பிறப்பும் பறப்பும்


சித்திரகவி வகைமைகளுள் ஒன்றான பிரிதுபடு பாட்டு என்பது ஒரு பாவகையாக இருந்து, அதன் சொற்களையே வரிசை மாற்றி இட்டால் இன்னொரு பா வகையாக மாறுவது. இப்படி ஒரு பாட்டை பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் எழுதச் சொல்ல, நான் சமர்ப்பித்த இரண்டு பாடல்கள்.

1. அடுத்த பிறப்பு

- நிலைமண்டில ஆசிரியப்பா -

உடலினுக் கின்பம் உயிரதற் கின்பம்
உடன ளிப்பாய் மடமட வென்றே
மடுப்பினும் இன்ப வடிவெ டுப்பாய்
படப்படத் தென்றல் பதம்தரு தல்போல்
படர்ந்தி ருப்பாய் அட,தமிழ் அன்னாய்
அடுத்துமுன் சேயாய் அருளு வையே

- கட்டளைக் கலித்துறை - 

உடலினுக் கின்பம் உயிரதற் கின்பம் உடனளிப்பாய்
மடமட வென்றே மடுப்பினும் இன்ப வடிவெடுப்பாய்
படப்படத் தென்றல் பதம்தரு தல்போல் படர்ந்திருப்பாய்
அட,தமிழ் அன்னாய் அடுத்துமுன் சேயாய் அருளுவையே!

2. பறக்கும் வரம் 

- நிலைமண்டில ஆசிரியப்பா - 

சிறுமை உளத்தை சிதைக்கா திருக்கச்
சிறகு வந்தே பறவை எனநான்
பறந்திவ் வுலகப் பகைம றந்து
நிறமும் இனமும் நிலமும் உடலும்
நிறையி னையும் துறந்தே திரியும்
சிறப்புகள் வேண்டும் சிவன்து ணையே

- கட்டளைக் கலித்துறை - 

சிறுமை உளத்தைச் சிதைக்கா திருக்கச் சிறகுவந்தே
பறவை என்நான் பறந்திவ் வுலகப் பகைமறந்து
நிறமும் இனமும் நிலமும் உடலின் நிறையினையும்
துறந்தே திரியும் சிறப்புகள் வேண்டும் சிவன்துணையே!!

-விவேக்பாரதி 
13.04.2021

Comments

Popular Posts