பார்வதி பஞ்சகம் | இரட்டைக் கலித்துறை கவியரங்கம்

 -காப்பு- 

எதனைக் குறித்திங் கியம்பிட லாமென் றெனதுளத்தில்  
ஏட்டுக் கவிஞன் எழுப்பும் குரலுக் கெதிரில்நின்று  
நிதமும் வளரும் நினைவின் நரம்பினை நீவியதும்
நீட்டிய வாறே நிமிர்ந்தாள் கவிதா! நிகழ்வதற்குப்
பதிலாய்ப் புதிய பரவசம் தந்த படியினிதாய்
பாட்டுக் களியைப் படர்த்தி யதிலே பணியவைத்தாள்! 
உதித்த கணத்தில் உயிரில் சிலிர்த்தேன் உளம்குழைந்தே
ஊட்டிய சாற்றை உளறல் எனநான் உதிர்ப்பவனே!

-அவையடக்கம்- 

குருகட் டளையைக் குறித்துப் பணியும் குணமுடையேன்
குள்ள மனத்தை குறுக்க நினைக்கும் குளறுகவி
இருகட் டளைக்குள் இயம்பு கவிதை இசையரங்கில்
எள்ளின் முனையே இருக்கும் துணிச்சல் எழுப்பியதால்
தருகட் டளைக்குள் தமிழில் கவியில் சறுக்கல்வரின்
தள்ளாப் பெரியோர் தகவுடன் ஏற்கச் சபைநுழைந்தேன்
பெருகட் டளைகள் படைக்கும் கவிஞர் பொறுத்திடவே
பிள்ளை மொழியைப் பிரியத் துடன்நீர் பிடித்திடவே

-தலைவர் வாழ்த்து- 

இரட்டைக் கலியில் எழுதத் தகுந்த தெழிற்றலைப்பை
இளையவன் எண்ணி இருகை தடவி இருக்கையிலே    
விரட்டும் பொழுதில் விடுத்த மடலின் விடையெனவே
விளையா டெனவோர் தலைப்பினைத் தந்து விருப்பமுடன்
அரும்பொரு ளாக அறிவுடைத் தந்தை அவர்மகற்கு
அளித்திடும் நல்ல அறிவுரை போல அருளிவிட்டார்    
உரைப்பது போல உயிர்செய் இலந்தை உயருகவே
உளத்தில் அவர்தம் மலர்ப்பதம் தொட்டேன் உரைத்திடவே

கவியரங்கக் கவிதை – பார்வதி பஞ்சகம்- 

என்நா வினிலே எழும்பொற் றமிழும் இசையமுதும்
எழுதும் கவியும் இழையும் கருத்தும் உனதுடைமை
உன்னா சையெனில் உரிமை எனக்கா உமையவளே?
உழுமோர் கலப்பை உலகென தென்னல் உசிதமதோ?
அன்னாள் நிலவாய் அரும்பிக் கவிஞன் அகம்நிறைத்தாய்
அழுத குழந்தை அதற்குக் கவிதை அமுதளித்தாய்
இன்னா ளெனக்கும் அதுபோல் அருள்வாய் இறையவளே
இழிவில் சறுக்கும் எனையும் அதுபோல் உயர்த்துகவே (1)

உயரம் அடையும் கணத்தே கருவம் உருவெடுத்து
உள்ளம் முழுதும் அகங்கா ரமதன் அடிப்பிடித்து
மயங்கும் பொழுதில் மனத்தை நிறுத்தி வழிப்படுத்து
பள்ளம் அடையும் பொழுதில் உமையே பதப்படுத்து
அயரும் நிமிடம் அசைத்திடும் காற்றாய் அவதரித்து
அள்ளக் குறையா அறிவைப் புதுக்கி அணைத்துவிடு
துயரும் சுகமும் துடைத்திடும் நீதான் துணையெனக்கே
துள்ளும் வடிவேல் கொடுத்துச் சிரித்த சுடர்விளக்கே (2)

விளக்கினில் மாண்டிடும் விட்டில் எனநான் விழுந்தழவும்
விம்மிக் கிடக்கும் தருணம் உமையே விசையுடன்நீ
உளத்தினில் வந்துன் உரிமை செலுத்தி உயர்த்திவிடு
உம்மென் றிருக்கும் உறுதியை விட்டே உதவிவிடு
அளவறி யாமல் அலையும் எனக்குன் அமைதியையும்
அம்மா உனதருள் ஆட்சியில் சின்ன அடிநிலையும்
வளமெனக் கேட்பேன் வரமாய்க் கொடுப்பாய் வழியமைத்தே  
வம்புசெய் யாமல் மலர்ப்பதம் தந்து மலர்த்துகவே (3)

மலர்களில் என்றன் மனமொரு பூவாய் மலரடியில்
மண்டியி டும்நாள் மறுமை தொலையும்! மரபறிந்தேன்! 
உலகம் மறந்துன் உயர்ப்புகழ் பாடும் ஒருநொடியில்
உண்டி மறப்பேன் உனதுரு காணும் உதயங்களில்
கலகம் அறுத்துக் கடைவழி தேறும் கதியருள்வாய்
கண்டு துதிக்கக் கவிதைகள் தந்து கனவிழைப்பாய்
விலகி நெறியில் பிறழ்கிறேன் என்றால் வினைதடுத்தே
விண்டுரை செய்தற் கரியாய் அனைத்திலும் வித்தகியே (4)

வித்தகன் என்றெனை விற்பனர் சொல்லும் விதத்தினில்நீ
மிச்ச மிலாமல் உலகவர் யாவரும் மெச்சிவிட
சத்தியம் என்னும் சமர்த்தில் நகரும் தரமருள்வாய்
தச்சர் மரத்தைச் செதுக்குதல் போலச் செதுக்கிடுவாய்
பக்தர்கள் நெஞ்சில் புதுநட மாடும் பரத்திறைவி
பச்சைக் குழந்தை பலம்பெற வைக்கும் படைமுதல்வி  
உத்தமி ஈசர் உடலொரு பாதிக் கொருத்திநீயே
உச்சித் திலக மெனக்கதிர் தன்னை உடுப்பவளே! (5)

இதில் இருக்கும் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் இரண்டு கட்டளைக் கலித்துறைகள் ஒளிந்துள்ளன. அவை முறையே 

-காப்பு- 

எதனைக் குறித்திங் கியம்பிட லாமென் றெனதுளத்தில்
நிதமும் வளரும் நினைவின் நரம்பினை நீவியதும்
பதிலாய்ப் புதிய பரவசம் தந்த படியினிதாய்
உதித்த கணத்தில் உயிரில் சிலிர்த்தேன் உளம்குழைந்தே

ஏட்டுக் கவிஞன் எழுப்பும் குரலுக் கெதிரில்நின்று  
நீட்டிய வாறே நிமிர்ந்தாள் கவிதா, நிகழ்வதற்குப்
பாட்டுக் களியைப் படர்த்தி யதிலே பணியவைத்தாள்
ஊட்டிய சாற்றை உளறல் எனநான் உதிர்ப்பவனே

-அவையடக்கம்- 

குருகட் டளையைக் குறித்துப் பணியும் குணமுடையேன்
இருகட் டளைக்குள் இயம்பு கவிதை இசையரங்கில்
தருகட் டளைக்குள் தமிழில் கவியில் சறுக்கல்வரின்
பெருகட் டளைகள் படைக்கும் கவிஞர் பொறுத்திடவே

குள்ள மனத்தை குறுக்க நினைக்கும் குளறுகவி
எள்ளின் முனையே இருக்கும் துணிச்சல் எழுப்பியதால்
தள்ளாப் பெரியோர் தகவுடன் ஏற்கச் சபைநுழைந்தேன்
பிள்ளை மொழியைப் பிரியத் துடன்நீர் பிடித்திடவே

-தலைவர் வாழ்த்து- 

இரட்டைக் கலியில் எழுதத் தகுந்த தெழிற்றலைப்பை
விரட்டும் பொழுதில் விடுத்த மடலின் விடையெனவே
அரும்பொரு ளாக அறிவுடைத் தந்தை அவர்மகற்கு
உரைப்பது போல உயிர்செய் இலந்தை உயருகவே

இளையவன் எண்ணி இருகை தடவி இருக்கையிலே  
விளையா டெனவோர் தலைப்பினைத் தந்து விருப்பமுடன்  
அளித்திடும் நல்ல அறிவுரை போல அருளிவிட்டார்
உளத்தில் அவர்தம் மலர்ப்பதம் தொட்டேன் உரைத்திடவே

-கவியரங்கக் கவிதை – பார்வதி பஞ்சகம்- 

என்நா வினிலே எழும்பொற் றமிழும் இசையமுதும்
உன்னா சையெனில் உரிமை எனக்கோ உமையவளே
அன்னாள் நிலவாய் அரும்பிக் கவிஞன் அகம்நிறைத்தாய்
இன்னாள் எனக்கும் அதுபோல் அருள்வாய் இறையவளே

எழுதும் கவியும் இழையும் கருத்தும் உனதுடைமை
உழுமோர் கலப்பை உலகென தென்னல் உசிதமதோ
அழுத குழந்தை அதற்குக் கவிதை அமுதளித்தாய்
இழிவில் சறுக்கும் எனையும் அதுபோல் உயர்த்துகவே

உயரம் அடையும் கணத்தே கருவம் உருவெடுத்து
மயங்கும் பொழுதில் மனத்தை நிறுத்தி வழிப்படுத்து
அயரும் நிமிடம் அசைத்திடும் காற்றாய் அவதரித்து
துயரும் சுகமும் துடைத்திடும் நீதான் துணையெனக்கே

உள்ளம் முழுதும் அகங்கா ரமதன் அடிப்பிடித்து
பள்ளம் அடையும் பொழுதில் உமையே பதப்படுத்து
அள்ளக் குறையா அறிவைப் புதுக்கி அணைத்துவிடு
துள்ளும் வடிவேல் கொடுத்துச் சிரித்த சுடர்விளக்கே!

விளக்கினில் மாண்டிடும் விட்டில் எனநான் விழுந்தழவும்
உளத்தினில் வந்துன் உரிமை செலுத்தி உயர்த்திவிடு
அளவறி யாமல் அலையும் எனக்குன் அமைதியையும்
வளமெனக் கேட்பேன் வரமாய்க் கொடுப்பாய் வழியமைத்தே

விம்மிக் கிடக்கும் தருணம் உமையே விசையுடன்நீ
உம்மென் றிருக்கும் உறுதியை விட்டே உதவிவிடு
அம்மா உனதருள் ஆட்சியில் சின்ன அடிநிலையும்
வம்புசெய் யாமல் மலர்ப்பதம் தந்து மலர்த்துகவே!

மலர்களில் என்றன் மனமொரு பூவாய் மலரடியில்
உலகம் மறந்துன் உயர்ப்புகள் பாடும் ஒருநொடியில்
கலகம் அறுத்துக் கடைவழி தேறும் கதியருள்வாய்
விலகி நெறியில் பிறழ்கிறேன் என்றால் வினைதடுத்தே

மண்டியி டும்நாள் மறுமை தொலையும் மரபறிந்தேன்
உண்டி மறப்பேன் உனதுரு காணும் உதயங்களில்
கண்டு துதிக்கக் கவிதைகள் தந்து கனவிழைப்பாய்
விண்டுரை செய்தற் கரியாய் அனைத்திலும் வித்தகியே

வித்தகன் என்றெனை விற்பனர் சொல்லும் விதத்தினில்நீ
சத்தியம் என்னும் சமர்த்தில் நகரும் தரமருள்வாய்
பக்தர்கள் நெஞ்சில் புதுநட மாடும் பரத்திறைவி
உத்தமி ஈசர் உடலொரு பாதிக் கொருத்திநீயே

மிச்ச மிலாமல் உலகோர் எனையே மெச்சிவிட
தச்சர் மரத்தைச் செதுக்குதல் போலச் செதுக்கிடுவாய்
பச்சைக் குழந்தை பலம்பெற வைக்கும் படைமுதல்வி
உச்சித் திலக மெனக்கதிர் தன்னை உடுப்பவளே! 

–விவேக்பாரதி
27.01.2021

Comments

Popular Posts