Posts

Showing posts from May, 2021

ஈஸ்வரனே என் குருநாதா

Image
வீட்டில் காஞ்சி மகா சுவாமிகளுக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்ததும் வழக்கம்போல் தம்பி பாட்டு பாடினான். ‘கருணா ரச பூர்ண‘ என்று தொடங்கும் பாடலைப் அவன் பாட வீடே மெய்மறந்து போனது. சற்று நேரத்தில், எனக்குள் அதே ராகத்தில் உதயமானது இந்தப் பாடல். இதையும் அங்கேயே பாடி பரவசமடைந்தோம்.  இதோ...  தன்னந் தனிமையில் நடுக்காட்டில் - நான்     தளர்ந்தி ருந்தேனே வழிதேடி,  சின்ன விளக்கினைக் கையேந்தி - நீ     சிரித்து வந்தாயுன் விழிமூடி,  கண்ட நொடியினில் சரண்புகுந்தேன் - எனைக்     காப்பாற் றெனவுனைக் கதறிநின்றேன்  தண்டம் ஏந்திய சுடராலே - ஒளி    தந்து நின்றாய்நான் துயிலெழுந்தேன்!  இந்தக் கனவிது நிஜம்தானா - அந்த  ஈஸ்வரனே என் குருநாதா!  நெஞ்சம் ஒன்றையா நினைக்கிறது - அது     நித்தம் அலையெனக் குதிக்கிறது  கொஞ்சம் கொஞ்சமாய் எனையிழந்தேன் - நான்     குறையக் குறையவே உனையடைந்தேன்  காற்றில் பறந்துதான் நான்திரிந்தேன் - எனில்     காகிதமோ எனக் குழம்பிநின்றேன்  ஆற்றல் சத்தியம் என்றுரைத்தாய் - வந்து     அகத்தின் சிறகினை நீவிவிட்டாய்  இந்தக் கனவிது நிஜம்தானா - அந்த  ஈஸ்வரனே என் குருநாதா!  புல்லின் நுனியிலே புவியைவைத்தாய் - சின்ன

எதுக்கு ட்விட்டர்? - நூல்நோக்கம்

Image
ட்விட்டரில் இல்லாத பத்திரிகையாளர் கிடையாது. ட்விட்டரில் இல்லாவிட்டால் நீங்கள் பத்திரிகையாளரே கிடையாது என்றெல்லாம் பேச்சு கேட்டிருக்கிறேன். ஆமாம், எதற்குத்தான் ட்விட்டர்? இன்றளவும் இதற்கான சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை. நானும் ட்விட்டரில் இருக்கிறேன், விருப்பப்பட்ட சிலரின் அப்டேட்களை பார்க்க, செய்திகளைத் தெரிந்துகொள்ள. ஆனால், இதுதான் ட்விட்டரின் நிஜ பயனா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது எழுத்தாளர் என். சொக்கன் எழுதிய ’ட்விட்டரின் வெற்றிக் கதை’ புத்தகம் நினைவுக்கு வந்தது.  உடனே அமேசானில் அதன் கிண்டில் பதிப்பை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். உண்மையில், வாசித்து முடித்து இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்நொடிவரை என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், என் கேள்வி சரியான இடத்துக்கு என்னை இழுத்துச் சென்றள்ளது மட்டும் தெரிகிறது. வந்து சேர்ந்த இடத்தில் ட்விட்டரின் நதிமூலம் ரிஷிமூலத்தை எளிமையாகத் தெரிந்துகொண்டேன். சொக்கன், ஒரு தேநீர் இடைவெளியில், டீக்கடையில் 2 பலகாரங்களுக்கும் ஒரு காபிக்கும் இடையில் உள்ள கேப்பில் இந்த வெற்றிக் கதையைச் சொல்லி முடித்துவிட்டார். அவ்வளவு ஆழம், ஆனாலும் அத்தனை

நினைத்தால் சிரிப்பு வரும் நெகிழ்வு

Image
#டைரிக்குறிப்பு  23.05.2021 இப்போது எனக்கு தினசரியில் வேலை. சதா கட்டுரைகளையும், செய்திகளையும் மாய்ந்து மாய்ந்து எழுதும்/திருத்தும் பணி. 4 வருடங்களுக்கு முன்பும் என் கனவு இதுதான். ஆனால், அதற்கேற்ற ஆற்றல் என்னிடம் இல்லாமல்தான் இருந்தது.  என்னைக் கவிதை என்னும் வடிவத்தை விட்டு வெளியே வரவைத்த இரு ஆளுமைகள் பத்திரிகையாளர் ஹரன் மற்றும் நாடறிந்த நாடக நடிகர் கிரேசி மோகன். ஹரன், எனது முதல் கட்டுரையை ஹிந்து மித்ரன் பத்திரிகையில் பிரசுரம் செய்தார். கிரேசி மோகன் கடைசிவரை என்னைக் கதை எழுத உந்திக் கொண்டே வைகுண்டம் சேர்ந்தார். இருவரையும் இக்கணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.  காரணம்?  2016 வாக்கில் நான் முதன்முதலில் திருவல்லிக்கேணி சென்று பாரதியார் இல்லத்தையும், பார்த்தசாரதி கோயிலையும் தரிசித்த அனுபவத்தை கிரேசி மோகனுக்கு அவர் பாணியில் விவரித்து எழுதியிருந்தேன். அந்த மெயில் இன்று என் கண்ணில் சிக்கியது. அவருக்காக #எக்ஸ்க்ளூசிவ் போட்ட அந்த கட்டுரையையும், அதற்கு கிரேசி மோகன் பதிலையும் பகிர்கிறேன்.  --நான் அனுப்பிய கட்டுரை-- வணக்கம் மோகன் ஸார்.. எதோ என்னால் இயன்றது... பார்த்து கருத்தளிக்கவும்... Exclusively fo

அன்பின் பாராவுக்கு - நூல்நோக்கம்

Image
‘அன்பின் பாராவுக்கு,’ நாடறிந்த (நாட்டை அறிந்த, நாடு அறிந்த) எழுத்தாளர் பாராவுக்கு அனேகமாக வரும் கடிதங்கள் எல்லாம் இப்படித்தான் தொடங்கும். அதனால் நானும் அப்படியே தலைப்பிட்டேன். சற்று வித்தியாசமான இந்த நூல்நோக்கம் 2 நூல்களைப் படித்துக்கொண்டு வந்து முன்னால் போடுகிறது. இரண்டுக்குமான கைகள், பாராவுடையது.  தீவிர இலக்கியவாதி, இலக்கியத் தீவிரவாதி, நாவல் உலகின் நாவல்பழம் உள்ளிட்ட பல அடைமொழிகளால் நண்பர்கள் சிலர் பாராட்டிப் பேசும் பாராவை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். அன்னாரின் அட்வைஸ் இன்னும் என் காதுகளில் ‘‘தம்பி கவிதைக்கு பெரிய மார்க்கெட் இல்ல... நீங்க கதை எழுத முயற்சி செய்யுங்க’’... அவருடைய 2 நூல்களைக் கையில் எடுத்தேன் (வெவ்வேறு காலங்களில்)  ஒன்று : அபாயகரம்  பாராவின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது இதைத்தான். முதன்முறை வாசிக்கும்போது நான் கல்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். (பாரா கல்கியில் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார் என்பதை அறிந்தபின் அடிவயிற்றில் கோளங்கள் சுற்றின). கல்கியில் அவருடைய புல்புல்தாரா தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. பொதுவாக கதை படிக்க ஆர்வம் இல்லாதவன், லாவகமாக என்

ஒரு Fan Club Project - நூல்நோக்கம்

Image
  இப்படி 4 ஆண்டுகள் கழித்து இதைப்பற்றி ஒரு கட்டுரை வரும் என்று நூலாசிரியனான என் நண்பன் பாம்பன் பிரஷாந்த் நினைத்திருக்க மாட்டான். நானும் எழுதும் நோக்குடன் இப்புத்தகத்தைத் தொடவில்லை. ஆனால், என் குருநாதர் இலந்தையார், எது ஒன்று எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறதோ அதுவே சிறந்த படைப்பு என்பார். அப்படி என்னை எழுத வைத்துள்ளது இப்படைப்பு. தலைப்பு, கிறுக்குத் துளிகள். எழுதியவன் கிறுக்கன்தான். (நான் ஒருமையில் அழைப்பதை நூலாசிரியர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற உரிமையுடன்)  இது கிறுக்கல்களை ரசிக்கும் உலகமாகிப் போனது. இப்போது கிறுக்கலைப் படைப்பவனே படைப்பாளி ஆகிறான். ஆக, இவன் கிறுக்கனாய் இருப்பதில் அவனைவிட நான் பெருமை கொள்கிறேன். ஞாபகம் இருக்கிறது, இந்தக் கவிதைத் தொகுப்பை நான் முதன்முதலில் படித்ததும் இப்போது வாசித்ததுபோல் ஒரே ஸ்ட்ரோக்கில்தான். வாட்ஸாப்பில் எனக்கு அனுப்பி, வாசித்துப் பாருங்க தோழர் என்று அவன் சொன்னது இப்போது அந்தக் குரலிலேயே என் காதில் ஒலிக்கிறது. சரி, இந்தத் தொகுப்புக்கு இப்போது ஏன் நான் எழுத வேண்டும். பரவலாக உலகம் அறிந்த பிரஷாந்திலிருந்து, அவனிடம் நான் ரசிக்கும் கவிஞன் என்னும்

முத்து தரும் சிப்பி

Image
#விடிகாலைஞானங்கள்  முத்துதரும் ஒருசிப்பி தூசு விழுந்தாலும் உடல் மூடிக் கொண்டு வைத்திருக்கும் சுரபிகளால் பகையெனினும் அத்தூசை முத்தாய் ஆக்கும்  ஒத்ததுபோல் அனுபவங்கள் அத்தனையும் பாடமென உள்ளே சேர்த்தால்  சித்திரமாய்ப் பின்னொருநாள் திறக்கையிலே அதனொளியால் ஜெயிக்கலாமே!  -விவேக்பாரதி  17.05.2021

ஆன்றோர் உயர்வு

Image
#விடிகாலைஞானங்கள் உடலெண்ணம் ஒழியென்பார் ஒருசாரார் மற்றொருவர் உடல்பேண் என்பார்  மடமனமே என்றொருவர் ஏசிநிற்பார் மற்றொருவர் மதித்திருப்பார் அட!இதிலேன் ஆன்றோர்க்கும் இத்தனையாய்த் தடுமாற்றம் என்றே ஆய்ந்தால்  உடல்மனத்தை மதித்தவர்கள் அதன் ஆட்சிக்கு அடங்காமல் உயர்ந்திட்டாரே!!  -விவேக்பாரதி  16.05.2021

கடலா? குட்டையா?

Image
  #விடிகாலைஞானங்கள் குட்டையொரு தேக்கம்தான் கடல்நீரும் தேக்கம்தான் குறியி லாமல்  எட்டுவைக்கும் ஓட்டத்தில் சாக்கடையும் ஓடையுமோர் தரமே! மண்ணில்  பட்டிருக்கும் வாழ்க்கையிதில் ஓட்டமெனில் ஓடை,நதிப் பாய்ச்சல் வேண்டும்  கிட்டியதோர் இடமெனிலோ கடலாழம் விரிவெல்லாம் கிளைக்கச் செய்யே!  -விவேக்பாரதி 15.05.2021

கோயிலும் தெய்வமும்

Image
  #விடிகாலைஞானங்கள் உடலைநீ கோயில்செய் உள்ளம் கருவறையாக்கொள் உள்ளிருக்கும்  கடவுள்தான் உயிரென்று காப்பாற்றல் மதமாய்க்கொள் காலம் கேட்கும்  நடை,ஓட்டம் பூஜைகள், தொடும்வியர்வை அபிஷேகம் நன்றாய் உள்ளே  விடும்மூச்சே வேதங்கள் வினைசின்ன மேகங்கள் விலகும் தானே  -விவேக்பாரதி 14.05.2021

மேக வாழ்க்கை

Image
  #விடிகாலைஞானங்கள் மேகங்கள் உருமாறும் அலையுமது தான்வாழ்க்கை மேலே கொஞ்சம்  ஆகச்சி றந்தகுளிர் தென்றல்பட் டால்தூறும் அதுவே வாய்ப்பு, வேகங்கொள் காற்றடித்து மழைகலைக்கும் அதுபிறரின் வெறுப்பு, கொண்ட ஆகத்தைப் பிழிந்துழைத்து மழையாகும் அதுநன்றி அறிவா யப்பா!  -விவேக்பாரதி 13.05.2021

நான் கண்ட காட்டாயி - நூல்நோக்கம்

Image
ஒரு ஊருல, ஒரு நாட்டுல என்று தொடங்கும் சாதாரண கதைகளுக்கு கதாசிரியன் போதும். யதார்த்தவாதிகளைப் படம்பிடிக்கக் கதைசொல்லிகள் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், கதைக்குள் அரசியலையும், வரலாற்றையும் இழைக்க ஒரு செய்தியாளர் தேவைப்படுகிறார். உறவுகளின் வெளியில் சொல்லப்படாத உணர்வுக் குரல்களைப் பேச ஒரு கவிஞர் வேண்டும். இவற்றுக்கெல்லாம் மணிமுடிபோல் ஓர் இனத்தின் அகத்தையும் புறத்தையும் அதன் தன்மை மாறாமல் பதிவு செய்ய வரலாற்று ஆசிரியரின் அவசியம் உறுதியாகிறது. இப்படிப்பட்ட தன்மைகளை தனக்குள் அடக்கியவராக உருவெடுக்கிறார் நூலாசிரியர் அரவிந்த்குமார். தலைப்புக்கான கதையைப் படிக்க ரொம்ப நேரம் ஆகுமோ என்று நினைத்து புத்தகத்தைப் புரட்டுகையில் முதலிலேயே புன்னகைத்து வரவேற்றாள், அண்ணாவின் கூட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த காட்டாயி. அவளைக் கண்டதும் ஒருகணம் திகைத்துத் திரும்ப திரும்ப படித்தேன். வடசென்னைச் சுரத்தின் கொற்றவையாக என் கண்களுக்குத் தெரிந்த அந்த இழவாட்டக்காரியின் அரசியல் ஈடுபாடு மெய்சிலிர்க்க வைத்தது. கதையின் ஓட்டத்தில், போகிற போக்கில்தான் எத்தனை வரலாற்று செய்திகள். முதல் வாக்குரிமை உட்பட. அண்ணாவின் இறுதி ஊ

காகமா அணிலா?

Image
 #விடிகாலைஞானங்கள்  காக்கைகளின் கூட்டத்தில் சிக்குண்ட அணில்குஞ்சு காக்க வென்று  வாழ்க்கைக்குப் போராடி தத்தளிக்க நான்கண்டேன் வையம் போகும்  போக்குக்கு நிகரென்று பெருமூச்சு விடச்,சேர்ந்தே பொழுது பூக்க  நோக்குற்றேன் ஓடுகிறேன் அணில்நானா காக்காயா நவில்வ தாரோ??  -விவேக்பாரதி  12.05.2021

உழைக்கும் மக்களைப் பாடுகிறேன்

Image
உழைக்கும் மக்களைப் பாடுகிறேன் - அவர்  உதவிக் கரங்களை வாழ்த்துகிறேன்  தழைக்கும் உலகம் உயர்ந்துவிட - அது  தரமாய் பலமாய் வளர்ந்துவிட  தங்கள் உழைப்பை எரிபொரு ளாகத்  தரும்தோ ழர்களை வாழ்த்துகிறேன் - அவர்  தர்மம் செழிக்கப் பாடுகிறேன்!  காட்டைத் திருத்திப் பதமாக்கி - அதில்  கலைசெய் கின்ற உழவர்களை  கரும்பு சோளம் பழவகை எல்லாம்  கைமேல் கொடுக்கும் மனிதர்களை - பசுங்  காடு வளர்க்கும் தெய்வங்களை  நாட்டைக் காக்க எல்லையிலே - பல  நாளாய் நிற்கும் வீரர்களை நாட்டுக் குள்ளே நலம்வ ளர்க்கும்  நாய கர்களை வாழ்த்துகிறேன் - பெரும்  நன்றிகள் சொல்லிப் பாடுகிறேன்! (உழைக்கும்) கடலில் மூழ்கி முத்தெடுத்து - தினம்  கரையில் காய்ந்தும் உப்பெடுத்து  கண்துஞ் சாமல் மனமஞ் சாமல்  காவல் செய்யும் பொறுப்பெடுத்து - அதில்  கருத்தாய் இருந்தே உயிர்வளர்த்து  உடலில் தோன்றும் நோய்களைந்து - மன  உறுதி கொடுக்கும் சொல்புகன்று  உறுதுணை யாக வாழ்வில் சேரும்  ஒவ்வொரு வரையும் வாழ்த்துகிறேன் - அவ் உயிர்கள் வாழப் பாடுகிறேன்! (உழைக்கும்) தோள்கள் என்னும் தொழிற்சாலை - அவை  தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை  தோன்றும் உயரம் யாவும் மனிதன்  தொட்டுப் பிடித்த உய