கம்பன் பேசிய நாடு


(மாணவர் கம்பன் கழகம், குரோம்பேட்டை 18.07.2020 அன்று நடத்திய இணையவழிக் கவியரங்கில் வழங்கிய கவிதை)

அழகான மாலையிலே... ஆர்ப்பரிக்கும் பறவைகள் 
பழகுகின்ற மாமரம் படர்ந்திருக்கும் என்வீட்டு
மாடிக்கு நானும் மாலை அழகுகண்டு
ஏடுகளைப் புரட்டும் எண்ணத்தில் சென்றிருந்தேன்... 

காய்த்திருக்கும் மாங்காயைக் காதற் கிளிகொத்த, 
வாய்த்திருந்த மாம்பழத்தை வாகாய்க் காகங்கள் 
கொத்திச் சுவையுணர, கொளுத்தும் கதிர்மறைய, 
புத்தம் புதுநிறங்கள் புகழ்வானில் தோன்றிவர, 
மாலை அழகையெலாம் மனதிற் சுவைத்தபடி 
மேலும் காகிதத்துள் மெய்தொலைத்தேன்... அப்போது 
பக்கத்து வீட்டில் படுத்தும் தொலைக்காட்சி 
திக்கித் திணறித் தெளியபல மாற்றங்கள்.. 
கடைசியிலே அவர்வீட்டுக் காட்சி பேசியது, 
தடபுடலாய்ச் சத்தம்.. “தலைப்புச்செய்தி” என

கண்பார்த்து செவிகேட்ட காதற் காட்சியெலாம் 
பெண்பார்த்தோர் வீட்டு பட்சணம்போல் கணக்கிழிய, 
காது துளைத்த கடுந்தலைப்புச் செய்தியில்தான் 
ஏதிருக்கும்? கேட்போமென் றெண்ணத் தோன்றியது.. 
சற்றே செவிமடுத்தேன்... சரமாரி பெய்ததுபோல் 
குற்றம் குற்றம் குலைகுலையாய் மலைமலையாய்...

சாதிகளால் கலவரங்கள் சட்டத்தில் பிரச்சனைகள் 
ஓதுகிற கல்விக்குள் உயர்ந்தபல மோசடிகள்
பெண்மேல் வலுக்கரங்கள் பேதையர்மேல் ஆசிடடி 
உண்மை செத்தகதை உலக நடப்புகளாய்… 

நாறி யிருக்கும் நாட்டுநிலை கேட்டபின்னே 
கூறி அதுகுறித்தோர் கும்பல் அமர்ந்துகொண்டு 
பட்டிமன்ற மென்று பலர்சிரிக்கத் தாம்பேசி 
கொட்டமடிக் கின்ற கோரக் காட்சியெலாம் 
கேட்டு மனஞ்சுளித்துக் கீழிறங்கி என்னறைக்குள் 
மீட்டும் அடைந்தேன் விதிநொந்து ஏடெடுத்தேன்… 

-**- 

நம்நாடு திகழ்கதைகள் எல்லாம் கேட்டு
நலமிழந்த வேளையிலே ஏடு கட்குள் 
கம்பன்செய் நாடுகளைப் பார்க்க எண்ணிக் 
காகதங்கட் குட்புகுந்தேன்… முதலில் கண்டேன் 
வம்பாகப் பெண்டிர்தம் நடைகள் கண்டு 
வன்னநடை பயின்றிருக்கும் அன்னம்… மற்றும் 
தம்பாலைக் கன்றெண்ணிக் கறக்கும் மாடு 
தவளைகள் தாலாட்டும் கோச லத்தை…

யானைப்போர் துகிற்கொடிகள் மகளிர் ஆடல் 
யவ்வணமே வடிவான பெண்கள் கூட்டம் 
வானுதலார் தனியூசல் கடையின் வீதி 
வனிதையர்கள் பந்தாடிக் களிக்கும் காட்சி 
மானுயர்ந்த நீர்நிலைகள் சோலை மாடம் 
மாடத்தில் புதுக்காதல் சீதை என்று 
நானிரண்டாய்க் கண்டவிடம் கம்பன் அங்கே 
நனியழகாய்ச் செய்சினிமா மிதிலை தன்னை… 

-**-

பம்பையை இராமன் சோகப் 
பாவத்தை அனுமன் என்னும் 
நம்பியை சுக்ரீ வன்றன் 
நலத்தினை வாலி என்னும் 
கொம்பனை அங்க தப்பேர் 
கொளுந்தினை மூன்றாம் நாடாய்க்  
கம்பனாற் கண்டேன் அந்தக் 
காட்டுநா டாங்கிஷ் கிந்தை… 

கடற்கரை ஓரம் சென்று
கடுமலை காற்றைத் தீண்டி 
கிடத்திய நாமத் தாலே 
கீழுறா தெழுந்த கற்கள் 
படர்த்திய பாலம் ஏறி 
பார்த்தவோர் இலங்கை நாட்டை 
அடுத்ததாய்க் கண்டேன் ஆகா 
ஆங்குள மக்கள் எல்லாம் 

உளத்திலே அரசன் செய்கைக்  
கொப்பிடா ரெனத்தெ ரிந்தேன் 
களிப்பிலே வாழ்ந்த ரன்றி 
கவல்வதே முகத்தில் காணேன் 
வளத்திலே நாகர் நாட்டு 
வனப்பினைப் போன்றிஃ தென்று 
அளப்பெரும் அனுமன் சொல்ல 
அதனையும் காதில் கேட்டேன்!

-**-

நாடு நான்கில் கம்பனின் 
நல்ல வர்ண னைகளை 
ஏடு சொல்ல மற்றுயான் 
ஏற்ற தான அறிவுரை 
ஈடு நோக்க வேண்டுமென் 
றிண்ணி யுள்ளி றங்கையில் 
பீடு கொண்ட குருமுனி 
பெயர்தி கழ்வ சிட்டரே, 

“பொறிக ளைந்த டக்கியும், 
பொருளில் கவனம் கணக்குமாய் 
நிறையும் வலிமை யொன்றினால் 
நிகழ்ப கைந டுக்கிடச் 
செறிவில் செய்யும் ஒன்றுதான் 
செம்மை யரசு, அன்னது 
குறிசி றந்த வாளதன் 
கூர்மையில் நடப்பதாம்”

என்றி ராமன் கேட்கவும்
எடுத்துச் சொல்லக் கேட்டனன் 
இன்றி ருக்கும் நிலையினை 
எண்ணி இன்னும் மூழ்கினேன்! 
நின்றி ருந்தாள் தேவதை 
நீள் தெருக்குள் தெய்வதம் 
ஒன்றென் றான திருவுளம் 
உறைந்து காற்றில் ஒருநொடி…

-**- 

காதலிலே தோய்ந்தெழுந்த நன்முத்தைப் 
பொற்கவிதைக் கனலை உள்ளே 
மோதவரும் தென்றலினை மிதிலையெனும் 
நாட்டினிலே மெதுவாய்க் கண்டேன் 
ஏது,வெறும் காதலெனின் ஏடுகளில் 
மட்டுந்தான் எனவே நொந்து 
மீதிவரும் கதைபார்த்தேன்! மின்னலொளி 
இடியோசை மிரட்டல் வெள்ளம்

-**- 

கிட்கிந்தை என்கிற காடு – அது 
கிளர்த்தும் குரங்குகள் ஆள்கின்ற நாடு 
உட்பகை யாலிரு மன்னர் – தமக் 
குள்ளில் பலசண்டை போட்டுக் கிடந்தார் 

வாலி எனும்பெரு வீரன் – அவன் 
வடிவை மிகவொத்த சுக்ரீவன் தீரன் 
மேலிரு கட்சிக்குள் சண்டை – எனில் 
மக்கள் மனங்களில் ஒற்றுமை கொள்ளை 

நாட்டுப்பற் றென்கிற போது – கட்சி 
நாடா திருப்பது தான்மிகத் தோது 
பாட்டுக்குள் கம்பனின் சேதி – எண்ணிப் 
பார்த்துச் சிரிக்கிறேன் இன்றுள நீதி… 

-**- 

கும்பிடு போடுவதும் – பல 
கோஷங்கள் கூட்டங்கள் பேசுவதும் 
தம்பட்டம் செய்யுவதும் – இவை 
தங்கள் வழக்கென் றரசியலார் 
எம்பிடுங் காலமிதில் – கம்பன் 
ஏடுகளில் இவை சொல்லுகிறான் 
நம்பிடும் நல்லமைச்சர் – குண 
நலங்களை இப்படிப் பேசுகிறான் 

"நேற்று நடந்தவையும் – இனி 
நேர விருப்பதும் தம்திறத்தால் 
சாற்றத் தெரிந்தவராய் – ஊழ்ச் 
சதியினை வெட்டும் திறத்தினராய் 
ஏற்றக் குலத்தினிலே – பிறப் 
பெடுத்தவ ரென்றுறு கல்வியெலாம் 
போற்றிடக் கற்றவராய் – பழி 
பூணில் உயிர்விடும் சாதியராய் 

தலைவர் சினத்தினிலும் – அவர் 
தம்முயிர் எண்ணிடா துண்மையதன் 
நிலையை உரைத்திடவே – தனி 
நேர்மையின் வீரம் புனைந்தவராய்க் 
கலைகள் அறிந்தவராய்த் – தமிழ்க்
கம்பன் உரைக்கும் அமைச்சர்களின் 
நலங்கள் தமைநினைத்தேன் – நம் 
நாட்டு நிலைகள் தமைநினைத்தேன்…" 

-**- 

கம்பனவன் பேசும் நாட்டுக்குள்ளே ஒரு 
காவலர் இல்லை!ஏன் குற்றமில்லை 
வம்புகள் இல்லை!ஏன் வாடலில்லை! தரும்
வள்ளல்கள் இல்லை!ஏன் வறுமையில்லை 

வீரர்கள் இல்லை!ஏன் எதிரியில்லை! உண்மை 
வீச்சுகள் இல்லை!ஏன் பொய்களில்லை! 
ஆராய்ச்சி செய்பவர் யாருமில்லை! ஏன் 
அனைவரும் கற்பவர் பேதமில்லை! 

நாட்டுக்குள் தானிங்கு காடடங்கும் அதில் 
நல்லதாய் ஓடிடும் ஆறடங்கும்  
நாட்டுக்குள் தானே மலையிருக்கும்! உள்ளே  
நல்ல களங்கள் அமைந்திருக்கும்!

இத்தனை வார்த்தையில் முக்குளித்தே நான் 
ஈடில் நிறைவினை எய்தியதும் 
சத்திய நாடு தழைப்பதற்கே வழி 
சாற்றுவேன் என்கிறான் கம்பபிரான் 

சரிசரி என்றதும் ஓர்விருத்தம் எனைச் 
சட்டென அங்கே நிறுத்தியது 
”அரியனைப் பீடம் அனுமனும் தாங்கிட 
அங்கதன் வாளினை ஏந்திநிற்க” 

என்னும் விருத்தம் படித்ததும் கம்பனின் 
ஏற்றச் சிரிப்பொலி கேட்கிறது 
என்ன புரிந்தது என்றவன் கேட்பது 
என்றன் கருத்தில் தெரிகிறது 

"அண்டிய சோதரர் அத்தனை செய்யினும் 
அரியனை தாங்கும் பெருமைதனைத் 
தொண்டர்கள் செய்கிற போதினில் தானொரு 
சொர்க்கம் புவியினை ஆளவரும்! 

நாட்டின் அரியனை தொண்டர்வசம், அதை 
நன்று பிடிப்ப தவரின்கரம் 
பாட்டு புரிந்த"தென் றேவுரைத்தேன் கம்பன் 
பரிகசித்தான் நான் கண்விழித்தேன்… 

கூடத்தில் எங்களின் வீட்டுக்குள்ளும் அந்தக் 
குட்டித் தொலைக்காட்சி பேசியது… 
நாடிதைக் காத்திட வேண்டிய ஆழ்மனம் 
நம்பணி என்னென் றெண்ணியதே!!

- விவேக்பாரதி 
18.07.2020
Comments

Popular Posts