சுற்றி நில்லாதே போ பகையே

ஓவியம் : நன்றி முனீஸ்வரன் ( Art Muneeswaran | Facebook ) சுற்றி நில்லாதே போ! பகையே துள்ளி வருகுது வேல்! குன்ற மிருக்கும் இடங்களி லெல்லாம் குமர னிருப்பான் என்பதனால் நின்று சிரிக்கும் தெய்வம் ஒருநாள் நெஞ்சு திறக்கும் என்பதனால் வென்று கொழிக்கும் பகையை உண்மை வென்று முடிக்கும் என்பதனால் இன்று கிளைக்கும் வேர்கள் இனிமேல் இதயம் திறக்கும் என்பதனால் சுற்றி நில்லாதே போ! பகையே துள்ளி வருகுது வேல்! உண்மை அறிந்தோர் நெஞ்சத்தில் எவ் வூறும் இருக்கா தென்பதனால் வண்மை நிறைந்தோர் உள்ளத்தை ஒரு வசவு கிழிக்கா தென்பதனால் நன்மை இருக்கும் திசைபார்த்தே நம் நாடு நிலைக்கும் என்பதனால் தண்மை தன்மை வன்மை எல்லாம் தழைத்த நிலத்தார் என்பதனால் சுற்றி நில்லாதே போ! பகையே துள்ளி வருகுது வேல்! துள்ளும் துள்ளல் காற்றைக் கீறத் தோன்றும் மின்னல்கள் துளைத்த வானில் தொடர்ந்து மழையின் தூறல் பின்னல்கள் சொல்லும் வாய்கள் எதுவும் தெய்வச் சுவையைக் கண்டதிலை சுவையைக் கண்டார் முயன்றும் கூட சொல்லை விண்டதிலை! யாவும் ஒருநாள் சங்கமம் அதுதான் யாக்கைச் சரணாகும், யார்சொன்னாலும் மாறா உண்மை யார்க்கும் பொதுவாகும்!! -விவ