கம்பன் காட்டும் தம்பி பரதன்

 கம்பன் விழா கவியரங்கம்
-சிங்கப்பூர் (இணையவழி)-

முன்னுரை

உண்ட மயக்கம் உருப்படியாய்த் தீராமல் 
கொண்ட உறக்கம் கொஞ்சமும் போதாமல் 
நிட்டைபோல் ஆழ்ந்த நெடும்பகலில் சோம்பலெனும் 
குட்டையிலே ஊறிக் கொழுத்துப் படுத்திருந்தேன்... 
கைபேசி சினுங்கியது... கம்பன் அழைத்திருந்தான்...
பொய்பேச்சு பேசாமல் புகழ்ந்தேன்! இடைமறித்து 
அதிகம் பேச ஆன்லைனில் வாவென்றான் 
பதிகத்தை நிறுத்திப் பட்டென்(று) உள்நுழைந்தேன் 

அண்மையில் எழுதிய அமேசான் நிறுவனரின் 
விண்வெளிப் பயணம் விசேஷம் எனச்சொன்னான்! 
தானும் அதுபோல் தமிழ்ப்பயணம் காட்டுவதாய் 
நானும் உடன்வர நல்லபடி கேட்டுவைத்தான்...
கம்பன் கேட்டபின் காலண்டர் பார்ப்பதுவோ?
வம்பேதும் இன்றி வணங்கிச் சரியென்றேன்!

மஸ்கெட் நகரத்து மாப்பெரிய விண்கலந்தான் 
திட்டமிட்ட நல்ல தினத்தில் வரவேற்க, 
உள்ளமர்ந்தேன் மாலுமியாய் உற்ற பயணத்தில் 
கள்ளமர்ந்த கவிஞன் கம்பனே வந்திருந்தான் 

காவிய வெளியினிலே கம்பன் காட்டியதை 
ஓவியக் காணொளியில் ஓரளவு காட்டுகிறேன் 
வரதன் கதையையவன் வருணித்த அழகிலொளிர் 
பரதன் எனுமொற்றைப் பண்பாற்றைக் காட்டுகிறேன்! 

யார் பரதன்?

நாரணனின் சக்கரம் தம்பியில் தனித்துவம் 
நாயகனின் நாயகனாய் நெஞ்சில்நின்ற அற்புதம் 
வீரமிவன் நற்றிறம் வேந்துமொழி சத்தியம்
விரிகடலாய் நீதிநதி திரண்டதன் மகத்துவம்

அரக்கர் குலத்தை அடக்கப் புவியில்
அவதரிப் பேனென எம்பெருமாள் 
உரைத்த கணத்தில் உடன்பிறப்பாக 
ஊரில் பிறந்த சுதர்சனம் 

சிறக்கப் பிறந்த கதைமாந் தர்க்குள் 
ஜீவன் அரசு சுகமணைத்தும் 
துறக்க நினைத்து முடியா துழைத்துத் 
துடித்துக் கிடந்த அருட்குணம்

பிறந்த பொழுதில் திசையும் வானும் 
பீடுடை வானத்(து) அமரர்களும் 
சிறந்து மகிழப், பூசமும் மீனமும் 
சிலிர்க்கப் பிறந்த மகோன்னதம் 

அறத்தின் உருவம் வசிட்டன் புகழும் 
அருங்குணங்களின் நிதர்சனம் 
மறத்தின் வடிவம் அண்ணன் பக்தி 
மாறா திருந்த தனித்தவம்!

யார் பரதன்?

நாரணனின் சக்கரம் தம்பியில் தனித்துவம் 
நாயகனின் நாயகனாய் நெஞ்சில்நின்ற அற்புதம்!

பரதனைநான் கம்பன்வழி பயணத்தில் கண்டேன் 
பாட்டின்வழி தரிசனம்தான் தனிவரிசை இல்லை! 
அருகடைய அருகடைய அவனுரு வளர்ச்சி 
அப்பப்பா ஆச்சர்யம் அறத்தின் திரட்சி! 
குருகுலத்தில் நால்வருக்கும் ஒருவிதமே கல்வி 
குடும்பத்தில் நால்வருக்கும் ஒருவிதமே அன்பு 
தெருக்களிலும் நால்வருக்கும் ஒருவிதமே துள்ளல் 
தேருங்கால் இதிலெல்லாம் சமநீதி உண்மை 

ஆனாலோ, பரதனைநாம் தனியாகக் காண 
அமைந்திருக்கும் காரணங்கள் நான்கண்டேன்! சொல்வேன்
வானாலே வேள்வியதன் அருளாலே நால்வர் 
வாழ்வுதரப் பிறந்தாலும் தயரதனுக் கென்றும் 
தேனான(து) இராமந்தான் அவன்மட்டும் அல்ல 
தேசத்தார் யாவர்க்கும் ராமன்தான் செல்வம் 
மானான ராமனுக்கு யார்செல்வம்? தம்பி 
மார்களிலே பரதன்தான் அவனேசொல் கின்றான்! 

பரதன் நலம்

பரதன்நலம் எத்தனைபேர் விழைந்தார் பாருங்கள்...
பாராள சூழ்ச்சிசெய்த பாசமிகும் அன்னை 
பிரியமுடைக் கலகத்தாய் கிழவியந்த கூனி 
பின்னவனின் செல்வத்தைத் தனதென்ற அண்ணன் 
தருமத்தால் ராமனிடம் அவனைவிட நல்லன் 
தம்பியென அகமகிழ்ந்த கோசலையாம் அன்னை! 
மருமத்தான் போரினிலே கலகஞ்செய் நேரம் 
மரநிழல்போல் வளந்தவிலக் குவனாமோர் தம்பி 

பரதன் சினம்

பரதன்சினம்! எத்தனைபேர் பயந்தார் பாருங்கள்...
பாட்டனவன் நாடுவிட்டு கோசலம்நு ழைந்தான் 
அரியணையை அண்ணனலங் கரிப்பதுவாய்க் கேள்வி 
ஆனாலோ நாட்டுமக்கள் வாட்டமக்கள் ஆனார் 
முரசொலிகள் மழுங்கினவாய் சங்கொலியி றங்கி 
மூண்டிருக்கும் கொடியின்றி நாடிருந்த கோலம் 
பரதனுளில் கேள்வியெனும் தீக்கொண்டு தீண்ட 
பதற்றத்தில் தந்தைமுகம் காணத்தான் கேட்டான் 

அவர்மாண்டார் எனும்செய்தி அன்னையவள் சொல்லி 
அடுத்தடுத்து ராமன்வனம் சென்றகதை சொல்ல 
செவிகளிலே இடிமேலும் இடிவந்து பாய
செத்தாரா? போனாரா? கேட்டாயா? என்று 
தவிக்கின்றான் அழுகின்றான் சினக்கின்றான் நின்று 
தாயவளை வெறிக்கின்றான் தீயுமிழும் கண்ணால் 
புவியிலுள மலைகளுடன் கடல்களுமே அஞ்ச 
புயலாக பலவசைகள் பேசிவிட்டான் தாயை! 

பரதன் மனம்

பரதனவன் மனநிலையை எண்ணிப்பா ருங்கள் 
பக்திசெய இறையண்ணன், மாண்டஉயிர்த் தந்தை  
வரம்வாங்கி நன்மைசெய்து பழிசுமந்த அன்னை 
வாழ்வினிலே மரவுரியோ டரியணையில் காவல் 
திருமணமும் அவன்பார்த்துக் காதலித்த தில்லை 
திசையெல்லாம் தூற்றிடுமோ எனவஞ்சும் வாழ்க்கை 
அரைமனதாய் அரசாங்கம் குற்றமுள்ள நெஞ்சம் 
அவரசத்தில் தற்கொலைக்கும் முயன்ற,அவன் பாவம்!

மாண்டவியை மண்டபத்தில் அவன்பார்க்க தில்லை 
மாமுனிவன் தனிப்பாடம் அவன்கேட்க தில்லை 
வேண்டியதோர் துறவுகூட வாய்த்திடத்தான் இல்லை 
வெற்றியென எதையுமவன் செவிகேட்ட தில்லை 
நீண்டபுகழ் நெடியகதை அப்போதும் கூட 
நிறையவிடம் நிறையமொழி அவன்பேச வில்லை 
கூண்டுக்குள் வெள்ளைப்பு றாபரதன்! இங்கு 
கூறுகையில் நெஞ்சங்கள் இரங்குவதே சாட்சி!

பரதன் குணம்

பரதன்குணம் யார்க்கிங்கே வாய்க்கும்கூ றுங்கள் 
பாராளத் தனக்காக நடந்ததொரு சூழ்ச்சி 
பரதனதை உதறிப்போய் மூத்தவர்முன் தம்பி 
பாராள்தல் முறைதானோ என்றும்,பின் ராமன் 
அரசாள வந்தால்நான் அவனோடி ருப்பேன் 
அல்லால்நான் கானகத்தில் வாழ்வேனின் னோர்சொல் 
உரைத்தால்நான் மாள்வேனென் றுரைத்தானே! அம்மா 
உண்மையிலே இப்படியோர் மனமின்றும் உண்டோ?

அண்ணன்தான் நாடாள நினைத்ததுவும் தம்பி 
அவனுக்கே எதிராக போர்செய்து செய்து 
அண்டைநாட் டான்துணையைத் தான்நாடி நின்று
அவனிடத்தில் எல்லாமும் பலியாகத் தந்த 
பண்டையதோர் கதையுண்டே... இன்றுமிவ் வூரில் 
பார்த்திடலாம் இதுபோல அரசாங்க மோதல் 
எண்ணுங்கால் பரதன்புகழ் யார்க்கிங்கு வாய்க்கும் 
எடுத்துவிடும் கம்பன்மொழி சொல்வேன் கேளுங்கள்

பரதன் பணி

பரதன்செய் பணிகளென்ன நினைத்துப் பாருங்கள் 
        பரம்பொருளாய் அண்ணனையே வணங்கிடுதல், தம்பி 
கரமிணைந்து ரதமேறிச் சுற்றிவிளை யாடல் 
        காகுத்தன் அரசுபெறும் செய்தியினைக் கேட்டு 
பரவசத்தில் ஆர்த்தெழுதல், நாடுவரும் போது 
        பார்த்தவைகள் வேறாக, உயிரையம் கொள்ளல் 
வரத்தால்தான் என்றறிய சினங்கொண்டு சாடல் 
        வாழ்க்கையினி வாழ்வதெவண் எனநரகம் வேண்டல் 

அறவாடை முன்னோர்கள் சபைதனிலே முந்தி 
        அண்ணனுக்கே அரசுரிமை எனப்பேசல், பின்னர் 
துறவாடை தானேற்று சேனைகளும் தானும் 
        தொடர்கான கம்செல்லல், கங்கைக்குகன் கண்ணில் 
மறவாடை போர்த்துவரும் பகைத்தோற்றம் கொள்ளல் 
        மற்றவனே உணர்ந்ததன்பின் அண்ணன்பதம் சேர்தல் 
பிறவழிகள் ஏதுமின்றி ராமன்செருப் பேற்று 
        பிறவிக்குப் பணியென்றே அரியணையிற் சேர்த்தல் 

அடுத்துள்ள நாளெல்லாம் அண்ணன்வர வெண்ணி 
        அமைந்துள்ள வாழ்வெல்லாம் அவன்வரவுக் கேங்கி 
கொடுத்துள்ள பாதுகைக்கே சேவகங்கள் பண்ணி 
        கொண்டாட்டம் ஏதுமின்றி நாள்யுகமாய்ப் போக்கி 
விடுத்துள்ள பழிக்கஞ்சி மனம்கூனிக் கூனி 
        விரக்தியிலே ஒருநொடியில் நெருப்பில்விழ ஏகி 
நடிக்கின்ற நாயகர்க்கே நாயகனாய் மாறி 
        நன்முடிவில் வெண்குடையை ஏந்தியது பாரீர்! 

 பரதன் புகழ்

பரதன்புகழ் எத்தனைபேர் விதந்தார் பாருங்கள் 
பழிதாங்கிச் சூளுரைகள் அவன்செய்த போது 
வரதனேயக் காடுவிட்டு வந்ததுவாய் எண்ணி 
வாழ்த்துடனே மெய்யணைத்தாள் கோசலை!பின் நாளில் 
பரதனுயிர் மாய்த்துவிட முயன்றவொரு நேரம் 
பாய்ந்தவனைத் தடுத்த,அங்கு ராமனொரு கோடி 
ஒருங்கிணைந்தால் நின்னருளுக்(கு) அருகாவா ரோவென்(று) 
ஒருநெடிய புகழுதிர்த்தாள்! ராமனைப் பயந்தாள் 

கங்கைநதிக் கரைவேடன் பரதன்வரப் பார்த்தான் 
காண்பரிய சேனையுடன் அவன்சேரச் சீறி 
இங்கிவரை தடுத்திடுவேன் தோழமைக்காய் என்று 
இதயத்து மொழிபேசி, பின்பரதன் எண்ணம் 
துங்கமுறக் கேட்டவனாய் பரதனைமுன் நோக்கி 
தூயவன்நீ ஆயிரம்ரா மர்க்கிணையே என்றான் 
அங்கதனைச் சொன்னகுகன் ராமபிரான் பக்தன் 
ஆயிரமாம் கோடிகளாம் பரதனின்வ ளர்ச்சி! 

முடிப்பு

விண்வெளியின் பயணம்போல் விரிவிரிவாய் கம்பன்செய் 
பண்வெளியின் பயணத்தில் பரதாழ்வான் தரிசனம்தான்!
ஓரளவு நான்சொன்னேன் உள்ளதெலாம் காவியத்தில் 
பேரறிவு கொண்டவர்முன் பேராசை... பேசிவிட்டேன்! 
நிறைவாக ஒன்றுரைப்பேன் நீள்புவியே பரதனைப்போல் 
இறைவாழ ஆசைகொண்டான்! இனுமென்ன தயக்கமதோ?? 

-விவேக்பாரதி 
06.08.2021

Comments

Popular Posts