவிதைகள் காக்கும் வேழம் 
சரணென நான்வணங்கும் 
   சங்கரி அணைக்கும் வேழம்

மூசிகன் மேலமர்ந்து 
   முழுவுல களக்கும் வேழம் 
பேசிடும் பொருள்களின்முன் 
   பேரரணாகும் வேழம் 
ஆசைகள் புலன்கள் ஐந்தை 
   அடக்கிட அருளும் வேழம் 
ஈசனால் தலைமா றுற்ற 
   ஈடிலாத் தெய்வம் வேழம் 

வேழமா முதலே உன்னை 
   வேண்டினேன் அறிவை என்னுள் 
ஆழமா யூன்றச் செய்வாய் 
   அகலெனில் ஒளிரச் செய்வாய் 
வாழுமா றுதவி செய்வாய் 
   வாக்கிலே காவல் செய்வாய் 
சூழுமா வினைகள் எல்லாம் 
   துறத்துவாய் துதிக்கை யாலே!

- பைந்தமிழ்ச் சோலை வாழ்த்து - 

முகநூலில் ஒருசோலை உருவானது - அது 
   முத்தமிழ்க் கவிபூக்கும் இடமானது 
அகம்நூறு சுவைதேடி அதில்சேர்ந்தது - இந்த 
   அடியேனுக் கதுதானே உருசேர்த்தது 
பகைகோடி வந்தாலும் பொடியாகிடும் - எங்கள் 
   பாவலர் அன்புமுன் பனியாகிடும் 
மிகையல்ல என்சொல்லில் உண்மையுண்டு - எந்த 
   மேடையிலும் கூறுவோம் அவரிந்தொண்டு... 

- கவியரங்கத் தலைமை - 

நீந்தத் தெரிந்திருந்தும் - கடல் 
   நீளத்தில் சிக்கி உடல்மிக வாடியே 
சோர்ந்திடச் சென்றவனை - தன் 
   சொற்க ளெனும்கரம் கொண்டுயிர்ப் பாக்கிய 
ஏந்தலைப் போற்றுகிறேன் - குரு 
   என்றிங் கிலந்தையின் தாள்களையே தலை 
மாந்தி வணங்குகிறேன் - என்றும் 
   மங்கலம் வாழ்த்திட வேண்டுகிறேன்! 

- எதுவரை போகும் இது -

எனக்குள் நானே நுழைந்து பார்க்கும் 
   ஏகாந்தப் பயணம் - அதில் 
எத்தனை எத்தனை மாயத் தோற்றம் 
   எல்லாம் பல உலகம்! 
மனதைக் கடலாய் கடலில் கடுகாய் 
   மல்லாந்தோர் தருணம் - நான் 
மரித்துப் பார்த்தேன் மறுபடி பூத்தேன் 
   மலராய்ச் சில நிமிடம்! 

எனக்குள் நானே நுழைந்து பார்க்கும் 
   ஏகாந்தப் பயணம் - அதில் 
எத்தனை எத்தனை மாயத் தோற்றம் 
   எல்லாம் பல உலகம்! 

உணர்வைப் பார்த்தேன் உயரம் உயரம் 
   ஒவ்வொன்றும் மலைகள் - என் 
உயிரைப் பார்த்தேன் உணர்ச்சிக் கடலில் 
   உருளும் பெரும் அலைகள்!
கனவைப் பார்த்தேன் கற்பனை எல்லாம் 
   கடவுள் செய் கலைகள் - பின் 
கண்கள் பார்த்தேன் சூரியன் போலே 
   கண்மேல் ஒளி நிலைகள்! 

எனக்குள் நானே நுழைந்து பார்க்கும் 
   ஏகாந்தப் பயணம் - அதில் 
எத்தனை எத்தனை மாயத் தோற்றம் 
   எல்லாம் பல உலகம்! 

உடலின் ஒவ்வோ ரங்கமும் உள்ளே 
   உழைக்கும் எந்திரங்கள் - அதை 
உடமை எனவே நினைத்தல் அந்தோ 
   ஊமைத் தந்திரங்கள் 
எடையே இல்லை ஆனால் கனக்கும் 
   எண்ணம் மயிலிறகு - எது 
என்னை வருடிச் செய்யும் மாயம் 
   இழந்த பல இரவு! 

எனக்குள் நானே நுழைந்து பார்க்கும் 
   ஏகாந்தப் பயணம் - அதில் 
எத்தனை எத்தனை மாயத் தோற்றம் 
   எல்லாம் பல உலகம்! 

உள்ளே செல்லும் பயணம் இன்னும் 
   உள்ளே செல்கிறது - அதில் 
உள்ள நிறங்கள் எத்தனை எப்படி 
   ஊமை சொல்லுவது? 
கள்ளோ அமுதோ கவிதை வெறியோ
   காயச் சோர்வாமோ? - என் 
கண்ணை மூடிய ஆழ்நிலையில் நான் 
   காண்பது வேறாமோ? 

இதுவரை சொன்னவை எல்லாம் என்றன் 
   இதயம் சொன்ன கதை - நான் 
இயக்கம் நிறுத்தி தியானம் செய்த 
   இரவில் கண்ட விதை 
எதுவரை போகும் இதுவென் றறியா 
   ஏகாந்தப் பயணம் - உள்ளே 
எத்தனை எத்தனை மாயத் தோற்றம் 
   எல்லாம் பல உலகம்!!

-விவேக்பாரதி 
04.07.2020

Comments

Popular Posts