3. வெளக்கு வெச்ச நேரத்துல | நவராத்திரி 2021வெளக்கு வெச்ச நேரத்துல வீடு வந்தாடா - மாரி 
வெடலப்பொன்னு ரூபத்துல நேரில் வந்தாடா 
கெழக்குச் செவப்புக் குங்குமத்த பூசி வந்தாடா - எங்க
கெழவி கொடுக்கும் சுண்டல் பயறு கொறிக்க வந்தாடா 

தேவிங்கல்லாம் சுத்தி வர நடுவில் வந்தாடா - தங்கத் 
தேர்போல பாவாட எழைய வந்தாடா 
பாவிவீட்டுப் படியிலேறி தாயி வந்தாடா - அய்யோ 
பல்லழக என்னசொல்ல சிரிச்சு வந்தாடா 

ஜிமிக்கித் தோடு குலுங்க குலுங்க பேசி நின்னாடா - கண்ண 
சிமிட்டி சிமிட்டி கொலுப்படிய நோட்டம் விட்டாடா 
தமிழிலொரு பாட்டெடுத்துப் பாடி நின்னாடா - சாமி 
சத்தியமா அதுக்குபின்ன கொரலு வல்லடா 

ரவிக்கத்துணி தாய்கொடுத்தா வாங்கிக் கிட்டாடா - பாட்டி 
டப்பா கிப்பா பரிசளிச்சா ஏத்துக்கிட்டாடா 
கவிதவரும் என்னப்பார்த்து கண்ணடிச்சாடா - ஆனா 
காத்துவந்த வாயப்பாத்து பல்லிளிச்சாடா 

வாசல்வர விட்டுவர போயி நின்னேண்டா - அந்த 
மாரியம்மா பக்கத்துல வந்து நின்னாடா 
ஆசையெல்லாம் பாட்டுவழி கேட்க சொன்னாடா - அம்மா 
ஆசீர்வதி போதுமுன்னு தலைகுணிஞ்சேண்டா 

நெனைப்பிருக்கும் வரையிலிந்த ஒறவுமிருக்கும் - நீ 
நெனச்சதெல்லாம் நடக்குமுன்னு கைப்புடிச்சாடா 
கனவில்லடா சத்தியமா கைப்புடிச்சாடா - நா 
காத்து மழ வானமெல்லாம் பார்த்து வந்தேண்டா! 

போய்ட்டுவரேன் தாயியின்னு புறப்புட்ட நேரம் - வானம் 
பொத்துக்கிட்டு ஊத்திச்சுட்டா நல்ல பொன்னேரம் 
ஆட்டிவிட்ட பம்பரமா நாந்திரிஞ்சேண்டா - அங்க 
அம்மா வந்து பொன தெச பார்த்து நின்னேண்டா 

வெளையாட்டு காரிவந்து வீடு புகுந்தா - வந்து 
வெள்ளி பொம்ம போலமர்ந்து பாட்டும் படிச்சா 
தலையாட்டி மத்தவங்க ரசிச்சிருந்தாங்க - நானோ 
சரணமிட்டேன் சரணமிட்டேன் அம்புட்டுதாங்க!!

-விவேக்பாரதி
09-10-2021.

Comments

Popular Posts