சவாலும் சமாளிப்பும்


பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் ஒரு சவால் விடப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக எப்போது பொழியும் என்று சூல்கொண்டிருந்த என் கவிதா மேகத்தை அது குளிர்த்த, ஒரு வெண்பா பிறந்தது.

சவால் இதுதான். “முட்டை, கறி, கருவாடு, மீன்” ஆகிய சொற்களைக் கொண்டு வெண்பா எழுத வேண்டும். ஆனால், அவை நேரடியான பொருள்களைக் குறிக்கக் கூடாது. 

இதோ அந்த வெண்பா 

முட்டை சுரத்தில் முகமீன் நினைவுகொண்(டு)
இட்டேன் நடையையென் ஏந்திழையே - ஒட்டிக் 
கருவாடு சேய்க்குக் கறிமுக் கடுக 
மருந்தோடு சேர்வேன் வழி! 

முட்டை - முள் தை 
சுரம் - பாலைவனம் 
முகமீன் - முகத்தில் மின்னும் விண்மீனான கண்கள் 
கருவாடு சேய் - கருவில் ஆடக்கூடிய குழந்தை 
கறி - மிளகு 
முக்கடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த திரிகடுக மருந்து. 

அதாவது, முள் தைக்கும் கொடும் பாலை வனத்தில், உனது முகத்தில் மின்னும் நட்சத்திரமான கண்களை மட்டும் நினைத்துக்கொண்டு, நான் நடையிட்டேன். எனது ஏந்திழையே! நீ உனது உடலோடு ஒட்டி, உன்றன் வயிற்றில் தங்கும் கருவாக ஆடும் நமது சேயை நீ கவனத்தோடு பார்த்துக்கொள்! அவனுக்கேற்ற மிளகு முதலிய முக்கடுக மருந்துகளைக் கொண்டு, அவனது ஆரோக்கியமே எனது தலையாய கடனாக எண்ணி விரைவில் வீடு வந்து சேர்வேன் என்று தலைவன் தலைவிக்கு தூதுவிடுகிறான்.

’மரியான்’ திரைப்படத்தில் நெஞ்சே எழு பாடல் நியாபகம் வந்தால், நீங்களும் என்னைப் போலவே யோசிப்பவர் என்று பொருள்... 

#சவாலும்சமாளிப்பும் 

-விவேக்பாரதி 
13.02.2021

Comments

Post a Comment

Popular Posts