7. ஞானம் முளைத்தால் | நவராத்திரி 2021
இரு தினங்களாய் உடல் நோவு. சாதாரண சளிபோல் தெரிந்தாலும் போகப்போக புரிந்தது விஸ்டம் டீத் என்னும் கடவாய்ப் பல் முளைப்பது... அதன் வலி பொறுக்க மாட்டாமல் இன்று வந்த கவிதை...

உள்ளே ஞானம் வளர வளர 
உணரும் வலி அதிகம் 
ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக 
உதிரும் பயம் அதிகம் 
தள்ளாடிடுமோர் மயக்கம் தோன்றத் 
தாக்கும் சுமை வளரும் 
தாக்கித் தாக்கிக் கடைசியில் முழுதும் 
தளர்த்தும் வகை பெருகும் 

இதனிடை என்னைக் காப்பாற்றிடவே 
ஈஸ்வரி முன் வருக 
ஈஸ்வர பாகம் இருந்தது போதும் 
இறையோ டெதிர்வருக 

நானா எதுவா நிச்சயம் அறியா 
நாடகம் குழப்பிவிடும் 
நடுங்கி நடுங்கிப் பிறக்கும் இசையில் 
நாவொரு பாட்டுதரும் 
வானே மனதில் இறங்கியதைப்போல் 
வலுவாய் விசையிழுக்கும் 
வாங்கிக் கொள்ளும் தேகம்  உடனே 
வழியில் கால் வழுக்கும் 

இதனிடை என்னைக் காப்பாற்றிடவே 
ஈஸ்வரி முன்வருக 
ஈஸ்வர பாகம் இருந்தது போதும் 
இறையோ டெதிர் வருக 

புதுப்புது இடிகள் புயல்பல மின்னல் 
புஜங்களில் நடனமிடும் 
புல்லன் உடம்பில் பூகோளங்கள் 
புரளத் திரண்டுவரும் 
அதுபொய் என்றும் இதுபொய் என்றும் 
அறியும் தருணம் வரும்
அப்போதெல்லாம் இதயக்கூட்டில் 
அணுக்கள் துண்டுபடும் 

இதனிடை என்னைக் காப்பாற்றிடவே 
ஈஸ்வரி முன்வருக 
ஈஸ்வர பாகம் இருந்தது போதும் 
இறையோ டெதிர் வருக 

ஞானம் என்னும் தேனை உள்ளம் 
நாளும் விரும்பிவிடும் 
ஞானம் நமக்குள் முளைத்தால் பின்னே 
நானே அற்றுவிழும் 
ஏனோ எனக்கிவை எட்டிட நோவை 
எழுதிக் கிழித்துவிட்டாள் 
எதுவும் பேசா அமைதியில் பாட 
என்னை விடுத்துவிட்டாள் 

இதனிடை என்னைக் காப்பாற்றிடவே 
ஈஸ்வரி முன்வருக 
இனியும் அமைதி தாங்கிட மாட்டேன், 
இறையோ டெதிர் வருக!!

-விவேக்பாரதி 
13-10-2021 

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி