4. தாயம்மா நீயம்மா | நவராத்திரி 2021


கருணை என்னும் விழிகொண்டாய் 
காக்கும் இரண்டு கரங்கொண்டாய் 
அருளை வழங்கும் உளம்கொண்டாய் 
அதட்டும் செல்ல சினம்கொண்டாய் 
தருமம் செய்யத் தினமூக்கி 
தமிழில் பாடல் உருவாக்கிப் 
பருகிச் சிரிக்கும் தாயம்மா 
பாட்டும் கூத்தும் நீயம்மா! 

உன்னை நினைக்கும் இரவெல்லாம் 
உள்ளத் துக்குள் மின்னல்கள் 
உன்னைத் துதிக்கும் பொழுதெல்லாம் 
உற்சா கத்தின் வரவேற்பு 
உன்னை மறந்தால் அதற்குப்பின்
 ஊமை வாழ வழியுண்டோ 
உன்னை விழைந்தேன் தாயம்மா 
உயிரின் சுருதி நீயம்மா! 

அழைக்கா நேரம் வருகின்றாய் 
அருளைப் பொழிவாய்த் தருகின்றாய் 
விழைந்தால் ஏனோ விளையாட்டாய் 
விம்மிக் கதற விடுகின்றாய் 
மழைக்கும் உனக்கும் குணமொன்று 
மாரி என்ற பெயருண்டு 
உழைக்கும் தேனி நானம்மா 
உழைப்பெல் லாமே நீயம்மா! 

அடித்துச் செல்லும் நினைப்புனது 
ஆழ்த்தி அமிழ்த்தும் குணமுனது
முடிமீ திருந்தோர் நொடியினிலே 
முழுதாய்க் கவிழும் வடிவுனது 
துடிக்கும் உயிர்கள் யாவினுக்கும் 
துணையாய் வாழும் நதியாகி 
நடித்துப் பழகும் தாயம்மா 
நலமும் வரமும் நீயம்மா! 

நீதான் முன்னே வரவேண்டும் 
நீளும் கனவைச் சுடவேண்டும் 
நீதான் உன்றன் திருக்கரத்தால் 
நினைவில் தண்மை தரவேண்டும்
தீதான் நெஞ்சில் பரவாமல் 
திணறிச் சிறுவன் கதறாமல்
நீதான் அருள்வாய் தாயம்மா 
நிழல்நான் நிஜமோ நீயம்மா! 

காலில் காலச் சக்கரமும்,
கையில் வாழ்க்கைத் தத்துவமும், 
மேலில் உலக உயிர்த்துடிப்பும், 
மேலும், நீரின் சிலுசிலுப்பும் 
மூலம் இயக்கும் சக்திகளும், 
மூன்று பொழுதின் உத்தியெனக் 
கோலம் சுமக்கும் தாயம்மா 
கொஞ்சக் குழந்தை நீயம்மா! 

வாழ்வில் காணும் பெண்ணினத்தின் 
வடிவில் எல்லாம் நீயிருக்க 
தாழ்வில் தோளைத் தொட்டுயர்த்து 
கரத்தில் எல்லாம் நீயிருக்க
ஊழை என்றன் புறம்விட்டே 
உடைத்து நொறுக்க நீயிருக்க 
வாழ்வேன் வாழ்வேன் தாயம்மா 
வாழ்வும் வாக்கும் நீயம்மா!!  

-விவேக்பாரதி 
10-10-2021

Comments

Popular Posts