காலமே நீ யார்?


ஒவ்வொரு கணமும் இதுவொரு மயக்கம் 
உற்றுப் பார்க்கிறேன் உயர்வது கலக்கம் 
நீ ஓடுவாயா? 
நடப்பாயா?

எவ்விதம் எப்படி நீநிகழ் கின்றாய் 
எங்களை எப்படி நீ சுமக்கின்றாய்?
நீ எழுந்திடும் தீயா? 
விழும் நீரா?

தீர்வது திண்ணம் பிடிப்பது கடினம் 
திணறிடும் போது நீசிரிக் கின்றாய்! 
நீ தீண்டிடும் காற்றா? 
வளி வீச்சா?

சோர்வதும் மீண்டும் துடித்தெழும் போதும் 
சோதனை எல்லாம் சுகப்படும் ஞானம் 
நீ சொல்லுகிறாயா?
செய்வாயா?

பாட்டுகள் எதற்குப் பஞ்சனை எதற்குப் 
படுத்துறங் காமல் பாடுவ தெதற்கு 
நீ பாடுகிறாயா? 
கேட்பாயா?

ஆட்டங்கள் நாங்கள் அசைப்பது நீயாய் 
அவசரம் நாங்கள் அமைதியில் நீயாய் 
நீ ஆளுகிறாயா? 
அடியாளா?

சூழ்வது புதிர்தான் தெரிவது நீதான் 
சுதந்திர வானில் நானொரு மலர்தான் 
நீ சுழற்றுகிறாயா? 
சுழல்வாயா?
 
வாழ்வது நானா? இலையது நீயா? 
வண்ணங்கள் நீ! நான் வானவில் தானா? 
நீ வார்த்தைகளா? 
நான் வாக்கியமா??

-விவேக்பாரதி 
19.07.2020

Comments

Popular Posts