நடுக்குறு சந்தம்


கம்பர் சரயுநதியை வர்ணிக்கும் இடத்தில் “நடுக்குறு சந்தம்” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். தொட்டாலே உடல் நடுங்கும் அளவு குளிர்ச்சியை உடைய சந்தனம் என்பது அதன் பொருள். அப்படிப்பட்ட சந்தனத்தை எண்ணிப் பார்க்கும்போது தோன்றியது,

உதகை மலைகளை உரசும் முகில்களில்
   ஊர்ந்து பொழிந்திடும் மழைநீரை
நிதமும் மலர்களில் நிலவு தவழ்வதில்
   நிறையும் பனியுடன் மலர்த்தேனை
கதவைத் திறந்துநம் கன்னம் உரசிடுங்
   காற்று குளிர்த்தும் சுனைநீரை
புதுமைக் குடத்தினில் அடைத்துப் பலதினம்
   புகுத்திக் கடலினுக் கடிவைத்து

அருமை மணியுடன் முத்து பவளங்கள்
   அமிழ்த்திக் குடுவையைப் பதமாக்கி
வருடம் பலகழிந் தெடுத்துப் பனிவிழும்
   வளமைப் பொழுதினில் முடிநீக்கி
இருக்கும் குளும்பொருள் வருடும் பொழுதினில்
   இழையும் குளிர்மையை அழகேஉன்
அருகில் உணர்ந்தனன் கடவுள் படைத்தநீ
   ஆவி நடுக்குறும் சந்தனமே!!

-விவேக்பாரதி
09.09.2020

Comments

Popular Posts