Posts

Showing posts from October, 2021

நானும் உனதே

Image
சுவாமி விவேகானந்தரின் “கடவுளுக்கான தேடல்” என்ற ஆங்கிலக் கவிதையை ஒரு கட்டுரைக்காக தமிழில் மொழி பெயர்க்க நேர்ந்தது... அதுதான் இது!  மூலக்கவிதை -  Quest For God by Swami Vivekananda - Quest For God Poem (poemhunter.com) குன்றில் வெளியில் மலையின் தொடரில் கோயில் ஆலயம் மசூதியில் , குர் - ஆன் பைபிள் வேத வரிகளில் குறியாய் உன்னைத் தேடிநின்றேன் ! என்றோ காட்டில் தொலைந்த கன்றாய் ஏக்கத் தோடே நானழுதேன் ! எங்கே சென்றாய் ? என்றேன் அன்பே ! எதிரொலி ‘ சென்றேன் ‘ என்றிடவே !   ஆண்டுகள் நாட்கள் இரவுகள் கழிய அறிவில் சிறுபொறி கனன்றது ! அல்லும் பகலும் நிறம் மாறுகையில் இதயம் இரண்டாய்ப் பிளந்தது ! தாண்டும் காலம் வானிலை திறந்து தண்ணீர்க் கங்கைக் கரைநின்றேன் தூசின் நடுவே எரியும் கண்ணீர்  நீர் ஓசையுடன் நானழுதேன் !   ‘ கருணையின் பக்கம் எனக்குக் காட்டுக கதியடைந் தோரின் வழியில் ‘ என கடவுள் பெயர்கள் சொல்லித் துதித்தேன்  காலச் சாத்திரம் கடைபிடித்தேன் ! உருகிய நீருடன் ஆண்டுகள் கரைய ஒவ்வொரு கணமும் யுகமாக , உறுதுயர் நடுவில் என்றனை ஆஹா  உயர அழைத்தது குரலொன்று  இதமாய் எழுந்த அந்

உருகும் நிலவு

Image
இன்ஸ்டாவில் இந்தப் படத்தைக் கண்டதும் இதயம் சொன்னது -  கலைந்திருக்கும் கூந்தல் என்னைக் கலைக்கப் பார்க்குதடி  கண்ணுக்குள்ளே இருக்கும் காந்தம் என்னை அழுத்துதடி  சிலைநீ என்றே நினைத்துத் தீண்டக் கைகள் துடிக்குதடி  சீக்கிரமாக போனாயே என இளமை படுத்துதடி  விரலின் நகங்கள் முத்துப் பறல்கள் முதுகில் அரிக்குதடி  விளையாடித்தான் பார்க்கக் காலம் விம்மி அழைக்குதடி இரவெல்லாம் உன் நினைவில் நிலவு உருகி வழியுதடி  இருக்கும் மேகம் அதிலே வழுக்கி தரையில் விழுகுதடி!! விவேக்பாரதி 24-10-2021

வாழ்க்கை இதுதானோ?

Image
ஆழ்நினைவில் இருட்குழியில் துளியாய் விழுந்தோம்,    அறிவுவர உருவம்வர மெதுவாய் வளர்ந்தோம், வீழ்கையிலே வீல்வீலென் றழுதே விழுந்தோம்,    வீற்றிருந்து நேற்றிருந்த தன்மை மறந்தோம்,   சொந்தங்கள் பந்தங்கள் சூழ்ந்தே வளர்ந்தோம்,    சுறுசுறுப்பு சேர்கையிலே அச்சம் துறந்தோம் சிந்தனைகள் மெருகேறத் தானாய்ப் பயின்றோம்,    சிலபலவாய் உணர்வலைகள் நீந்திக் கடந்தோம், வந்தவையும் சென்றவையும் எல்லாம் அறிந்தோம்,    வாசலுக்கு வாசல்வரும் மாற்றந் தெளிந்தோம், எந்தவித பேதமுமே இல்லாது ழைத்தோம்,    எப்படியோ ஒருபொழுதில் அயர்வைப் பிடித்தோம்,   இடையில்வரும் எதனோடோ நம்மை இணைத்தோம்,    அதுநாம்தான் நாமதுதான் என்றே நிறைத்தோம், உடைமையெனும் ஒன்றிற்காய் ஓடிக் களைத்தோம்,    ஒருவயதில் அமைத்திக்காய் எல்லாம் முடித்தோம், நடைமுடிந்து நிற்கின்ற நேரம் நெருங்க     நல்லபொழு தாயமைய நாமும் நினைக்க எடைதீரும் மேகம்போல் வாழத் துடிப்போம்    இதுதானே வாழ்வென்னும் பாடம் படிப்போம்!! -விவேக்பாரதி  17-05-2019 

ஆறும் கடலும் ராமனும்

Image
ஷோபனா ரவி முகநூலில் பதிவிட்டிருந்த கவிதை ஒன்று, என்னை சரயு நதிக்கரையில் கொண்டு நிறுத்தியது... பாருங்கள்!  ஆழ்ந்த மௌனத்திலே - தனியோர்  ஆற்றங் கரைநிழலில்  வாழ்ந்திருந்தேன் ராமா - கண்முன்னே  வண்ணப் படகுதந்தாய்  ஏற்றிவிட்டாய் ராமா - நீயே  ஏறித் துடுப்புமிட்டாய்  மாற்றுரை ஏதுமின்றி - நதியின்  மடியில் தவழ்ந்துசென்றோம்  பிறவிக் கடல்பெரிது - அதிலே  பிழைக்கும் வழியரிது  அறிவித்தனை ராமா - நானும்  ஆம்மட்டும் போட்டுநின்றேன் ஆறு கடல்நெருங்க - நதியின்  ஆற்றல் பெருகிவிட  ஆறுதல் சொல்லிவைத்தாய் - பிறகு  அருகிலுனைக் காணோம்  கடலை அடைந்துவிட்டேன் - அடடா  கைகளில் என்துடுப்பு உடலை உளமியக்கும் - அதுபோல்  ஊமை அலையியக்க  நாட்கணக்காய் கடலில் - உன்னை  நாடியே செல்லுகிறேன்!  கேட்கிறதா ராமா - எனது  கின்னர நெஞ்சுமொழி? இரவிலெல்லாம் பாடல் - பகலில்  இயல்புடனே தேடல்  உறவில்லெல்லாம் ஊடல் - உனைநான்  ஒருதரம் பார்க்கணுமே  கண்முன் வருவதற்கேன் - நீ  காலம் கடத்துகிறாய்? உண்மை அறியக்கொடு - ராமா  உடைமை எடுத்துக்கொள்ளு படகினை நீயிக்கும் - வரையில்  பயமிலை நெஞ்சினிலே  துடுப்பு கைக்குவர - கணமும்  துடிப்பதேன் பேரரசே  கடலின் அலைகளெல்ல

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்

Image
சந்தவசந்தம் குழுமத்தில் பாரதியாரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி நடத்தப்பட்ட கவியரங்கில் படைத்த கவிதை...  சொல்லக் கொதிக்குதடா - மனம்  சோர்வினில் வீழுதடா - கரம்  கொல்லத் துடிக்குதடா - நெஞ்சில் கோபத்தீ மூளுதடா! சின்னஞ் சிறுவர்களை - ஒரு  சித்திரம் நேருடலை - எழில் மின்மினிப் பூச்சிகளை - ஒளிர்  மின்னலின் கீற்றுகளை பிஞ்சுப் பசுமைகளை - மண்ணில்  பிறை மதியங்களை - இறை  கொஞ்சும் மனதுகளை - பயம்  கொள்ளாத கன்றுகளை  காமத்தின் ஆசையினால் - வெறும்  காயத்தின் இச்சையினால் - ஒரு  மாமிசம்போல் சுவைக்கும் - கெட்ட  மனித மிருகங்களை  சொல்லக் கொதிக்குதடா - கரம்  கொல்லத் துடிக்குதடா!  வேலி இடத்திலுளான் - பயிர்  மேயும் கதைபடித்தோம் - தாய்க்குத் தாலி கொடுத்தவனே - மகள்  தன்னைத் தொடுதல்கேட்டோம்  பக்கத் திருப்பவரே - வீட்டுப்  பாவை விளக்கணைக்க - அவள் துக்கத்தில் மூச்சுவிட - எனத்  துயர்களை நேரில்கண்டோம் இத்தகு பாவிகளை - உள்ளில் இரக்கமில்லாதவரை - வெறும்  செத்தைக் குணத்தரவைத் - தினம்  செய்திகளின் வழியே  சொல்லக் கொதிக்குதடா - கரம்  கொல்லத் துடிக்குதடா!  பெண்மையைத் தெய்வமென - தினமும்  பேச்சுகள் பேசுகிறோம் - எனில்  உண்மையில் உள்மன

மறதியின் மகத்துவம்

Image
மறந்து போவதில் இருக்கும்  மகத்துவம் சொல்கிறேன்!  உங்களுக்குள் ஒட்டித் திரியும்  கொஞ்சூண்டு இறைமையை  மனிதத்தைக் கடந்து  ஸ்பரிசிக்க முடியும்!  போன வருடத்தில் இந்த நாளில்  இத்தகைய வார்த்தை சொல்லி  திட்டியவன் எதிரே வந்தாலும்  நம்மை அறியாமல்  புன்னகை தோன்றும்!  பார்க்கும் அனைத்தையும்  புத்தம் புதிதாகவே  பார்க்க முடியும்  இன்று புதிதாய்ப் பிறந்தோம்  என்பதெல்லாம்  இன்னும் அருகில் புலப்படும்!  சில பாடல்கள்,  சில சொற்கள்,  சில இசைகள்,  சில தனிமைகள், சில முகங்களைத் தவிர  வேறெதுவும் உங்களைச்  சலனப்படுத்திவிட முடியாத  ஜென் நிலை கிடைக்கும்...  எத்தனை நிரப்பினாலும்  காற்று கழன்றோடும்  ஓட்டை பலூனைப் போல  கனம் கொள்ளாத மனம்  தட்டையாகவே இருக்கும்! கர்வம்,  ஒரு சிட்டிகையும் ஏறாது!  அகிம்சை  உயிரின் இயல்பாகிவிடும்! சதா அலையடிக்கும் மனசு சில நேரங்களில்  உள்ளிழுத்துக் கொண்ட கடலாய்  ஊமையாகும்!  தத்துவம் அறிந்தும்  அதனைச் சாதனை என்று எண்ணாத  சாதாரண ஞானியாய்,  அத்தனை உணர்ச்சியையும்  புதிதாய்த் தரிசிக்கும் குழந்தையாய்,  நடித்தலை உடல் மேல்  பூசிக் கொள்ள தேவையற்ற  ரகசிய பார்வையாளாய், வாழும் கணங்களை  வசந்தத்தோடு ப

அவன் கோப்பையின் குரல்

Image
நேற்று கவியரசர் கண்ணதாசனின் நினைவு தினத்தையொட்டி நண்பர்கள் ஒரு படத்தை வரைந்து பதிவிட்டிருந்தனர். கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடிய கவியரசரை நினைந்து, கோப்பைக்குள் அவர்கள் இட்டிருந்த ஐஸ் கட்டிகள், எனக்குப் பிறர் காயம் தணிக்க ஒத்தனம் கொடுக்கும் மருந்தாகவும் காட்சி அளித்ததாக அவர்களிடம் குறிப்பிட்டேன். பின்னர் சில நொடிகளில் பிறந்தது, இந்தக் கோப்பையில் இரங்கற்பா...  கொஞ்சம் கொஞ்சம் என்னைத் தொட்டுக்  கொஞ்சிய கோமகனே - உன்  கோபம் எல்லாம் என்னில் கரைத்துக்  குழந்தை ஆனவனே  அஞ்சேல் என்ற கிருஷ்ணன் காட்சி  என்னில் கண்டவனே - உடன்  அஞ்சுகக் கைகள் பஞ்சனை எல்லாம்  அளந்து கொண்டவனே! அரசியல் மேடை உரசல்களில் நீ  அமைதி இழக்கையிலே - எனை  ஆரத் தழுவி ஈரக் கனவில்  அமிர்தம் உண்டவனே விரசமும் தெய்வ விஷயமும் பாடி  விதைகள் செய்தவனே - உன்  விரலில் பேனா, அடுத்தது என்னை  விதந்தெ டுத்தவனே  என்னைப் பாடிய உன்னைக் கொஞ்சம்  எண்ணிப் பாடுகிறேன் - நீ  என்னில் கரைந்த நொடிகள் எண்ணி  ஏக்கம் சூடுகிறேன்  மின்னல் என்னில் கண்டாய் அப்பா  மீண்டும் அதைபோலே - யார்  மீட்ட வருவார் கோப்பை நான்தான் வீணை ஆகின்றேன் கோப்பை பெற்ற கவிஞர் பல

கனவில் உதிர்ந்தது

Image
கனவில் யாரிடமோ நான் சொன்ன கவிதை ஒன்றை கூடிய மட்டும் நகலெடுத்துள்ளேன்... புதியநடை புதியமொழி புதிய சிந்தை  புதுப்பாடல் நாள்தோறும் கிடைக்க வேண்டும்  மதியலொரு புதுமின்னல் நாளும் வந்து  மனதிலுள்ள இருளெல்லாம் விலக்க வேண்டும்  எதினிலினிமை எனத்தேடும் எண்ணம் அற்று  எதுபுதுமை எனநானும் தேட வேண்டும்  இதையுன்றன் சன்னிதியின் வரமாய்க் கேட்பேன்  இறைவாநீ மனம்குளிர்ந்து வழங்கு வாயே   பழமையிலே வேரூன்றி புதுமை காணும்  பக்குவத்தை நீகொடுத்தால், பூமி வாழ  மழைதருமோர் பயனெனவே வாழ்வேன் அன்றி  மண்ணுக்கு நான்பாரம் ஆக மாட்டேன்  எழுதுகிற பொழுதினிலென் அகத்துக் குள்ளே  ஏகாந்தமாய் உண்மை நிலைக்க வேண்டும்  முழுதுமெனைப் பிழிந்தாலும் மீண்டும் மீண்டும்  முதுகெலும்பை நானிமிர்த்தும் வலிமை வேண்டும் ஓடச் சலிக்காத கால்கள் வேண்டும்  ஒதுங்குதற்கு அன்பர்கள் நீழல் வேண்டும்  தேடித் தவிக்காத பாதை வேண்டும்  தெளிவாக என் தேடல் நிகழ வேண்டும்  பாடிக் களிக்கின்ற நாட்கள் வேண்டும்  பயம்வேண்டும் கூடவே துணிவும் வேண்டும்  வாடிக் கழல்சேர்ந்து வீழும் போது  வள்ளல் கரங்களெனை அணைக்க வேண்டும்!!  -விவேக்பாரதி 16-10-2021

7. ஞானம் முளைத்தால் | நவராத்திரி 2021

Image
இரு தினங்களாய் உடல் நோவு. சாதாரண சளிபோல் தெரிந்தாலும் போகப்போக புரிந்தது விஸ்டம் டீத் என்னும் கடவாய்ப் பல் முளைப்பது... அதன் வலி பொறுக்க மாட்டாமல் இன்று வந்த கவிதை... உள்ளே ஞானம் வளர வளர  உணரும் வலி அதிகம்  ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக  உதிரும் பயம் அதிகம்  தள்ளாடிடுமோர் மயக்கம் தோன்றத்  தாக்கும் சுமை வளரும்  தாக்கித் தாக்கிக் கடைசியில் முழுதும்  தளர்த்தும் வகை பெருகும்  இதனிடை என்னைக் காப்பாற்றிடவே  ஈஸ்வரி முன் வருக  ஈஸ்வர பாகம் இருந்தது போதும்  இறையோ டெதிர்வருக  நானா எதுவா நிச்சயம் அறியா  நாடகம் குழப்பிவிடும்  நடுங்கி நடுங்கிப் பிறக்கும் இசையில்  நாவொரு பாட்டுதரும்  வானே மனதில் இறங்கியதைப்போல்  வலுவாய் விசையிழுக்கும்  வாங்கிக் கொள்ளும் தேகம்  உடனே  வழியில் கால் வழுக்கும்  இதனிடை என்னைக் காப்பாற்றிடவே  ஈஸ்வரி முன்வருக  ஈஸ்வர பாகம் இருந்தது போதும்  இறையோ டெதிர் வருக  புதுப்புது இடிகள் புயல்பல மின்னல்  புஜங்களில் நடனமிடும்  புல்லன் உடம்பில் பூகோளங்கள்  புரளத் திரண்டுவரும்  அதுபொய் என்றும் இதுபொய் என்றும்  அறியும் தருணம் வரும் அப்போதெல்லாம் இதயக்கூட்டில்  அணுக்கள் துண்டுபடும்  இதனிடை என்னைக

5. கனவு நனவு | நவராத்திரி 2021

Image
- ஒலி வடிவில் கேட்க படத்தத்தைத் தொடவும்-  இன்று மாலை மயிலாப்பூரில் இசைக்கவி ரமணன் ஐயா உரையாற்றிய  ‘மாதம்தோறும் மகாகவி’ நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். இது கொரோனா ஊரடங்குக்குப் பின் கலந்துகொள்ளும் முதல் நேரடி நிகழ்ச்சி. நான் சென்ற நேரமோ என்னவோ, பாரதியை எழுத வைத்தது எது என்பதுதான் உரையின் தலைப்பாக இருந்தது. உரை நடந்த ஒரு மணி நேரம் 4 நிமிடங்களையும் உள்ளத்துக்குள் பொத்திப் பொத்தி ரசித்தேன். என்னைக் கண்ட மகிழ்ச்சியில் உரையின் நடுவே ஐயாவும் இரண்டு மூன்றுமுறை என்னைக் குறிப்பிட்டார். அதில் ஒருமுறை “கனவுக்கும் நனவுக்கும் நடுவினிலே ஒரு கள்ளத் தாழ்வாரம்” என்றொரு வரியை அப்படியே உதிர்த்துவிட்டு, மீதத்தை விவேக்பாரதி நிரப்புவான் என்று சொல்லிவைத்தார்.  நவராத்திரிக்கு பராசக்தி வெவ்வேறு வடிவங்களில் எனக்கு முதல் சொல் கொடுத்துக்கொண்டே இருப்பாள். இன்று இசைக்கவி வாயால் அவள் சொன்னதும் உள்ளே ஆலை வேலையைத் தொடங்கிற்று. வேலையெல்லாம் முடித்து கணினியைத் தொட்டதும் விரிந்திருக்கது இதோ-  கனவுக்கும் நனவுக்கும் நடுவினிலே ஒரு  கள்ளத் தாழ்வாரம் - அது காளியை நேரினில் கண்டு ரசித்திடும்  கவிதைக்(கு) ஆதாரம்!  மனமொரு படகென அத

4. தாயம்மா நீயம்மா | நவராத்திரி 2021

Image
கருணை என்னும் விழிகொண்டாய்  காக்கும் இரண்டு கரங்கொண்டாய்  அருளை வழங்கும் உளம்கொண்டாய்  அதட்டும் செல்ல சினம்கொண்டாய்  தருமம் செய்யத் தினமூக்கி  தமிழில் பாடல் உருவாக்கிப்  பருகிச் சிரிக்கும் தாயம்மா  பாட்டும் கூத்தும் நீயம்மா!  உன்னை நினைக்கும் இரவெல்லாம்  உள்ளத் துக்குள் மின்னல்கள்  உன்னைத் துதிக்கும் பொழுதெல்லாம்  உற்சா கத்தின் வரவேற்பு  உன்னை மறந்தால் அதற்குப்பின்  ஊமை வாழ வழியுண்டோ  உன்னை விழைந்தேன் தாயம்மா  உயிரின் சுருதி நீயம்மா!  அழைக்கா நேரம் வருகின்றாய்  அருளைப் பொழிவாய்த் தருகின்றாய்  விழைந்தால் ஏனோ விளையாட்டாய்  விம்மிக் கதற விடுகின்றாய்  மழைக்கும் உனக்கும் குணமொன்று  மாரி என்ற பெயருண்டு  உழைக்கும் தேனி நானம்மா  உழைப்பெல் லாமே நீயம்மா!  அடித்துச் செல்லும் நினைப்புனது  ஆழ்த்தி அமிழ்த்தும் குணமுனது முடிமீ திருந்தோர் நொடியினிலே  முழுதாய்க் கவிழும் வடிவுனது  துடிக்கும் உயிர்கள் யாவினுக்கும்  துணையாய் வாழும் நதியாகி  நடித்துப் பழகும் தாயம்மா  நலமும் வரமும் நீயம்மா!  நீதான் முன்னே வரவேண்டும்  நீளும் கனவைச் சுடவேண்டும்  நீதான் உன்றன் திருக்கரத்தால்  நினைவில் தண்மை தரவேண்டும் தீதான் ந

3. வெளக்கு வெச்ச நேரத்துல | நவராத்திரி 2021

Image
வெளக்கு வெச்ச நேரத்துல வீடு வந்தாடா - மாரி  வெடலப்பொன்னு ரூபத்துல நேரில் வந்தாடா  கெழக்குச் செவப்புக் குங்குமத்த பூசி வந்தாடா - எங்க கெழவி கொடுக்கும் சுண்டல் பயறு கொறிக்க வந்தாடா  தேவிங்கல்லாம் சுத்தி வர நடுவில் வந்தாடா - தங்கத்  தேர்போல பாவாட எழைய வந்தாடா  பாவிவீட்டுப் படியிலேறி தாயி வந்தாடா - அய்யோ  பல்லழக என்னசொல்ல சிரிச்சு வந்தாடா  ஜிமிக்கித் தோடு குலுங்க குலுங்க பேசி நின்னாடா - கண்ண  சிமிட்டி சிமிட்டி கொலுப்படிய நோட்டம் விட்டாடா  தமிழிலொரு பாட்டெடுத்துப் பாடி நின்னாடா - சாமி  சத்தியமா அதுக்குபின்ன கொரலு வல்லடா  ரவிக்கத்துணி தாய்கொடுத்தா வாங்கிக் கிட்டாடா - பாட்டி  டப்பா கிப்பா பரிசளிச்சா ஏத்துக்கிட்டாடா  கவிதவரும் என்னப்பார்த்து கண்ணடிச்சாடா - ஆனா  காத்துவந்த வாயப்பாத்து பல்லிளிச்சாடா  வாசல்வர விட்டுவர போயி நின்னேண்டா - அந்த  மாரியம்மா பக்கத்துல வந்து நின்னாடா  ஆசையெல்லாம் பாட்டுவழி கேட்க சொன்னாடா - அம்மா  ஆசீர்வதி போதுமுன்னு தலைகுணிஞ்சேண்டா  நெனைப்பிருக்கும் வரையிலிந்த ஒறவுமிருக்கும் - நீ  நெனச்சதெல்லாம் நடக்குமுன்னு கைப்புடிச்சாடா  கனவில்லடா சத்தியமா கைப்புடிச்சாடா - நா  காத்து

2. அன்னமிடும் கைகள் | நவராத்திரி 2021

Image
அன்னமிடும் கைகளுக்கு வணக்கம் - எனை ஆதரிக்கும் தாள்களுக்கு வணக்கம் உன்னவுன்னத் தெவிட்டாத மயக்கம் - எனக் குள்செலுத்தும் நாமத்துக்கும் வணக்கம் வண்ணவண்ணக் கண்களுக்கு வணக்கம் - இந்த வாழ்வுதந்த அம்பிகைக்கு வணக்கம் பண்விரும்பும் காதுகட்கு வணக்கம் - அண்டம் பாய்ந்தலையும் கூந்தலுக்கும் வணக்கம் அற்பனென நானிருந்தேன் தனித்து - நீ அண்டிவந்தாய் என்னகண்டாய் கணிப்பு? சிற்பியென ஆக்கிவிட்டாய் பிழைப்பு - நீயே சித்திரமாய் உள்நுழைந்தாய் சிறப்பு! கற்பனையும் கலைநயமும் கொடுத்து - நீ கட்டிவிட்ட சிறகுகளாய்க் கணக்கு விற்பனம்செய் வானமென்றாய் எனக்கு - வா விளையாடு பொம்மையுன்றன் பொறுப்பு பூங்கழலில் மலராக விருப்பு - உனைப் புகழ்ந்தபடி வாழ்வதற்கே பிறப்பு தேன்குவளைப் பூநிறத்தில் விழிப்பு - உன் தேகமெங்கும் தீராத கருப்பு மாங்கனியோ மாதுளமோ சிரிப்பு - பேர் வாயுரைத்தால் தேன்பலவின் இனிப்பு தூங்கையிலும் நீதானென் நினைப்பு - அடி தொடருதடி காலகாலப் பிணைப்பு ஓடவிட்டுப் பார்க்கின்றாய் நடிப்பு - உன் ஒய்யாரம் ஆஹாஹா சிலிர்ப்பு தேடவிட்டுத் தருகின்றாய் படிப்பு - அதில் தேறிவரும் ஒவ்வொன்றும் மதிப்பு பாடுவதே என்னுடைய உழைப்பு - அந்தப் பாட்டின