வாணியம்மா கொச்சகக் கலி

இரண்டு நாட்களுக்கு முன், இரவு மணி 2 மணிவரை கவிஞர் சுந்தராவோடு வாட்ஸாப்பில் நடந்த உரையாடலில் கம்பனை வியந்து பாடத் தொடங்கி, கம்பனை ஆட்கொண்ட கலைவாணி எங்களையும் ஆட்கொள்ள பேச்சுத் தமிழிலேயே அந்தப் பேச்சியம்மாவுக்குப் பக்திப் பாட்டு அரங்கேறியது.

விவேக்பாரதி:

எங்கிருந்து கொண்டுவந்து கொட்டுனதோ? கம்பனுக்கே
அங்கிருந்து யாரள்ளி விட்டதுவோ? புரியலையே!
நெஞ்சவொரு சொல்லுக்குள்ள நெலாத்தூரம் அர்த்தம்வெச்சு
செஞ்சுப்புட்ட மகராசன் தேர்ந்ததெங்க? தெரியலையே!

சுந்தரராசன்:

கொட்டிக் கெழங்குவித்த கோமகளக் கூப்புடுவோம்!
அட்டியில்லா மவராசி, அவனுக்குக் கொடுத்ததெல்லாம்
எட்டநிக்கும் எங்களுக்கும் எறிஞ்சுவுடு; பொறுக்கியதத்
தட்டுவச்சுத் தின்னபடி தமிழ்குடிச்சு பொளப்போமே!

விவேக்பாரதி:

ஆமாண்ணே நெசந்தானே அவளுக்கே அதுதெரியும்
பூமேல நின்னவளும் புள்ளையத்தான் சோதிக்க
வேவாத வெய்யிலில வேண்டியிவன் பாடினதும்
பாவாம பையவந்தா பாரதிய கூப்புடுவோம்!

சுந்தரராசன்:

பாட்டம்மா; பாட்டனுக்கும் பேருவச்ச பாட்டியம்மா;
ஏட்டம்மா; தலையிலதான் எளுதிவச்ச மவராசன்
வூட்டம்மா; எங்களுக்கே ஒலகம்மா! பொலவனுங்க
கூட்டம்மா; சீலையப்போல் கொணத்தம்மா வாராயோ!

விவேக்பாரதி:

வெள்ளநெற தாமரையில் வெள்ளந்தி சிரிப்பம்மா;
உள்ளமெல்லாம் உன்னாட்சி ஒணர்த்துகிற நெனப்பம்மா;
கள்ளுக்கட போதபோல கல்விதரும் கெறக்கம்மா;
தள்ளிடா எப்போதும் தைரியத்த எறக்கம்மா!

சுந்தரராசன்:

ஏத்தம்மா; எனக்கேட்டா எறக்காம இடுப்புவச்சு
பாத்தம்மா; முந்தியத்தான் பயலுவளும் புடிச்சுகிட்டோம்!
கூத்தம்மா; பெத்தம்மா! கூட்டிவச்சுச் சொல்லுமிவ
மூத்தம்மா; செவத்தம்மா; முத்தந்தர வருவாம்மா!

விவேக்பாரதி:

அன்னத்துல இருப்பம்மா; அறிஞ்சவங்க குணத்தம்மா;
கன்னத்துல எப்போதும் கவிதைபூசும் கரத்தம்மா;
கிண்ணத்து பால்காட்டி கிட்டவந்து சோறூட்டி
எண்ணத்த காக்கவந்த எழுத்தம்மா.. பாரம்மா!

சுந்தரராசன்:

பாரம்மா நாங்கொனக்கு பாரமான்னு கேட்டாக்க
சீரகமா சிரிப்பம்மா; சேத்துவச்ச சரக்கெல்லாம்
சேறம்மா; நீநெல்லாச் சேரம்மா; வெளஞ்சதுமே
தாரம்மா வட்டியோட; தழுவம்மா குட்டிகள...

விவேக்பாரதி:

வாய்பேச முடியாத வாலிபன பேசவெச்ச;
தாய்பேச்சி உலகத்த சத்தியமா மாத்திப்புட்ட;
நாய்பேச எனக்கும்நீ நல்லதமிழ் கொடுத்தம்மா;
பேய்பேச்ச பொறுப்பம்மா! பெரியவூட்டு ராணியம்மா!

சுந்தரராசன்:

கொடுத்தம்மா வித்தயெல்லாம் கொடுத்ததையும் நீஒனக்கே
எடுத்தாக்க எப்புடிம்மா? எனக்கெங்க உனக்கெங்க
அடுத்தம்மா கேக்கயில அழுதாக்க சரிப்படுமா?
கடுத்தம்மா ஆவாம கைகொடுக்க வாடியம்மா!

விவேக்பாரதி:

எதுகேட்ட போதிலுமே எப்போதும் சிரிப்பம்மா;
பொதுவாநா பாடினதும் பொத்துவரும் ரசிப்பம்மா;
இதுவுனக்கா அதுவுனக்கா எப்போதும் குழப்பிவெச்சு,
எதுவுமிங்கே உனக்குன்னு எடுத்துக்குடும் குறும்பம்மா!

சுந்தரராசன்:

பெருவீட்டு மருமகளாப் பெருகவந்த மவராணி!
சிறுவூடாம் மனசுலயும் சிரிச்சுநிக்குங் கலவாணி!
முறகூறிப் பாடிவச்சோம் முன்னநின்னு பாடவச்சே!
ஒறவாவே கூடயிரு ஓமாத்தா கும்புடுறோம்!

விவேக்பாரதி:

அரிசியில பேரெழுதி ஆரம்பிச்ச வாழ்க்கையிது
வரிசையா வளரையில வளவளன்னு பலபடிப்பு
சரியாக அத்தனைக்கும் தாயிகலை வாணிநின்ன
வரிவரியா உனவடிச்சோம் வார்த்தையெல்லாம் நீதானே!!

-15.09.2020

Comments

Popular Posts