Posts

Showing posts from April, 2021

சிண்ட்ரல்லாவின் சிறகு

Image
தூக்கம் எழுந்து பார்த்த குட்டி சிண்ட்ரல்லாவுக்கு பின்னால் சின்னதாய் இறக்கை முளைத்திருந்தது! முதுகைக் கூசிக் கொண்டிருந்ததை குளிக்கையில் கண்டுபிடித்த அந்தக் குட்டி தேவதை, வாளியை உதைத்ததும் வாட்டர் ஹீட்டர் உயரம் பறந்தாள்! வேகமாக உடைமாற்றி சில இட்லிகளை இரையாக்கி அதை அவள் தோழிக்கு சொல்ல நினைத்தாள்! ”யூனிபார்ம் போடாதே இன்னிக்கு நீ லீவு” அம்மா சத்தமிட்டாள்! ஒன்றும் புரியாமல் தோழியிடம் சொல்ல முடியாத துக்கம் கப்பிய முகத்தை ஒன்றரை முழம் தூக்கி ஓரத்தில் அமர்ந்தாள்! அத்தை சிரித்தே வந்தாள் அள்ளி மஞ்சள் குங்குமம் வைத்தாள் மர ஓலை அறை செய்தான் முரடன் மாமன் அம்மாவுடன் சேர்த்து அவளும் அன்று சேலை கட்டினாள் அப்பாவும் தம்பியும் என்னவோ அவளுக்குச் சொல்லாமல் குசுகுசுத்தனர். எப்போதும் சிடுசிடுப்புடன் இருக்கும் பக்கத்து வீட்டு ஆண்டியும் சிரித்தபடி வந்தார்... அவள் தோழியும் ஸ்கூல் யூனிபார்முடனேயே வந்தாள் “நீ நாலுநாள் லீவாமே என்னடி ஸ்பெஷல்?” என்றாள்... சிண்ட்ரல்லா அப்போது சிரித்தபடியே முதுகைப் பார்க்கச் சொல்லி புருவத்தை தூக்கிக் காட்டினாள், சிறகு அவளுக்கு மட்டும்தான் தெரிந்து கொண்டிருந்தது!! -விவேக்பாரதி  01.05.20

வைரமுத்துவும் பழைய கள்ளும்

Image
வைரமுத்து ஆதரவாளர்கள் கொந்தளிக்க வேண்டா. நாட்படு தேறலுக்கு அதுதான் அர்த்தம்.  இணையத்தில் எங்கு தேடினாலும் வைரமுத்துவின் நாட்படு தேறல் பிரபலமாகி விட்டது. பல நாட்கள் கழித்து கொடுக்கப்பட்ட கள் என்பதே அந்த இலக்கியச் சொல்லின் அர்த்தம். அதியனின் மகன், ஔவைக்கு அத்தகைய கள்ளைக் கொடுத்தும், புது ஆடைகளைக் கொடுத்தும் வரவேற்றானாம். ஔவை தனது பாட்டில் பதிவு செய்திருக்கும் டைரிக்குறிப்புதான் இந்தச் சொல்லுக்கான மூலம்.  இதைத் தெரிந்துதான் நம் கவிப்பேரரசு கையாண்டிருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே மிக உயர்ந்த இலக்கியச் சொற்றொடர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக விளங்கும் வைரமுத்து, இங்கும் அப்பணியில் சரியாக செய்திருக்கிறார், நாட்படு தேறல் இசைப்பாடல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இரண்டையும் கேட்டு மீண்டும் ஒருமுறை தொகுப்பின் தலைப்பைப் பார்த்தேன். ஆம், நாட்படு தேறலேதான். காலத்தில் கொள்ளை போகும் கலைஞர்களில் கவிஞர்கள் முதல் இரை. அப்படிப் போகாமல் தங்களைக் காத்துக்கொள்ள பல பிரம்ம பிரயத்தனங்களைக் கவிஞர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் வெற்றி கண்டவர் கவிஞர் வாலி. சினிமாப் பாடல்களில் அப்டே

அமுதூட்டும் அம்மா

Image
அப்பாவைக் கூப்பிட்டேன் உம்உம் என்றார்    அண்ணாவைக் கூப்பிட்டேன் திரும்பிப் பார்த்தான்  எப்போதும் கதையளக்கும் பாட்டியை நான்     எழுப்பித்தான் கூப்பிட்டேன் புன்னகைத்தாள்  ஒப்பாகாத் தாத்தாவைக் நான் கூப்பிட்டேன்     ஒன்றுமே கேட்காது டீவி பார்த்தார்  அப்போதே அம்மாவைக் கூப்பிட்டென் வந்(து)    ஆவென்றாள் அமுதூட்டி என்னென்றாளே!! –விவேக்பாரதி 20.04.2021

பல்லவி தொலைந்த பயணம்

Image
சத்தம் போடும் ரயில்தான் காதில்  ரகசியக் கவிதை சொல்கிறது  யுத்தம் மூளும் நெஞ்சினில் சின்ன  ஊசி முனைநீர் பெய்கிறது!  வேகம் காட்டும் ரயிலின் இரவில்  வேய்ங்குழல் கீதம் கேட்கிறது  தாகத்தோடு மீட்டுவதாரோ? தரிசனம் இன்றித் தீர்கிறது!  பின்னால் செல்லும் காட்சிகள் கூட  பிரிக்க முடியா நினைவுகளை  முன்னால் காட்டி இம்சை செய்ய  முத்துத் தூறல் இதம்சேர்க்க  ஓடும் நெஞ்சம் இளைபாறத்தான்  ஒதுங்கும் பயணம் கிடைத்துளது  பாடியா இதனைத் தீர்ப்பதென் றுள்ளம்  படுக்கை தேடி விழுகிறது! - வந்த  பல்லவி மறந்து தொலைகிறது!! விவேக்பாரதி 17-04-2021

விவேக்குக்கு இரங்கல் பா

Image
நட்ட மரமும் நகைச்சுவையாய் நீயுலகில்  விட்ட விதைகளும் விம்மிடவே - எட்டிப்   புதுலோகம் சென்றாய் புகுந்த இடத்தும்  விதமாய் அதேசெய் விவேக்!  இந்திரன் பாவம் இனிமேல் வயிற்றுவலித் தொந்தரவு சற்றே தொடங்கிடலாம் - வந்த  இடம்சென்றாய் நீயிங் கிருந்த வரையில்  தடம்தந்தாய் கண்டோம் சிரித்து!  சின்னக் கலைவாணா சிந்திக்க வைத்தவுன்  வன்னக் கருத்துகள் வாழுமையா - உண்மையை  நெஞ்சகத்தில் வைத்தாய் நிறைவாழ்வு நீபெற்றாய்!  கொஞ்சும் உனையூர் குளிர்ந்து!  அடித்தும் அடிவாங்கி ஆவென்று கத்தி  நடித்தும் நகைச்சுவை நல்க - அடயிங்கே ஆயிரம்பேர் உள்ளார் அறிவுதரும் ஜோக்செய்நீ போயினையே எம்மைப் பிரிந்து! கவிதையும் செய்தாய் கருத்துடன் மேடைச் செவிதைக்க நல்லுரைகள் செய்தாய் - தவமாய்த்  தமிழ்மொழியும் காத்தாய் தகுந்தவிடம் மக்கள்  குமிழிதயம் உன்றன் கொலு!  ஏவுகணை வீசி இடம்பிடித்த மாமனிதர்  தாவுகணைச் சொல்லில் தடம்பெற்றாய் - வாழ்விதனை பின்னோர்க் குதவிடும் பீடு படைத்தாயே  மன்னவா போய்வா மகிழ்ந்து  எப்படியி ருந்தாலும் இப்படியி ருந்தாலும்  தப்படி வைக்காது தாரணியில் - செப்பிய  பாடங்கள் உன்றன் பெயர்சொல்லும் நீமதித்த  நாடுன்னைப் பேசும் நயந்து! வி

தமிழால் நிமிர்ந்தேன்

Image
ஒரு செய்யுளில் உள்ள சொற்களைக் கரந்து, அதனுள் ஒளிந்திருக்கும் இன்னொரு பாவகையை எழுதுதல் கரந்துறைப் பாட்டு எனப்படும். அப்படி முயன்ற ஒன்று  – அறுசீர் விருத்தம் –  குமிழென நொந்தேன் குறிதவ றானேன்     குமைந்து விழுந்தேனே  அமிழ்தென வந்தாய் அறிவினைத் தந்தாய்     அமர்ந்திட வைத்தாயே  தமிழ்மொழித் தாயே செறிவெனில் நீயே    தமிழனைக் காத்தாயே  நிமிர்ந்தனன் இன்றே நெறிதரு தமிழே     நிமிடமும் பிரியேனே! – வஞ்சித் தாழிசை – குமிழென நொந்தேன் அமிழ்தென வந்தாய் தமிழ்மொழித் தாயே நிமிர்ந்தனன் இன்றே   குறிதவ றானேன் அறிவினைத் தந்தாய் செறிவெனில் நீயே நெறிதரு தமிழே குமைந்து விழுந்தேனே அமர்ந்திட வைத்தாயே தமிழனைக் காத்தாயே  நிமிடமும் பிரியேனே!!    –விவேக்பாரதி  15.04.2021

பிறப்பும் பறப்பும்

Image
சித்திரகவி வகைமைகளுள் ஒன்றான பிரிதுபடு பாட்டு என்பது ஒரு பாவகையாக இருந்து, அதன் சொற்களையே வரிசை மாற்றி இட்டால் இன்னொரு பா வகையாக மாறுவது. இப்படி ஒரு பாட்டை பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் எழுதச் சொல்ல, நான் சமர்ப்பித்த இரண்டு பாடல்கள். 1. அடுத்த பிறப்பு - நிலைமண்டில ஆசிரியப்பா - உடலினுக் கின்பம் உயிரதற் கின்பம் உடன ளிப்பாய் மடமட வென்றே மடுப்பினும் இன்ப வடிவெ டுப்பாய் படப்படத் தென்றல் பதம்தரு தல்போல் படர்ந்தி ருப்பாய் அட,தமிழ் அன்னாய் அடுத்துமுன் சேயாய் அருளு வையே - கட்டளைக் கலித்துறை -  உடலினுக் கின்பம் உயிரதற் கின்பம் உடனளிப்பாய் மடமட வென்றே மடுப்பினும் இன்ப வடிவெடுப்பாய் படப்படத் தென்றல் பதம்தரு தல்போல் படர்ந்திருப்பாய் அட,தமிழ் அன்னாய் அடுத்துமுன் சேயாய் அருளுவையே! 2. பறக்கும் வரம்  - நிலைமண்டில ஆசிரியப்பா -  சிறுமை உளத்தை சிதைக்கா திருக்கச் சிறகு வந்தே பறவை எனநான் பறந்திவ் வுலகப் பகைம றந்து நிறமும் இனமும் நிலமும் உடலும் நிறையி னையும் துறந்தே திரியும் சிறப்புகள் வேண்டும் சிவன்து ணையே - கட்டளைக் கலித்துறை -  சிறுமை உளத்தைச் சிதைக்கா திருக்கச் சிறகுவந்தே பறவை என்நான் பறந்திவ் வுலகப்