படாய்ப் படுத்திய பைபிள் கதை - நூல்நோக்கம்

ஒரு நல்ல கதைக்கு அதன் கரு உறுதியானதாக இருக்க வேண்டும். கட்டுரைக்கோ பேசப்போகும் பொருளைப் பற்றிய தெளிவும், தரவுகளும் கூடிய வரை நியாயமானதாக இருக்க வேண்டும். ஆனால் மொழியின் உச்ச நாகரிக வடிவமான கவிதைக்கு, இது எதுவும் தேவையில்லை. ஒரு கவிஞனை எழுத வைக்கவும், அதே எழுத்தின் லயிப்பில் நாட்கள் மறந்து கிடக்க வைக்கவும் வானுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளாலும் முடியும். அப்படி கிடைக்கும் சரியான பொருள் ஒன்று, ஒரு கவிஞனுக்குள் இருக்கும் பொறியைக் கிளறி விடுமாயின், அவனுள்ளிருந்து வெளிப்படும் கருத்துகளின் ஆற்றல் அளத்தற்கு அரியது. அப்படிப்பட்ட பொருளை/நபரை மியூஸ் என்பார்கள். மியூஸ்களை நினைக்கும்தோறும் கலைஞர்கள் ஒரு படைப்பையோ, படைப்பின் சிறு பகுதிகளையோ உருவாக்க முடியும். இதுவே மியூஸ்களின் வரையறை.  

அப்படி ஒரு கவிஞனுக்கு, சின்னப் பெண் ஒருத்தி மியூஸாக இருந்து, அவனிடமிருந்து நீண்ட நாட்கள் வெளிவரத் துடித்த சில சரக்குகளை வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு, ஜேக் மல்லிகா டானிஸ் எழுதியுள்ள ‘ஆரா பைபிள் வாசிக்கிறாள்’.

ஒவ்வொரு முறையும் இப்புத்தகம் பற்றி எழுதுவதற்காக நூலை எடுக்கும் போதெல்லாம் எப்படியோ இடறி முழு வாசிப்பில் இறங்கி விடுவேன். இம்முறை அதற்காகவே நினைவிருக்கும் சில வரிகளுடன் புத்தகத்தைப் பிரிக்காமலேயே என் அனுபவத்தை எழுதத் தொடங்குகிறேன்.

கண்ணுக்குத் தெரிந்த உலகப் பொருட்கள் கலைஞனை பாதித்துப் படைப்புகளை உருவாக்குவதைப் போல், கண்ணுக்குப் புலப்படாத கடவுளும், அவர் மேல் சொல்லப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான கதைகளும் கவிஞனுக்கு எண்ணும்போது பரவசத்தைத் தருவதும் இயல்பு. இதுதான் ஆரா பைபிள் வாசிக்கிறாள் என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பின் அடித்தளம். நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நாம் முதன்முறை அணுகும்போது நமக்குள் ஏற்படும் கேள்விகளும் கருத்துகளும் கலந்த கருத்துக்கோவை இது. 

நான் எப்போது கிண்டிலைத் திறந்தாலும் முதலில் எடுத்து சில வரிகளை புரட்டி, என்னை புத்தகம் வாசிக்கும் நிலைக்கு தயார் செய்து கொள்வது இதை வைத்துத்தான். அப்படி என்னை இப்புத்தகம் ஈர்க்கக் காரணங்கள், இதன் மொழி நடை, தான் பேசும் பொருளின்மீது கொண்ட ஆழம், ஒரு கூட்டிலிருந்து விடுபடத் துடிக்கும் எண்ணத்தின் சப்தம், குழந்தைவழி சொல்லியிருக்கும் கற்பனை இன்னும் பலப்பல... 

ஆராதனா என்னும் பெண். அவள் செல்லப்பெயர் ஆரா. நம் உடலைச் சுற்றி இருக்கும் ஆற்றல் வளையமான ஆராவைப்போல் விசித்திரமானவள் இந்த ஆராவும்.  கதை முழுதும் ஆரா செய்யும் சேட்டைகள் பரவசப்படுத்தி, படுத்தி, படுத்தி எடுக்கும். புன்னகைத்துப் புன்னகைத்து நெஞ்சு வயிறெல்லாம் வலிக்குமளவு குட்டிக் குட்டி அதிர்வேட்டுகள் புத்தகத்தில் ஏராளம். 

எனது இதயத்துக்கு நெருக்கமான இந்தப் புத்தகம் கபிரேயல் மரியாளுக்கு தெய்வ ரகசியத்தைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது. கிறிஸ்துவத்தை நான் ரசிக்க 3 பேர்தான் காரணம். ரட்சண்ய யாத்திரிகம் எழுதிய கிருட்டிணப்பிள்ளை (சில பாடல்களையே படித்துள்ளேன்), இயேசு காவியம் எழுதிய கண்ணதாசம் (படித்து இரண்டாவது காவியம்) இவர்களுக்கு அடுத்தபடியாக ஜேக். கிறிஸ்தவம் தொடர்பாக நான் வாசித்தவையும் இவ்வளவே. இதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் ஜேக். 

பைபிள் சொல்லும் கிறிஸ்துவின் கதைகள்/வாழ்க்கை நிகழ்ச்சிகள். இதற்கு இடையில் அழையா விருந்தாளியாக வரும் கேமியோ தோற்றம் கதாநாயகி ஆரா. அவள் கேட்கும்/பேசும்/செய்யும் சுவாரஸ்யமான விஷயங்கள். அவ்வளவுதான் ஆரா பைபிள் வாசிக்கிறாள் கவிதைத் தொகுப்பு. ஆனால், இதை அவ்வளவுதான் என்று முடித்துவிட முடியாது. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஆரா கேட்கும் கேள்விகளும், சொல்லும் விஷயங்களும் கடக்க முடியாத கனமாய் பலமுறை யோசிக்க வைக்கிறது. 

ஒரு கைப்பிடி காண்பிக்கிறேன்- 

பரிசுத்த ஆவி 
ஒரு புறாவாய் 
இயேசுவின் மீது இறங்கியது

கரைக்கு வந்ததும் 
இதையெல்லாம் பார்த்த ஆரா
‘‘அந்தப் பறவை 
எனக்கு வேண்டும்’’ என்றாள் 

இயேசுநாதர் 
‘‘அந்தப் பறவை 
எனக்குள் இருக்கிறது 
நான் இறந்தால்தான் 
வெளியே வரும்’’ என்றார்

‘‘அப்போ நீங்க 
சாகுற வரைக்கும் நான் 
வெயிட் பண்ணனுமா’’ என 
ஆரா திரும்பிக் கொண்டாள் 

இயேசு வேறு வழியின்றி 
சீக்கிரம் பூமியில் 
தன் பணியை முடிப்பதென 
முடிவு செய்தார்

இது ஒரு கவிதையில் வரும் சின்னக் கைப்பிடி உதாரணம்தான். இந்தப் பானைக்கு இவ்வொரு பருக்கை பதம். இப்படிப் பலவற்றைக் காட்டிக்கொண்டே போகலாம். அத்தனை சத்துள்ள சரக்கிருப்பது இக்கவிதைகளின் பலம். ஆனால் நான் அணிந்துரை எழுதவில்லை. அது இந்தப் புத்தகத்திலும் இல்லை. மூவருக்கு நன்றியுடன் புத்தகம் தொடங்கிவிடுகிறது. இந்தக் கவிதைகள் அவ்வப்போது கவிஞரால் அவது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கவிதைகள்தாம். அதை ரசித்த பல்லோர் உளர். அவர்களிடமிருந்து ஒரு உரை வாங்கியிருக்கலாம். 

இத்தொகுப்பின் இன்னொரு பலம், கற்பனையால் கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கும் இரு வேறு காலத்து பிம்பங்கள். கதையில் ஆராவைத் தவிர அனைவரும் வரலாற்று பாத்திரங்கள், ஆரா வடிவேல் காமெடி பார்த்து வளர்ந்த குழந்தை. அவர்கள் வாழ்க்கையோடு இவள் செய்யும் லீலைகள் புத்தகத்தில் காட்டப்படும் காட்சிகளை ஹாலிவுட் தரம் செய்கின்றன. 

என்ன இருந்தாலும், துரத்தி வரும் ஆராவின் ஜெனிலியா குறும்பு மழலை கொஞ்ச நேரத்துக்கு மேல் லேசாகத் திகட்டுகிறது. புத்தகத்தில் ஆங்காங்கு தென்படும் ஒற்றுப்பிழைகள், கடலைப் பொட்டலத்தில் இடறி விழுந்த மண் துகள்கள். கோணங்களை நேசிக்கும் மனங்களுக்கெல்லாம் ஆல் டைம் பேவரைட் ஆகும் ஆற்றல் வாய்ந்தது - ஆரா பைபிள் வாசிக்கிறாள். 

-விவேக்பாரதி
06.06.2021

Comments

Popular Posts