பாரதியா சின்னப் பயல்?


”ஈற்றடி என்னும் இனிப்பு” என்ற வாட்ஸாப் குழுவில் இன்றைய ஈற்றடி தந்த பத்து வெண்பாக்கள் பாரதியின் வரலாற்றுச் சிமிழாக...

சின்னஞ் சிறுவயதில் சீறுபுலி வெண்பாவில்
தன்னை இகழ்ந்தான் தலைகவிழ - முன்கொடுத்த
ஓரடியில் சொல்லொன்றால் ஓங்கியடித் தானந்தப்
பாரதியா சின்னப் பயல்?

மாஞ்சோலை சுற்றி மனம்தொலைத்த பிள்ளையைப்போய்
ஊஞ்சலிலே இட்டாரவ் வூரார்தான் - தாஞ்சிரித்து
சீரடுக்கிச் சிந்திட்டுச் செல்லத்தை முத்திட்ட
பாரதியா சின்னப் பயல்?

தந்தைபோய் காசியிலே தஞ்சம்போய் வேதத்தில்
சிந்தைபோய் தேசத்தில் சீரும்போய் - முந்துசினக்
காரணத்தால் பூணூல்போய் கட்டைமீசை வைத்துவந்த
பாரதியா சின்னப் பயல்?

தீவிரவா தச்செயலைத் தீண்டாதீர் என்றந்த
தேவிதிருச் செல்லம்மா தேம்பிநிற்க - நோவெனில்நீ
வீரத் தமிழ்படிநான் மெச்சிடுவேன் என்றுசொன்ன
பாரதியா சின்னப் பயல்?

அரசனென்ன என்திண்ணை என்னவையென் றோர்நாள்
முரசறைந்து வேலை முடித்து - மருதையிலே
நேரெனவே ஆசிரியாய் நெஞ்சு நிமிர்த்தியவப்
பாரதியா சின்னப் பயல்?

பத்திரிகை வேலையிலே பார்த்துத் திலகரெனும்
மெத்தவொரு சிங்கத்தின் வால்பிடித்து - சத்தியத்தின்
வேரறியப் பாடிமன வேட்கையெலாம் தூக்கியவன்
பாரதியா சின்னப் பயல்?

விவேகானந் தர்சிஷ்யை வீட்டுப்பா டத்தால்
நிவேதனமாய் பெண்ணியத்தை நீட்டி - சிவாம்சமாய்
நேரளவு பெண்ணுக்கு நேர்ந்தபடி யேவாழ்ந்த
பாரதியா சின்னப் பயல்?

பொதுப்பேரில் தண்டிக்கப் போந்த தறிந்து
புதுச்சேரி வாசம் புகுந்து - விதவிதமாய்
ஊரதிக மாய்படிக்க உற்றவிலக் கியம்செய்த
பாரதியா சின்னப் பயல்?

அரவிந்தர் வவேசு ஐயர் உறவால்
குருகுள்ளச் சாமி குறியால் - பரவசம்
நேருரக் கண்டு நெருப்பான முண்டாசு
பாரதியா சின்னப் பயல்?

திருவல்லிக் கேணி திருமால்போல் மீசை
உருவத்தோ டானை உதற - கருமத்தின்
காரணமே தீர்ந்தெனக் காளிவசஞ் சென்றானப்
பாரதியா சின்னப் பயல்?

-விவேக்பாரதி
11.09.2020

Comments

Popular Posts