ஏசுவை வரவேற்போம்


யூத நிலத்தினில் காத லரும்பிட
    உத்தமன் தோன்றுகிறான் – திரு
மாதவள் மேரியின் மேனியில் தெய்வத
    மாமணி தோன்றுகிறான்
பெத்தல கேமெனும் முத்தொளிர் பூமியில்
    பேரிறை தோன்றுகிறான் – ஒரு
சித்திரம் போலரும் மட்டுத் தொழுவினில்
    சிரிப்புடன் தோன்றுகிறான்
 
உலகவர் யாத்ரிகர் ஆகிடவே அவன்
    ஒளியுடன் தோன்றுகிறான் – பெரும்
உண்மையின் தூதுவன் மக்களை உய்த்திடும்
    உறுதியில் தோன்றுகிறான்
மலரினும் மெல்லிய உள்ளம் படைத்தவன்
    மண்ணிதில் தோன்றுகிறான் – அருள்
மாரி வழங்கிட ஏசு வெனும்கரு
    மாமுகில் தோன்றுகிறான்
 
அன்பெனும் மந்திரம் உச்சரிக்க சிறு
    ஆண்டவன் தோன்றுகிறான் – தன்
அற்புத சக்தியில் அறிவு புகட்டிட
    அதிசயன் தோன்றுகிறான்
துன்பங்கள் தாங்கியும் ஆசிகள் சேர்த்திட
    தூதுவன் தோன்றுகிறான் – சிறு
தொழுவினில் வைக்கோல் வெளியினில் புதிதொரு
    சூரியன் தோன்றுகிறான்
 
தேவதை யாவரும் பூமழை தூவிட
    தேவனே தோன்றுகிறான் – நம்
தேவைகள் யாவையும் தானெனச் செய்திடும்
    செய்கைகள் தோன்றுகிறான்
நாவுள மனிதர்கள் யாவரும் வாழ்த்திட
    நல்லவன் தோன்றுகிறான் – இந்த
நானிலம் முழுவதும் புனிதம் அடைந்திட
    நமக்கென தோன்றுகிறான்
 
ஆமேன் எனுமொலி ஆர்ப்பரிப்போம் அவன்
    அழகினை வரவேற்போம் – நம்
அறியாமை இருள் நீக்கிடவே வரும்
    அம்புலி வரவேற்போம்
நாமெனில் அவனென அவனெனில் நாமென
    நாடியே வரவேற்போம் – ஒரு
நள்ளிரவில் வரும் வெள்ளியவன் பதம்
    நமக்கென்றே ஏற்போம்!! 

-விவேக்பாரதி
08.12.2020

Comments

Post a Comment

Popular Posts