மாதங்களில் அவள் மார்கழி

 

அரங்கனையே
வேண்டி அகத்திருத்திப் பாட்டுச்
சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய்
யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப்
பூமகளே நின்றிருக்கும் போது! (1)
 
போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில்
மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின்
தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும்
பாமாலை காதல் படிப்பு! (2)
 
படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை
பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு
காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த
மாதர் விளக்கே மகிழ்வு! (3)
 
மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால்
அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன்
கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின்
முன்சிரிக்கும் உன்றன் முருகு! (4)
 
முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில்
உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி
படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான்
பிடித்தவராய் செய்தல் பிழைப்பு! (5)
 
புகலுவது காதலிடை பூணுவது பக்தி
அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள்
மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே
சீதமிகு பாடல்களோ செப்பு! (6)
 
செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்
எப்போதும் நெஞ்சில் எழுததிலை - கற்போர்க்குக்
காதலும் பக்தியும் காமமும் ஒன்றென
ஓதியதே உன்றன் உயர்வு! (7)
 
உயர்வென்று சொல்லி உயர்த்துவதை விட்டு
நயமென்று சொல்லி நயந்தேன் - சுயம்கண்ட
பெண்ணல்லோ நீயுன்றன் பெற்றியை ஊர்படித்தால்
மண்ணல்லோ சொர்க்கம் மலர்த்து! (8)
 
மலர்மாலை நீசூடி மாலுக்குப் போட்டாய்;
பலர்மாலைப் பாதப் படித்தாய்; – சிலர்மாலை
காப்பாள னாய்க்காணக் காதலனாய் நீகண்டு
பூப்படைந்தாய் என்னே புகழ் (9)
 
புகழரங்கம் நீதான் புகுந்ததனால் இன்று
மகிழரங்கம் ஆனதடி மாதே –  துகிலரங்கில்
தென்றல் துளசிமணம் தேக்கிவரும் வேளையிலே
மன்றம் மகிழும் மணந்து (10) 

-விவேக்பாரதி
17.12.2020

Comments

Popular Posts