பிரதோஷம்


(வீட்டில் தம்பி பிரதோஷ பூஜையை நடத்தினான். தெருவே கூடிவிட்டது. அம்மா பாட்டுப் பாடச் சொன்னதும் பிறந்தது இந்தப் பாட்டு... எங்கள் வீட்டு பிரதோஷ நாயகனுடன் பாடலும்...)

எத்தனை சுமக்கும் போதும்
இளைத்திடா மூட்டை ஐயா
அத்தனே உன்றன் முன்னம்
அதுவெறும் ஓட்டை ஐயா
பித்தனைப் போல நானும்
பிழைக்கிறேன் ஓரமாக
நர்த்தனம் காண வேண்டி
நிற்கிறேன் மூடனாக,

நந்திமேல் வருவாய், என்றன்
நலிவெலாம் களைவாய் என்று
சிந்தனை புனைய, நானும்
சிலிர்ப்பிலே பாடு கின்றேன்...
முந்திய மூட்டை இன்னும்
முதுகிலே நீ கழிக்கும்
அந்தநாள் தேடு கின்றேன்
அப்பனே உனக்கு முன்னே...

ஒருபுறம் உமையும் நிற்க
உடன்கன பதிநம் கந்தன்
இருவரும் தோன்ற என்றன்
இமைகளில் கண்ணீர் தோன்ற,
மருளுடன் அருளும் அற்று
மனதுடன் உடலும் அற்று
ஒருமையில் நம்மைக் காண
உருகினேன் உனக்கு முன்னே...

உடுக்கையாய் இதயந் தன்னில்
உள்ளொலி கேட்கும் போதும்,
விடுவதும் இழுக்கும் மூச்சு
விளைவதை உணரும் போதும்,
அடுகிற காலா உன்னை
அகத்தினில் கண்டேன் ஆனால்
படுகிற பாடு நீங்கப்
பாடினேன் உனக்கு முன்னே...

என்கடன் பாட லாகும்
எழுத்துதான் பூஜை யாகும்
என்பணி கவிதை ஆகும்
ஏந்தலே அறிவாய் நீயும்..
மின்கடன் மழை கொணர்தல்
விண்கடன் உயிர் நிறைத்தல்
மன்கடன் காத்தல் தானே
மன்னவா ஈசா வாழ்க!!

-விவேக்பாரதி
16.05.2020

Comments

Popular Posts