இசைக்கவிக்கு பிறந்தநாள்


புயலொன்று பூவாக அவதரித்தாய் 
புன்னகை ஒன்றையே தினம் தரித்தாய் 
இயல்பாக இறைவாழும் மனம் படைத்தாய் 
இன்பத்தை மொத்தமாய் விலைக்கெடுத்தாய் 
சுயலாபம் பாராமல் சொல் தொடுத்தாய் 
சுந்தரா அன்பர்க்கு சுகம் கொடுத்தாய் 
அயலார்கள் இல்லாத வாழ்வமைத்தாய் 
அடியனை மனமேற்றி அருள் கொடுத்தாய் 

அன்னம் கொடுக்கையில் தாயின் கைகள் 
அன்பாய் அதட்டினால் தந்தை நெஞ்சம் 
முன்னம் நடக்கையில் அண்ணன் பாட்டை 
முறுவலிக்கும் போது சின்னப் பிள்ளை 
இன்னும் எனக்கொரு குருவின் ரூபம் 
இசையோடு கவிதைகள் பொழியும் போது 
மன்னாதி மன்னனென மாறும் தோற்றம் 
மண்மீதில் நீதெய்வம் செய்த ஊற்றம் 

கவிதையா செய்கிறாய் இல்லை அந்தக் 
ககனத்தை பால்வெளியை சொற்க ளாலே
தவம்செய்த படிதட்டி பொடித்தெ டுத்து 
தரமான தெய்வீகச் சாறு சேர்த்து 
சுவைகூட்ட இசையெனும் அமுதம் பெய்து 
சுண்டும்வரை யில்காய்ச்சி ஆற வைத்து 
செவிகட்குள் இளந்தங்க வண்ணத்தில் நீ 
சேர்க்கிறாய் மயங்கினோர் உன்னைச் சுற்றி 

திருவான தமிழைநீ பற்றிக் கொண்டாய் 
திறம்கண்டாய் கவிஞனென ஆகி விட்டாய் 
பரமான ஒருத்தியைப் பற்றிக் கொண்டாய் 
பறவையானாய் அவளின் பக்தன் ஆனாய் 
வரமாக மனையாளைப் பற்றிக் கொண்டாய் 
வார்த்தைகள் இல்லாத ரசிகன் ஆனாய் 
குருவான சிவன்பாதம் பற்றிக் கொண்டாய் 
குழந்தையானாய் உலகில் மனிதன் ஆனாய் 

இன்றைக்குப் போலின்னும் ஆண்டு நூறு 
இருக்கின்ற நலத்தையே இறை படைக்க 
என்றைக்கும் வாழ்கின்ற காவியங்கள் 
எழுத்துருவில் உன்றனிரு கை படைக்க 
அன்றைக்கு போல்நாடு மாறும் வேளை 
ஆனந்த துளிகளுன் கண் படைக்க 
கன்றொன்று சிறுகவிதை நான் படைத்தேன் 
கன்னம் இருக்கிறதுன் முத்தம் எங்கே??

–-விவேக்பாரதி
30.03.2021

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி