Posts

Showing posts from June, 2021

மௌனக் கண்ணீர்

Image
கவிப்பேரரசு பைரனின் When we two parted கவிதையைத் தழுவி..  மௌனக் கண்ணீரில் உறைந்தே  நாம் ஒருவரை ஒருவர் பிரிந்தோம்!  பாதி கூரான மனத்தில்  பல ஆண்டின் வலிகளை அறிந்தோம்!.  நீ பிரிகையிலே உன் கண்ணம்  அந்தப் பால்நிலாவின் வெண்மை!   நாம் பிரிவினில் பழகிய முத்தம்   அது இன்றும் மாறாக் குளுமை  அதுதான் அடுத்து தொடரும்  என் வலிகளை உணர்ந்த தருணம்!  உறைந்த காலையின் பனியும்  உன் முத்தம் நினைவினில் கொணர,  அது பிரிந்த சோகத்தைச் சொல்லும்  என் எச்சரிக்கையாய் உணர!  உனது உண்மைகள் தூர்ந்து  உன் பெயரும் புகழுமே சரிய  பிறரின் வசைகளைக் கேட்டேன்  அவமானம் என்னில் கல் எறிய   எனது கண்ணின்முன் உன்னை  பலர் இகழ்தல் மரணமாய்க் கேட்க   நொறுங்கி உடைகிறேன் அழகே  இதில் எப்படி வாழ்வாய் பூக்க? உன்னை அறிந்தவன் அதனால்  இங்கு என்னை நானே வெறுத்தேன்  உனது வாழ்வினில் நுழைந்து நான் எதனை சரியாய்க் கொடுத்தேன்?   அந்தரங்கம் நம் காதல்  நான் மௌனம் கொள்கிறேன் அழுது  என்னை நீயும் மறக்க, என் பொய்முகம் பார்த்துப் பழகு!   உன்னை இனியும் ஒருவேளை  நான் சந்திக்க நேரும் அறிவேன்   அன்று உன்னைநான் வாழ்த்த  மீண்டும் மௌனக் கண்ணீரில் உறைவேன்!! -விவேக்பார

வடபழனி பாலன் வரம்

Image
-வடபழனியில் படைத்த சில அந்தாதிகள்-  வடபழனி வாழும் வடிவேலன் பாதம்  தொடப்பழகி நாளும் தொடர்ந்தேன் - கெடப்பழகி  பாழான நெஞ்சம் பகல்பார்க்க வைத்தென்னைக்  கூழாகச் செய்தான் குழைத்து!  குழைத்துள சந்தனக் குங்கும வாசம்  அழைத்துளம் ஏறும் அழகாய் - தழைத்துள  ஆசையெனும் காடெரிக்கும் அம்பிகை மைந்தனுக்குப்  பூசைதர என்றும் புகழ்  ***  உலகத்தை ஒருநொடியில் சுற்றியசெவ் வேலன்     உள்ளத்தில் ஆனந்த நிலைகொண்ட பாலன்  கலகத்தை வேல்கொண்டு தூள்செய்த காலன்     கவிதைக்குத் தமிழ்காத்த ஞானானு கூலன்  பலவித்தைக்(கு) அரசான ஈராறு தோளன்     பாடுபவர் பக்கம்நின் றதுகேட்கும் தோழன்  புலவர்க்குத் தமிழ்கூறும் வடபழனி பாலன்     புகழ்மாலை நிதம்சொல்லித் தொழுவாயென் நெஞ்சே!  நெஞ்சத்தில் சூழ்கின்ற எண்ணங்கள் யாவும்     நெருப்பென்று சுடர்வீசச் செய்கின்ற கண்கள்,  வஞ்சத்தில் வீழ்ந்தோர்க்குப் படகாகும் கைகள்,     வனமுலையள் கைசேர்க்க வடிவான மேனி,  செஞ்சடையன் நெற்றிவிழிக் கனல்தந்த செம்மை,     சேர்ப்பாக நீலமயில் அழகான ரூபம்,  அஞ்சவரும் பகைமாய்க்கும் வடபழனி பாலன்     அமர்கின்ற இடம்நெஞ்சம் அறிந்தாலே வெற்றி!    வெற்றிவடி வேலவனின் வண்ணமயில் போதும்   

யோகமா தேவி சகவாசம்

Image
எனது யோகமா தேவியான குரு சௌமியா அக்காவுக்கு சமர்ப்பணம்  உடலா? சீச்சீ ஒருநாள் சரியாகும்  உடனே உருகுலைந்(து) உளையும் இதையா  பேணுவது காப்பது பெரிதாய் அழகூட்டிக் காணுவது? போடா கயமை எனநினைத்தேன்! உள்ளிருக்கும் ஆத்மாவை ஒளிர்த்தும் பயணத்தில்  முள்ளிருந்தும் மலர்போல முழுதும் உதவுவது  காயம் எனும்கருத்தை கற்றும் பறக்கவிட்டேன்!  மாயப் பழவிருட்டில் மங்கிக் கிடந்திருந்தேன்! நாளாக நாளாக நான்மெலிந்து போகையிலும்,  தோளான தோள்கள் சோம்பல் சுமக்கையிலும்,  வயதேறும் மாற்றமென வாக்கியங்கள் பேசி  சுயம்தேறும் எண்ணமொரு சற்றும் இழந்திருந்தேன்! படுத்தால், இரவைப் பகல்போல் நகர்த்துதல்! கொடுக்கும் காலையில் கொள்ளைத் துயிலிருத்தல்!  என்றெல்லாம் எண்ணி எழும்பா துழன்றிருந்தேன்,  நின்றால் கூண்வீழ நிமிர்தல் மறந்திருந்தேன்! அப்படியே சென்ற அடியனேன் என்வாழ்வில்  எப்படியோ ஓர்கணத்தில் ஏறிவரும் மின்னலென  ஆதி அறியாமல் ஆர்ப்பரிக்கும் உணர்ச்சியென  சேதி விளம்பவரும் செல்லுலார் ஞிமிறெலன  யோகமா தேவி உள்ளம் தொடவந்தாள்,  தாகமோ எனநினைத்துத் தமிழ்தண் ணீர்கொடுத்தேன்  தயவுதா னோவென்று தம்பி நிலைகொடுத்தேன்  அயர்வுக்குத் தோள்கொடுத்தேன் ஆச்சர்யம்

வசந்த வருணனை

Image
- தமிழ்க்குதிர் மின்னிதழில் வெளியான எனது கட்டுரை - தமிழ்ச் சிற்றிலக்கிய உறுப்புகளில் ’கேசாதிபாத’ வருணனை மிகவும் ரசனை வாய்ந்தது. தெய்வங்களையும், அரசர்களையும் பாட்டுடை நாயகர்கள் ஆக்கி, பெரும் கவிஞர்கள் நமக்குப் பாடிக் கொடுத்திருக்கும் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் கலம்பகம், உலா உள்ளிட்ட வகைகளில் வெளிப்படையாகவும், குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் போன்ற வகைகளில் மறைமுகமாகவும் இவ்வுறுப்பு பாடப்படுகிறது. தவிர சில தனிப் பாடல்களிலும் பயன்படுத்துவதால் கேசாதிபாத வருணனை ஒரு கவிதை உத்தியாகவே உணரப்படுகிறது.  அக்கால இலக்கியங்கள் தொட்டு, இக்கால திரைப் பாடல்கள் வரை இந்த உத்தி பெயர் அறியாமல் புழக்கத்தில் இருப்பதுதான். அப்படி ஒருவரைத் தலைமுதல் கால்வரை புகழ்வதில்தான் எத்தனை வியப்பு. அதுமட்டும்மல்ல, சிற்றிலக்கியத்தில் இப்படி வருணிக்கப்பட ஒரு விதியும் உண்டு. பாட்டுடைத் தலைவர் ஆண் எனில், அவரைக் கால் முதல் தலை ஈறாக பாதாதி கேசமாய்ப் பாட வேண்டும். பெண்மை என்றால் தலையை முதலாகக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இலக்கியங்களில் எத்தனையோ வருணனைகள் உள்ள போதிலும், குற்றாலக் குறவஞ்சியில் வரும் ஒரு வருணனை கேசாதிபாதம் என்று பெயரிடப்ப

படாய்ப் படுத்திய பைபிள் கதை - நூல்நோக்கம்

Image
ஒரு நல்ல கதைக்கு அதன் கரு உறுதியானதாக இருக்க வேண்டும். கட்டுரைக்கோ பேசப்போகும் பொருளைப் பற்றிய தெளிவும், தரவுகளும் கூடிய வரை நியாயமானதாக இருக்க வேண்டும். ஆனால் மொழியின் உச்ச நாகரிக வடிவமான கவிதைக்கு, இது எதுவும் தேவையில்லை. ஒரு கவிஞனை எழுத வைக்கவும், அதே எழுத்தின் லயிப்பில் நாட்கள் மறந்து கிடக்க வைக்கவும் வானுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளாலும் முடியும். அப்படி கிடைக்கும் சரியான பொருள் ஒன்று, ஒரு கவிஞனுக்குள் இருக்கும் பொறியைக் கிளறி விடுமாயின், அவனுள்ளிருந்து வெளிப்படும் கருத்துகளின் ஆற்றல் அளத்தற்கு அரியது. அப்படிப்பட்ட பொருளை/நபரை மியூஸ் என்பார்கள். மியூஸ்களை நினைக்கும்தோறும் கலைஞர்கள் ஒரு படைப்பையோ, படைப்பின் சிறு பகுதிகளையோ உருவாக்க முடியும். இதுவே மியூஸ்களின் வரையறை.   அப்படி ஒரு கவிஞனுக்கு, சின்னப் பெண் ஒருத்தி மியூஸாக இருந்து, அவனிடமிருந்து நீண்ட நாட்கள் வெளிவரத் துடித்த சில சரக்குகளை வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு, ஜேக் மல்லிகா டானிஸ் எழுதியுள்ள ‘ஆரா பைபிள் வாசிக்கிறாள்’. ஒவ்வொரு முறையும் இப்புத்தகம் பற்றி எழுதுவதற்காக நூலை எடுக்கும் போதெல்லாம் எப்பட

ககனத்துளி மடல்கள் 1

Image
-மஸ்கெட்டிலிருந்து கவிஞர் சுரேஜமீ- அன்புக்குரிய விவேக்கிற்கு, வாழ்த்துகள். உனது கற்பனைச் சிறகில் வலம்வந்த பண்டை இலக்கியத் தேனைக் ககனம் அமுதெனப் பொழிந்தவாறு ‘ககனத்துளி’யில் கண்டேன். கதிர்கண்ட கமலமன்ன மனத்தே விரிந்தேன்.   தலைப்பும் சொல்ல வந்தே சேதியும் நறுக்குத் தெறித்தாற் போல் நச்சென்று விளங்கியது. மீண்டும் படிக்கத் தூண்டும் துளிகளாகவே எனக்குப் பட்டது. மிகச்சில இடங்களில் ஒருவேளை உன் கவனம் தவறிவிட்டதோ என எண்ணும் அளவில் வார்த்தைக் கோர்வைகள் சற்றே மதுவின் போதையில் மயங்கி உருண்டாற் போல் இருந்தது. உதாரணமாக, இளைத்தவள் கட்டுரையை வாசி. மற்றபடி, அமுதிட்ட வண்ணம்போல் அழகுதமிழ் வார்த்தைகள் ஆசை கூட்ட அமைத்திட்ட வண்ணத்தில் ஆன்றோரும் சான்றோரும் உன்னை வாழ்த்த நிமிர்கின்றாள் தமிழன்னை நிலத்திலென்றும் நின்போன்ற கவிஞன் வாக்கால் நமைக்காக்கும் அவள்தாளை நாளுபற்றி நானிலமே போற்ற வாழி! அன்புடன் சுரேஜமீ மஸ்கட் 04.06.2021 காலை 9:58