சிவபெருமான் அழுவாரா?


நிந்தாஸ்துதி என்பது பழிப்பது போல புகழ்வதில் சேரும். இதனை தூற்றாப்போற்றி என்று அருமையாக தமிழாக்கியிருக்கிறார் பாவலர் மா வரதராசன். அவர் வழியில் சிவன் மீது எழுதிய தூற்றாப்போற்றி. 

என்னதான் துக்கமோ எப்போதோ காடுபோனாய்  
தின்னும் விஷம்குடித்தாய் தீராமல் – இன்னும் 
கழுத்தில் அரவணிந்தாய் கையோடு கொண்டாய் 
அழுவையோ நீயும் அரா??

கருத்து : 

சிவபெருமானே! உனக்கு அப்படி என்னதான் துக்கமோ? சின்னஞ் சிறுவயதிலேயே சுடுகாட்டுக்குச் சென்றுவிட்டாய் (சுடுகாட்டில் சிறுவயது சிவன் தூங்குவது போல் உள்ள படம் நினைவுக்கு வருகிறதா?) சுடுகாட்டில் வாழச் சம்மதித்தது பற்றாமல், உடலையும் ஆவியையும் சேர்த்துத் தின்னும் விஷத்தை எடுத்து மடமடவென்று குடித்தாய். பின்னர் அதுவும் தீராமல் இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி, விஷத்தின் மூலமாக பாம்பையே உன் கழுத்தில் அணிந்துகொண்டாய், கையில் பிச்சை எடுக்க ஓட்டை ஏந்தி நின்றாய். ஒரு மனிதன் இழிவாக நினைக்கும் அத்தனை காரியங்களும் உனக்கு நடந்து விட்டதே, ஓரத்தில் தனியாய் உட்காந்து நீதான் அழுது கண்ணீர் வடிப்பாயோ? சொல்வாய் அரனே! 

–விவேக்பாரதி 
27.03.2021

Comments

Popular Posts