நம்பிக்கை நாயகி


நம்பிக்கை என்னும் அமிழ்த மகளையே 
   நானிந்த வேளையில் தேடுகிறேன்...
நாளை நகர்த்திட ஓடி உழைத்திட
   நல்லதோர் கைப்பிடி நாடுகிறேன்!
எம்பிக் குதித்திடும் என்றன் மனத்தினை
   எப்படி தீர்ப்பது தெரியவில்லை,
ஏனிந்த நாடகம் என்னில் நடக்குதென்(று)
   என்றன் மனமும் அறியவில்லை!

காலங்கள் தீர உழைத்திடுவேன்! என்
   கடமைகள் யாவும் நடத்திடுவேன்
கண்ணென நான்கொண்ட வேலையைப் பாவித்துக்
   கவனங்களோடு முடித்திடுவேன்
சாலப் பணிந்த சிறுவுளம் இன்னமும்
   தாழ்ந்து படித்திட கூச்சமில்லை
தாழும் கதிரே உயர்வடையும் எனும்
   சத்தியம் கற்றேன் கவலையில்லை!

சின்ன நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்திடும்
   செல்வியந் நம்பிக்கை என்பதனால்
சோரும் பொழுதினில் தூண்டும் சுடர்க்கரம்
   தொட்டு மலர்த்துவள் என்பதனால்
என்றன் செயல்களில் உள்ள நலங்களை
   எடுத்துச் சொல்பவள் என்பதனால்
இந்தப் பொழுதினில் நம்பிக்கையாம் அந்த
   இறைவி வரவினை நாடுகிறேன்...

ஓடும் வரைமனம் ஓடும் அதிலொரு
   ஓய்தலில்லை சிறு தேய்தலில்லை
ஒவ்வொரு பாதையும் கற்கும் அனுபவம்
   ஒருபொழுதும் இதை மறக்கவில்லை
தேடும் ஒளிகொஞ்சம் நேரில் எதிர்ப்படின்
   சேரும் வழியிலென் வலியினிக்கும்
தெம்பு பிறந்திடும் தெளிவு கிடைத்திடும்
   தீண்டுமந் நம்பிக்கை நாடுகிறேன்...

நாடுவ(து) என்தொழில் நம்பிக்கையே எனை 
   நடத்துதல் உன்றன் உரிமையன்றோ
நாமும் உறவெனில் நான்கொளும் ஆசைகள்
   நல்குதல் உன்றன் அழகல்லவோ
வேடம் கலை, உன் மௌனம் கழற்றிடு
   வேண்டியதைத் தந்து தூக்கிவிடு
வேகத்தில் சோகத்தில் நான்விழும் முன்னமே
   வெற்றி எனும்சொல்லை பாய்ச்சிவிடு!!    

–விவேக்பாரதி
9.11.2020 

Comments

Popular Posts