இறைவா எங்கே தேடுகிறாய்?


உன்றன் அடியில் ஓரணுவாய், 
உயிரில் ஒளிரும் தீப்பொறியாய், 
கன்றைப் போல உனைச்சுற்றிக்
கனிந்து கிடக்கும் அன்புளமாய், 
என்னைப் படைத்த என்னிறைவா 
எனக்குள் நீயே இருந்துகொண்டு 
என்ன கூத்து செய்கின்றாய்?
என்னை எங்கே தேடுகிறாய்?

வானுக்குள்ளே முகில்வைத்தாய்,  
முகில்களுக்குள் மழைவைத்தாய்,  
ஆன மழைக்குள் உயிர்வளரும் 
ஆற்றல் மூலம் அதைவைத்தாய்,  
மோன விதைக்குள் மரம்வைத்தாய், 
மரத்தில் இன்னோர் விதைவைத்தாய், 
ஏனோ என்முன் இவைவைத்தும் 
என்னை எங்கே தேடுகிறாய்? 

எங்கும் வியாபித்திருப்பாயே 
என்னுள் கூடப் படர்ந்தாயே 
தங்கும் புவியில் நொடிநொடிக்கு
தளரா வேலை செய்வாயே! 
சிங்கக் கூட்டில் மான்மறையும் 
தந்திரம்போல் உன்னடியை 
இங்கே பற்றிக் கொண்டுள்ளேன் 
என்னை எங்கே தேடுகிறாய்? 

உண்மையிலேயா தேடுகிறாய் 
ஊருக்காக நடிப்பாயா? 
அண்மை இருந்தும் பாராமல் 
அகன்று போயேன் தேடுகிறாய்?
கண் இமைத்தால் தெரிகின்ற 
காலின் நினைப்பே கொண்டுள்ளேன் 
ஏலும் எனைநீ அறிவாய்பின் 
என்னை எங்கே தேடுகிறாய்?

தேடத் தேடத் தொலைகின்றேன் 
தேம்பித் தேம்பி அழுகின்றேன் 
ஓட ஓட பார்க்கின்றேன் 
உன்றன் பார்வை படுமிடத்தை 
நாடிப் பிடிக்க நினைக்கிறேன் 
நானாய் என்ன செய்தாலும் 
சாடிச் சொடுக்கும் சாட்டையுன் 
ஜாலம் இன்றி நானேது?? 

விவேக்பாரதி
22 செப்டம்பர் 21

Comments

Popular Posts