Posts

Showing posts from November, 2020

கார்த்திகைக் களிப்பு

Image
  -அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் வீதி விளக்குகளைக் கண்டு மனம் வியந்தபோது- வார்த்திடும் நெய்யில் வளர்ந்திடும் ஜோதி, வடிவங்களாய் ஆர்த்திடும் வானத்(து) அழகுவேடிக்கை, அளவுடனே வேர்த்திடும் மேகம், விளையும் ஒளிமயம் வீதியெல்லாம் கார்த்திகை வந்ததைக் காட்டிட நெஞ்சம் களித்ததின்றே !! -விவேக்பாரதி 29.11.2020

ஆடிப்பாவை

Image
– குமுதம் இதழ் நடத்திய கதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை – ”என்ன விட்டுப்போ! யூ டோண்ட் டிசர்வ் மி” இதுதான் சீமா என்னைப் பிரிகையில் சொன்ன வார்த்தைகள். சாராவைப் பார்க்கச் சென்ற மாலையிலும் அந்த வார்த்தைகள்தான் என் காதுக்குள். “எனக்குத் தகுதி இல்லன்னு சீமா எப்டி சொல்ல முடியும்?” எனக்குள் வெகுநாட்களாய் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்குத்தான் சாரா விடையாக வந்தாள். சாரா! ஊட்டி கான்வெண்டிலிருந்தே என்னுடன் படிக்கும் தோழி. எங்கள்  அப்பாக்கள் க்ளப்பில் சேர்ந்து சீட்டாடுவார்கள். ஓரிரு முறை பேசியிருக்கிறேன்  அவ்வளவுதான்! அந்தப் பரிச்சயத்தை மட்டுமே கொண்டு அவளை அழைத்திருந்தேன். எனக்கு அவள் உதவச் சம்மதித்தால், அந்தக் காரியத்தை முடித்துவிட்டு நான் இந்த நாட்டைவிட்டே பறந்துவிடத் தயாராயிருந்தேன்.  முகமெல்லாம் புன்னகையாய் வெண்ணிறச் சுடிதாரில் ஒரு புள்ளிமான் போல் நடந்து வந்தாள் சாரா. என் எதிரே அமர்ந்தாள். நான் கையசைக்க. அவளுக்கும் சுடச்சுட காஃபி வந்தது. பதட்டம் தாங்காமல் சூடான காஃபியை விழுங்கி நாக்கைப் பொசுக்கிக் கொண்டாள். அவளது பதட்டம் எனக்குப் பிடித்திருந்தது. பழைய கதைகள் கொஞ்சம் பேசினோம். ஆனால், என் கேள்வி

நம்பிக்கை நாயகி

Image
நம்பிக்கை என்னும் அமிழ்த மகளையே     நானிந்த வேளையில் தேடுகிறேன்... நாளை நகர்த்திட ஓடி உழைத்திட    நல்லதோர் கைப்பிடி நாடுகிறேன்! எம்பிக் குதித்திடும் என்றன் மனத்தினை    எப்படி தீர்ப்பது தெரியவில்லை, ஏனிந்த நாடகம் என்னில் நடக்குதென்(று)    என்றன் மனமும் அறியவில்லை! காலங்கள் தீர உழைத்திடுவேன்! என்    கடமைகள் யாவும் நடத்திடுவேன் கண்ணென நான்கொண்ட வேலையைப் பாவித்துக்    கவனங்களோடு முடித்திடுவேன் சாலப் பணிந்த சிறுவுளம் இன்னமும்    தாழ்ந்து படித்திட கூச்சமில்லை தாழும் கதிரே உயர்வடையும் எனும்    சத்தியம் கற்றேன் கவலையில்லை! சின்ன நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்திடும்    செல்வியந் நம்பிக்கை என்பதனால் சோரும் பொழுதினில் தூண்டும் சுடர்க்கரம்    தொட்டு மலர்த்துவள் என்பதனால் என்றன் செயல்களில் உள்ள நலங்களை    எடுத்துச் சொல்பவள் என்பதனால் இந்தப் பொழுதினில் நம்பிக்கையாம் அந்த    இறைவி வரவினை நாடுகிறேன்... ஓடும் வரைமனம் ஓடும் அதிலொரு    ஓய்தலில்லை சிறு தேய்தலில்லை ஒவ்வொரு பாதையும் கற்கும் அனுபவம்    ஒருபொழுதும் இதை மறக்கவில்லை தேடும் ஒளிகொஞ்சம் நேரில் எதிர்ப்படின்    சேரும் வழியிலென் வலியினிக்கும் தெம்பு பி

கோணாமல் இருக்கும் பேனா

Image
சொற்கள் கணத்த நெஞ்சோடு – நான்    தொடுவேன் என்று நினைத்தபடி புற்கள் மீதொரு கால்கொண்டு – தவம்    புகழும் கொக்காய் என்பேனா... கற்பனை என்னும் ஆறொழிகி – என்    கையின் வழியே தாள்களிலே தொப்பென வீழும் நொடிபார்த்தே – என்    தோளை உரசும் என்பேனா காதல் நெஞ்சில் வழிவதனால் – என்    கண்ணில் அமிலம் சுடுவதனால் மோதல் இன்றி கவிதைகள் – என்    மூளை நிரம்பி வருடுவதால் சாதல் இல்லா வார்த்தைகளை – நான்    தாளில் நிறைத்துக் காதலிக்குத் தூது விடுப்பேன் எனநினைத்து – என்    தொடுதலுக் கேங்கும் என்பேனா பேனா கொள்ளும் காத்திருப்பு – என்    பிரியம் வேண்டித் தொடர்கிறது நானாய்த் தொடுவேன் எனநினைத்து – அது    நகர்ந்து நகர்ந்து வருகிறது. வானாய் இருக்கும் என்மனது – முகில்    வந்தால் தூறும்; அதுவரையில் கோணா திருக்கும் பேனாவை – கைக்    கோடுக்க வேண்டும் காலத்தே!! –விவேக்பாரதி  2.11.2020

தெம்பு நதி தேவை

Image
மாலைமரி யாதையெலாம் தேவையில்லை என்றிருந்தால்    மாலைவரும் நேரமொரு துள்ளலுமில்லை – அது    வாய்த்திடாத நேரமொரு துவளலுமில்லை – சுடர்க் காலைவரும் என்றிரவைக் கண்மூடிக் கழித்திருந்தால்    கண்களுக்குள் வட்டநிலா பூப்பதுமில்லை – உடன்    காதலிக்கும் நட்சத்திரம் பார்ப்பதுமில்லை!   வேளைவரும் என்றுமட்டும் நெஞ்சகத்தில் நம்பி,உடன்    வேலைசெயச் சென்றுவிடு நிம்மதியுண்டு  – அதில்    வெற்றிவரும் நேரம்பெரு சன்னிதியுண்டு  – உன் தோளைமட்டும் நம்பியின்று தொடங்குகிற காரியங்கள்    தோற்பதில்லை ஒருநாளில் வெகுமதியுண்டு  – உன்    தொடக்கத்தை நீநம்பி அதைமதிநன்று…   கட்டிவிட்ட பொய்மூட்டை கடைசியிலே போயவிழ்த்தால்    காற்றினிலே கரைந்துவிடும் பூளைகளாகும் – வெறும்    கனவுகளால் அமைவதுவே நாளைகளாகும் – இன்று எட்டுவைக்கும் பாதைக்கொரு ஏற்றமிகு துணிச்சலுண்டு    எப்பொழுதும் இன்றுமட்டும் நிலையெனவாகும் – நேற்று    ஏறிவந்து நுரைகிளப்பும் அலையெனவாகும்   ஐந்தறிவு விலங்குகளே ஆனந்த லஹரியிலே    அன்றாடம் ஆடுவதைக் கொண்டிருக்கையில் – அவை    அன்பில்மட்டும் பார்வைகொண்டு கண்டிருக்கையில் – மனம் சிந்திக்கிற வழி,அதனை சாதிக்கிற கரமிருந்தும்    சின்