சிண்ட்ரல்லாவின் சிறகு

தூக்கம் எழுந்து பார்த்த
குட்டி சிண்ட்ரல்லாவுக்கு
பின்னால் சின்னதாய்
இறக்கை முளைத்திருந்தது!

முதுகைக் கூசிக் கொண்டிருந்ததை
குளிக்கையில் கண்டுபிடித்த
அந்தக் குட்டி தேவதை,
வாளியை உதைத்ததும்
வாட்டர் ஹீட்டர் உயரம்
பறந்தாள்!

வேகமாக உடைமாற்றி
சில இட்லிகளை இரையாக்கி
அதை அவள் தோழிக்கு
சொல்ல நினைத்தாள்!
”யூனிபார்ம் போடாதே
இன்னிக்கு நீ லீவு”
அம்மா சத்தமிட்டாள்!

ஒன்றும் புரியாமல்
தோழியிடம் சொல்ல முடியாத
துக்கம் கப்பிய முகத்தை
ஒன்றரை முழம் தூக்கி
ஓரத்தில் அமர்ந்தாள்!

அத்தை சிரித்தே வந்தாள்
அள்ளி மஞ்சள் குங்குமம் வைத்தாள்
மர ஓலை அறை செய்தான்
முரடன் மாமன்
அம்மாவுடன் சேர்த்து
அவளும் அன்று சேலை கட்டினாள்
அப்பாவும் தம்பியும்
என்னவோ அவளுக்குச் சொல்லாமல்
குசுகுசுத்தனர்.
எப்போதும் சிடுசிடுப்புடன் இருக்கும்
பக்கத்து வீட்டு ஆண்டியும்
சிரித்தபடி வந்தார்...

அவள் தோழியும்
ஸ்கூல் யூனிபார்முடனேயே வந்தாள்
“நீ நாலுநாள் லீவாமே
என்னடி ஸ்பெஷல்?”
என்றாள்...
சிண்ட்ரல்லா அப்போது
சிரித்தபடியே முதுகைப் பார்க்கச் சொல்லி
புருவத்தை தூக்கிக் காட்டினாள்,
சிறகு அவளுக்கு மட்டும்தான்
தெரிந்து கொண்டிருந்தது!!

-விவேக்பாரதி 
01.05.2021

Comments

 1. அருமையான முறையில் அமைந்த அழகிய கவிதை👏🤝

  ReplyDelete
  Replies
  1. நன்றி சௌந்தர்யா.

   Delete
 2. இயல்பான நடையில் ஒரு (குட்டி) கற்பனை ஓவியம் இது. இதில் ஆச்சரியம் இந்த கற்பனை ஒரு ஆடவனுடையது என்பது தான். கற்பனை சிறகுகள் கொண்டு சிண்ட்ரல்லாவை வான்மகள் ஆக்கிய விவேக் பாரதிக்கு வாழ்த்துக்கள்🙏

  ReplyDelete
  Replies
  1. ஆ... தங்கள் பின்னூட்டம் பரவசம் அளிக்கிறது. மிக்க நன்றி

   Delete
  2. Swetha PuhazhendhiMay 15, 2021 at 2:34 AM

   நன்றி பாரதி ��

   Delete
 3. பென்னியம்��❤

  ReplyDelete

Post a Comment

Popular Posts