எனக்கெல்லாம் பாரதிதான்


இன்று பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாள்.
ஒரு தட்டு நிறைய நூடுல்ஸை ஒரு சிறுவனிடம் காட்டி, இதில் உனக்கு எது பிடித்திருக்கிறது என்று கேட்டால் அவனது பதில் என்னவாக இருக்கும்? அப்படித்தான் தோன்றும், என்னிடம் ஒவ்வொருமுறையும் உனக்கு பாரதியிடம் என்ன பிடிக்கும் என்ற கேள்வி வரும்போதெல்லாம்.
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வந்த என் பிறந்தநாளுக்கு, நிறைய வாசிப்பு பரிச்சயம் உள்ள என் சிற்றப்பா எனக்கு ‘பாரதிதாசன் கவிதைகள்’ புத்தகத்தைப் பரிசாகத் தந்தார். நான் கவிதை எழுதத் தொடங்கியிருந்த சமயம், அதுதான் நான் படித்த முதல் கவிதைப் புத்தகம்.
“கூடத்திலே மனப்பாடத்திலே விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால், அவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே’’
எட்டாம் வகுப்பில் எனக்கு விளங்கி, ஓர் இரவெல்லாம் சிரித்துத் தீர்த்த வரிகள். இதிலிருந்துதான் கவிதைக்கான என் அசல் தாகம் தொடங்கியது எனலாம். சில கவிதைகளில் இதுபோல் மீள முடியாமல் கரைந்த நொடிகளில், “பாரதிதாசன் கவிதையே இத்தகையது எனில் பாரதியின் கவிதைகள் எப்படி இருக்கும்?” என்று எண்ணத் தோன்றியது. கொஞ்ச நாட்களில் வீட்டுப் பரணிலிருந்து பாரதியார் கவிதைகள் என்ற பழைய புத்தகம் ஒன்றை என் அம்மா எடுத்துக் கொடுத்தாள். கொஞ்சம் அழுத்தினாலே கிழிந்துவிடும் தாள்கள், எவ்வளவு அழுத்தினாலும் நிமிர்ந்து நிற்கும் கவிதைகள். அதைப் படிக்கத் தொடங்கினேன்.
தமிழகத்தில் மணிக்கணக்கில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆண்டு அது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாரதி கவிதை படிப்பேன். வின்ச் துரையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யும் பேசிக் கொள்வதாக ஒரு கவிதை எழுதியிருப்பார் பாரதியார்.
“நாட்டினில் எங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்”
என்று போகும் அந்தக் கவிதைதான் பாரதியாரில் எனக்குப் புரிந்த முதல் கவிதை. அழுதேன். இன்னும் ஆழமாகத் தொடர்பு படுத்திக்கொண்டேன். இயக்குநர் ஞானராஜசேகரன் எடுத்த பாரதி படம் எனக்கு மனப்பாடம் ஆனது. பாரதிபோல முண்டாசு கட்டும் பழக்கம் பிடித்ததானது. அதற்கென்று வீட்டில் ஒரு தனி வேஷ்டியை வைத்திருந்தேன். ஒன்பதாம் வகுப்பு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தலையில் என் வேஷ்டி க்ரீடத்தை ஏற்றிக் கொண்டு, வீட்டு வாசலில் சத்தமாக பாரதி கவிதை முழக்கம் நடக்கும். நான் படிப்பதுதான் சந்தம், நான் பாடுவதுதான் மெட்டு. அப்போதிருக்கும் என் ஈர்க்குச்சி தேகம் பாகை ஏறியதும் எனக்கே தீக்குச்சி தேகமாய்த் தெரியும். நெஞ்சு நிமிர்த்தி நடந்து, பள்ளியில் திட்டு வாங்கிய கதையெல்லாம் உண்டு.
பாரதியைப் படிக்கப் படிக்க அவரது கவிதை நடை எனக்குப் பழக்கமானது. என் கவிதைகளிலும் அதுவே பிரதிபலித்தது. மூக்குக்குக் கீழே சில முடிகள் முளைத்ததும் வந்த ஆணவம் என்னை நாத்திகனாக்கியது. பாரதியின் பாடல்களில் ஊறிய பின்பு நான் சாக்தன் ஆனேன். சதா சர்வகாலமும் இப்போதுவரை வாய் உச்சரிக்கும் சொல் ‘சிவசக்தி’ ஆனது. கவிதையின் யாப்பு இலக்கணம் கற்கும் ஆர்வம் எழுந்ததும் அதற்கும் பாரதி கைக்கொடுத்தார். அவரது மரபுதான் நான் கற்கப் பிடித்துக்கொண்ட துடுப்பு. எழுதத் தொடங்கி சில காலம் வரை பாரதியாரை மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அவரது கட்டுரைகளில் அப்போது பெரிய ஈர்ப்பு இல்லை. அதனால் கவிதைகளை மட்டுமே கொண்டாடி வந்தேன். என் சொற்களும் பெரும்பாலும் அவரது அகராதியிலிருந்து வந்தவையாகவே இருந்தன. (சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்).
பிறகு மேற்படிப்புக்காக சென்னை. அதுதான் என் வாழ்வினை இன்னும் நன்கு உணர வைத்தது. இப்போது நான் எஸ்.பி.கிரியேஷன்ஸ் என்று அமரர் வீணை எஸ் பாலசந்தர் குடும்பம் நடத்திவரும் நாடகக் குழுவின், பாரதி யார்? என்ற தயாரிப்பில் பாரதிதாசன், தியாகி சுப்பிரமணிய சிவம், கனகலிங்கம் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். அதில் வரும் ஒரு வசனமே என் வாழ்க்கையானது. இசைக்கவி ரமணன் என்னும் வாழும் பாரதியின் கவிதைகளைப் படிக்கும் முன்பு என் கவிதைகள் வேறு விதமாக இருந்தன. அவற்றை அறிந்தபின் என்னுடைய கடினமான புலவர் நடை மாறியது. பாட்டுக்குள் எளிமை நுழைந்தது. அதற்கு இன்னொரு பெருங்காரணம் நான் ஆசானாகப் போற்றும் பாவலர் மா.வரதராசனும்தான். வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி விழாவில் வருடம் தவறாமல் கலந்துகொள்கிறேன். பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் அந்த அமைப்பு நடத்தும் ஒருநாள் கவிப்பொழிவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனக்கு பாரதி கொடுத்தது. அது மட்டுமா?
இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் தமிழ், நெஞ்சம் துதித்துக் கொண்டிருக்கும் சக்தியின் நாமம், முகத்தில் முறுக்கிக் கொண்டிருக்கும் மீசை, நெற்றிப்பொட்டின் குங்குமம், நாடக மேடைகள், புத்தகங்கள், வான்வெளிப் பயணங்கள், வெளிநாட்டு நாடக வாய்ப்புகள் என எல்லாமே பாரதி தந்ததுதான். பாரதி, இந்த ஒற்றைச்சொல் போதும். என் பெயருக்குப் பின்னால் அவர் பெயரை நானாகத்தான் சேர்த்துக்கொண்டேன். இலக்கியத்தில் எனக்குத் தந்தை பாரதிதான். அப்பா பெயரைப் பெருமையுடன் பிள்ளை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டேன்.
இன்னும் நிறைய சொல்லலாம்... என்ன சொன்னாலும் எஞ்சி நிற்கும் சொல்லெலாம். எனக்கு பாரதி எல்லாமுமாய் ஆனான் என்பதை பாரதியார் நினைவில்லம் திருவல்லிக்கேணியில் ஒரு கவிதையாகவே வாசித்தேன்.. அது, இது.
கூலிதர வில்லை; கொடுத்ததொரு கோடியென்பேன்!
நாலைந்து திங்களிலே நண்ணியதென் வாழ்க்கையென்பேன்!
ஏனடா இப்படிநீ என்னை அடைந்தாயென்
றானமட்டும் கேட்டும், அவனிடத்தே சொல்லில்லை,
எனக்கெல்லாம் பாரதிதான்! எழுத்தில், பேச்சில்
எப்போதும் சிந்தையெலாம் அவனே நிற்பான்!
தினமெல்லாம் அவன்கவிதை பாடிக் கொண்டே
சுற்றியதால் பசிமறந்த பிள்ளை யானேன்!
இனிப்பான தமிழமுதைப் பாலாய் ஊட்டி,
இளைப்பாற மடிகாட்டி, தலையைக் கோதி,
எனைநன்கு தேசியத்தில் தனிநீ ராட்டி,
ஆன்மிகத்தின் பொட்டிட்ட அவனென் அன்னை!
தத்துவங்கள், தமிழ்க்கவிதை, எந்தப் போதும்
தளராத புன்முறுவல், நடையில் வீரம்,
இத்தனையும் மகனுக்கு மரபாய்த் தந்தான்!
ஈணாதான் அவைமுந்தி இருக்கச் செய்தான்!
புத்துணர்ச்சி அன்றாடம் புதுப் பிறப்பு
பூணுவதாய் உற்சாகம் எல்லாம் என்னுள்
வித்தாக அவன்நட்டான் தந்தை பேரை
வீரமெனப் பின்தாங்கி சேய் திரிந்தேன்!
முதன்முதலாய்ச் சிந்தித்த தொடக்கத்தில் நான்
முறையின்றி ஆன்மிகத்தை நிந்தித்தேன்! என்
மதியுள்ளே அதைத்திருத்தி ஆன்மி கத்தை
மலைபோல நாட்டவந்தான்! நமது தேசம்
அதுதானே தெய்வமெனும் பாடம் சொன்னான்
அறியாமை இருள்நீக்கும் வெள்ளி யானான்
சதமென்று குருபாதம் பற்றினேனைச்
சக்திபதம் காணவைத்தான்! அவனென் ஆசான்!
பாரதிநான் பாராட்டும் நல்ல நண்பன்
பலவுண்டு ஒற்றுமைகள், எழுத வந்த
காரணமோ தமிழ்தவிர்த்த சின்னாள் தாக்கம்
கவிபாடத் தொடங்கியவப் பருவம் ஒன்று,
சீரெழிலி சக்தியின்மேல் காதல், சுற்றம்
சிரிக்கின்ற படிவாய்ந்த வாழ்க்கை ஒன்று,
வாரணம்மேல் இருவருக்கும் விருப்பம் ஒன்று
வாழ்த்திடுவேன் பாரதியை நண்பா என்று!
அன்னவனைக் காதலனாய்ப் புகழ்வதுண்டு,
ஆணுக்கும் மையல்வரும் கொஞ்சல் பாட்டால்
மென்மனதைத் தீண்டியவன் நாண வைப்பான்,
மேலும், ‘நாம் பெண்ணாக மாறிடோமோ
மன்னவனின் தோள்தழுவி புயங்கள் சேர்த்து
மணமாலை போல்தோளில் வாழ்ந்தி டோமோ’
என்றெல்லாம் பித்தைப்போல் எண்ண வைப்பான்
எழிலரசன் மொழிமாரன் பாட்டுக் கண்ணன்!
சிலபொழுது பாரதியைக் காதல் மிக்க
சிற்றிடையளாய்க் கனவில் பார்த்ததுண்டு!
மலரிதழ்கள் விரியவொரு சுரம் பிடித்து
மனம்மயங்கப் பாடிடுவாள், அவள்தன் பேச்சுக்
கலையழகில் மையலாகிக் கிடக்கும் என்னைக்
கவிபாடி அணைத்திடுவாள்! காதல் பொங்கும்
உலைநெஞ்சில் நெய்யிட்டு வளர்க்கும் மாயை
உருவத்தாள் பாரதியென் காதல் தேவி!
சொற்களிலும் கருத்தினிலும் விளையாட்டாகச்
சொல்லரிய விஷயமெல்லாம் சொல்லி வைத்த
அற்புதத்தால் பாரதியோர் குழந்தையாவான்!
அவன்செயல்கள் அவனுக்கே விளங்கா துண்மை!
சிற்பமென நிதம்சிரித்தல், சேட்டை செய்தல்,
சிந்துகின்ற மழலைமொழிப் பாட்டிசைத்தல்
விற்பனமாய்க் கதையுரைகள் செய்தான் அந்த
வித்தையரசிக்கு இளைய பிள்ளை அன்றோ!
சிந்துக்குத் தந்தையையென் பகைவனென்று
சின்னமனம் சொல்லிடவும் செய்தி உண்டு!
வந்தென்றன் நெஞ்சுக்குள் தங்குகின்ற
வன்முறைகள், தீயெண்ணம், காமம், கோபம்,
அந்தமிலா ஆங்காரம், இவற்றுக்கெல்லாம்
அவன்பகைவன்! ஆனாலென் ஆன்மாவுக்குச்
சொந்தமான சேவகன்தான்! குழப்பம் தீர்க்கச்
சொடுக்கும்போ தினிலெல்லாம் தீர்த்து வைப்பான்!
சொல்கவிதைச் சூக்குமத்தால் ஆட்சி செய்து
சொர்க்கமதை மண்ணுக்குள் கண்ணில் காட்டி
வல்லமையால் வானளந்து மண்ணை வென்று
வழுவாத அறிவென்னும் படையைக் கொண்டு
நல்லவனாய் ஊர்வாழ வளத்தை ஈவான்
ஞானாகா சத்திடையே நிற்கும் தெய்வம்!
எல்லையிலா ஆனந்தம் உயிர்க்குள் கூட்டும்
ஏடெல்லாம் தெய்வமவன் எழுத்தும் தெய்வம்!
இப்படி,
எங்கிருந்தோ வந்தான்; எமக்கெல்லா மாய்நின்றான்;
இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டோம்?
பாரதியின் நூல்கண்டேன், பாக்கண்டேன், பாக்கண்டேன்,
பாரதி ஆட்கொள்ளப் பைந்தமிழ்தான் உள்ளதுவே!!
-விவேக்பாரதி
11.09.2020

Comments

Popular Posts